14
யூதாவில் அமத்சியாவின் ஆட்சி
இஸ்ரயேலின் அரசன் யோவாகாசின் மகன், யோவாஸ் அரசாண்ட இரண்டாம் வருடத்தில், யூதாவின் அரசன் யோவாஸின் மகன் அமத்சியா யூதாவில் அரசாளத் தொடங்கினான். அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் யொவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள். அமத்சியா யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான். ஆனாலும், தன் தந்தையான தாவீதைப்போல் செய்யவில்லை. எல்லாவற்றிலும் தன் தகப்பனான யோவாஸின் முன்மாதிரியையே பின்பற்றினான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
அரசாட்சி அவனுடைய கையின் கட்டுப்பாட்டிற்குள் உறுதியாக்கப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய அரசனைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றுபோட்டான். ஆனாலும் யெகோவாவின் கட்டளைப்படி மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருந்ததற்கு ஏற்றவாறு கொலைசெய்தவர்களின் மகன்களை அவன் கொல்லவில்லை. மோசேயின் சட்ட புத்தகத்தில், “பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது. ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே கொல்லப்படவேண்டும்”* என்று எழுதப்பட்டிருக்கிறது.
அரசன் அமத்சியாவே உப்புப் பள்ளத்தாக்கில் பத்தாயிரம் ஏதோமியரைத் தோற்கடித்து, தலைநகரான சேலா பட்டணத்தைக் கைப்பற்றி அதன் பெயரையும் யொக்தியேல் என்று மாற்றியவன். இன்று மட்டும் அந்த நகரம் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.
அதன்பின்பு அமத்சியா தூதுவர்களை அனுப்பி, யோவாகாசின் மகனும் யெகூவின் பேரனுமான இஸ்ரயேலின் அரசன் யோவாஸிடம், “வாரும், நாம் யுத்தத்தில் நேருக்குநேர் சந்திப்போம்” என்று சவாலிட்டு ஒரு செய்தியைக் கூறினான்.
அதற்கு இஸ்ரயேல் அரசனான யோவாஸ், யூதாவின் அரசனான அமத்சியாவுக்கு, “லெபனோனிலுள்ள முட்செடி லெபனோனிலுள்ள கேதுருமரத்திடம், ‘உனது மகளை எனது மகனுக்கு திருமணம் செய்துகொடு’ என்று ஒரு செய்தி அனுப்பியது. ஆனால் லெபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அவ்வழியாய் கடந்து போகையில் முட்செடியை காலின்கீழ் மிதித்துவிட்டது. 10 நீ ஏதோமை தோற்கடித்தது உண்மைதான். உன் வெற்றியை நீயே புகழ்ந்துகொண்டு இப்பொழுது பெருமை கொண்டிருக்கிறாய். ஆனாலும் வீட்டிலே இரு! நீ ஏன் கஷ்டத்தை வேண்டுமென்று தேடி உனது வீழ்ச்சிக்கும் யூதாவின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்க வேண்டும்?” என்று பதில் அனுப்பினான்.
11 ஆனால் அமத்சியாவோ அதற்கு செவிகொடுக்கவில்லை. அதனால் இஸ்ரயேல் அரசன் யோவாஸ் எதிர்த்துத் தாக்கினான். அவனும் யூதாவின் அரசன் அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேஷில் நேரடியாக ஒருவரோடொருவர் மோதினர். 12 இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குத் தப்பி ஓடினார்கள். 13 இஸ்ரயேல் அரசன் யோவாஸ், யூதாவின் அரசனான யோவாஸின் மகனும், அகசியாவின் பேரனுமான அமத்சியாவை பெத்ஷிமேஷில் கைதியாக்கினான். அதன்பின் யோவாஸ் எருசலேமுக்குப் போய், எருசலேமின் மதிலை ஏறத்தாழ அறுநூறு அடி தூரத்துக்கு எப்பிராயீம் வாசலிலிருந்து மூலைவாசல்வரை இடித்துப்போட்டான். 14 அரச அரண்மனையின் திரவியக் களஞ்சியத்திலிருந்த யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்றும் எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பினான்.
15 யோவாஸ் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்த செயல்களும், அவனுடைய சாதனைகளும் மற்றும் யூதா அரசன் அமத்சியாவுடன் செய்த யுத்தமும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 16 இதன்பின் யோவாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, இஸ்ரயேலின் அரசர்கள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யெரொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.
17 இஸ்ரயேலின் அரசனான யோவாகாஸின் மகன் யோவாஸ் இறந்தபின்பு, யூதாவின் அரசனான யோவாஸின் மகன் அமத்சியா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். 18 அமத்சியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகள் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன.
19 எருசலேமிலுள்ளவர்கள் அமத்சியாவுக்கு எதிராக சதி செய்தார்கள். அதனால் அவன் லாகீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவனுடைய பகைவர்கள் அவனுக்கு எதிராக மனிதரை அனுப்பி, அங்கேயே வைத்து அவனைக் கொன்றனர். 20 அவனுடைய உடல் குதிரையில் கொண்டுவரப்பட்டு எருசலேமில் தாவீதின் நகரத்திலுள்ள அவனுடைய முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
21 இதன்பின்பு யூதா நாட்டு மக்கள் பதினாறு வயதுள்ளவனாயிருந்த அசரியாவை அவன் தகப்பனான அமத்சியாவின் இடத்தில் அரசனாக்கினார்கள். 22 அமத்சியா தன் முற்பிதாக்களைப்போல இறந்தபின்பு அசரியாவே ஏலாத்தை மீண்டும் கட்டி அதை யூதாவுக்கு திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
இஸ்ரயேலில் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி
23 யூதாவின் அரசன் யோவாஸின் மகன் அமத்சியா அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், சமாரியாவில் யோவாஸ் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலின் அரசனாகப் பதவி ஏற்று நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். 24 இவன் யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள்ளாக்கிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் ஒன்றையாகிலும் விட்டுத் திரும்பவில்லை. 25 இவனே இஸ்ரயேலின் எல்லைகளை ஆமாத்தின் எல்லையிலிருந்து அராபாக் கடல் வரைக்கும் திரும்பப் பெற்றுக் கொடுத்தான். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தம்முடைய அடியவனாகிய இறைவாக்கினன் யோனாவைக் கொண்டு பேசியபடியே இது நடந்தது. இந்த இறைவாக்கினன் யோனா காத் ஏபேரைச் சேர்ந்த அமித்தாயின் மகன்.
26 அடிமையானாலும், சுதந்திரவாளியானாலும் இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கசப்பான துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு உதவியளிக்க எவருமே இல்லை என்பதையும் யெகோவா கண்டார். 27 இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழே முழுவதும் நீக்கிவிடுவதாக யெகோவா சொல்லாதபடியால், யோவாஸின் மகன் யெரொபெயாமின் மூலம் அவர்களைக் காப்பாற்றினார்.
28 யெரொபெயாமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், இராணுவ சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யூதாவுக்குச் சொந்தமான ஆமாத்தையும், தமஸ்குவையும் எப்படி இஸ்ரயேலுக்குத் திரும்பவும் மீட்டுக்கொடுத்தான் என்பதும் அதில் எழுதப்பட்டுள்ளன. 29 இதன்பின்பு யெரொபெயாம் இஸ்ரயேல் அரசர்களான தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுடைய மகனான சகரியா அவனுக்குப்பின் அரசனானான்.
* 14:6 உபா. 24:16