14
தாவீதின் வீடும் குடும்பமும்
1 தீருவின் அரசன் ஈராம் தாவீதுக்கு ஒரு அரண்மனையைக் கட்டுவதற்காக தச்சர்களோடும், மேசன்மார்களோடும் தூதுவர்களை அனுப்பினான்; கேதுரு மரங்களும் அனுப்பப்பட்டன.
2 யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதையும், தனது மக்களான இஸ்ரயேலுக்காக தனது ஆட்சியை மிகவும் உயர்த்தி மேன்மைப்படுத்தியுள்ளார் என்பதையும் தாவீது அறிந்துகொண்டான்.
3 எருசலேமிலே தாவீது இன்னும் பல பெண்களைத் திருமணம் செய்து, பல மகன்களுக்கும் மகள்களுக்கும் தகப்பனானான்.
4 எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்மூவா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்,
5 இப்கார், எலிசூவா, எல்பெலேத்,
6 நோகா, நெப்பேக், யப்பியா,
7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பேலேத்.
தாவீது பெலிஸ்தியரை முறியடித்தல்
8 தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அவர்களை எதிர்கொள்ள அங்கே போனான்.
9 அந்நேரத்தில் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே திடீர் தாக்குதல் செய்ய வந்தார்கள்.
10 எனவே தாவீது இறைவனிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” எனக் கேட்டான்.
அதற்கு யெகோவா, “போ, அவர்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன்” எனப் பதிலளித்தார்.
11 எனவே தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாகால் பிராசீமுக்குப் போனார்கள். அங்கே தாவீது அவர்களை முறியடித்து, “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, என் கைகளினால் இறைவன் என் பகைவரை முறிந்தோடப்பண்ணினார்” எனச் சொன்னான். எனவே அந்த இடம், பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது.
12 பெலிஸ்தியர் தங்கள் தெய்வங்களை அங்கே கைவிட்டு ஓடிப்போனார்கள். தாவீது அவற்றை சுட்டெரிக்கக் கட்டளையிட்டான்.
13 பெலிஸ்தியர் மீண்டும் வந்து அப்பள்ளத்தாக்கிலே திடீர் தாக்குதல் செய்தார்கள்.
14 எனவே திரும்பவும் தாவீது இறைவனிடம் விசாரித்து கேட்டபோது இறைவன், “நீ நேரடியாகப் போகாமல் சுற்றிவளைத்து குங்கிலிய மரங்களின் முன்னால் சென்று அவர்களைத் தாக்கு.
15 குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்டதும் நீ யுத்தத்திற்கு புறப்படு. ஏனெனில் இறைவன் உனக்கு முன்பாக பெலிஸ்திய படையைத் தாக்குவதற்காக போயிருக்கிறார் என்பதே அந்தச் சத்தத்தின் விளக்கம்” என்றார்.
16 இறைவன் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவர்கள் பெலிஸ்திய இராணுவத்தை கிபியோன் தொடங்கி கேசேர்வரை வெட்டி வீழ்த்தினார்கள்.
17 அவ்வாறு தாவீதின் புகழ் எல்லா நாடுகளுக்கும் பரவிற்று. யெகோவா எல்லா மக்களையும் தாவீதுக்குப் பயப்படும்படி செய்தார்.