17
இயேசு மறுரூபமாகுதல்
1 ஆறு நாட்களுக்குப்பின், இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தன்னுடன் தனியாய்க் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார்.
2 அங்கே இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். அவருடைய முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவருடைய உடைகள் வெளிச்சத்தைப்போல் வெண்மையாக மாறின.
3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவர்களுக்குமுன் தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
4 பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் நான் மூன்று கூடாரங்களை அமைப்பேன். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்!” என்றான்.
5 பேதுரு இன்னமும் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பிரகாசமுள்ள மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் அன்பு மகன், இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒலித்தது.
6 சீடர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் மிகவும் பயமடைந்து தரையில் முகங்குப்புற விழுந்தார்கள்.
7 ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார்.
8 அவர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும்வரை நீங்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
10 சீடர்கள் அவரிடம், “அப்படியானால், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் முதலில் எலியா வரவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?” எனக் கேட்டார்கள்.
11 இயேசு அதற்குப் பதிலாக, “நிச்சயமாகவே எலியா வந்து எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான்.
12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டான். அவர்கள் அவனை இன்னாரென அறிந்துகொள்ளாமல் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள். அதைப் போலவே, மானிடமகனாகிய நான் அவர்களுடைய கைகளில் துன்பப்படப் போகிறார்” என்று சொன்னார்.
13 அப்பொழுது சீடர்கள், இவர் யோவான் ஸ்நானகனைப் பற்றிப் பேசுகிறார் என விளங்கிக்கொண்டார்கள்.
பிசாசு பிடித்தவன் குணமாக்கப்படுதல்
14 மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு,
15 “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான்.
16 நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான்.
17 “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார்.
18 இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான்.
19 அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
20 இயேசு அதற்குப் பதிலாக, “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கே இருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்லமுடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
21 ஆனால் இவ்விதமான பிசாசு, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியே போகாது” என்றார்.
இயேசு தமது மரணத்தை இரண்டாம்முறை அறிவித்தல்
22 அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்.
23 அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே நான் உயிரோடே எழுப்பப்படுவேன்” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள்.
ஆலய வரி
24 இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள்.
25 “ஆம் செலுத்துவார்!” என அவன் பதிலளித்தான்.
பேதுரு இயேசுவினிடத்தில் வீட்டிற்குள் வந்தபோது, இயேசுவே அதைப்பற்றி முதலாவதாகப் பேசத்தொடங்கினார்: “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார்.
26 “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான்.
அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே?
27 ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு கடலுக்குப்போய் தூண்டிலைப்போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத்திற, அதற்குள் ‘நான்கு திராக்மா’ வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும், உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு!” என்றார்.