22
1 அப்பொழுது தாவீது, “யெகோவாவாகிய இறைவனின் ஆலயமும், இஸ்ரயேலுக்கான தகன பலிபீடமும் இருக்கவேண்டிய இடம் இதுவே” என்றான்.
ஆலயத்திற்கான ஆயத்தம்
2 பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான்.
3 தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான்.
4 அதோடு தாவீது எண்ணிலடங்கா கேதுரு மரங்களை சேர்த்துவைத்தான். சீதோனியரும், தீரியரும் தாவீதுக்கு இவற்றை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள்.
5 அப்பொழுது தாவீது, “எனது மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமற்றவனுமாய் இருக்கிறான். யெகோவாவுக்காகக் கட்டப்படப்போகும் ஆலயமோ எல்லா நாடுகளின் பார்வையிலும் மிகப் பிரமாண்டமானதாகவும், புகழ் பெற்றதாகவும், மேன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும். எனவே அதற்கான ஆயத்தங்களை நான் செய்வேன்” என்றான். அவ்வாறே தாவீது தான் இறப்பதற்கு முன்பு அதிக அளவான ஆயத்தங்களையெல்லாம் செய்துவைத்திருந்தான்.
6 பின்பு அவன் தன் மகன் சாலொமோனை அழைத்து, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான்.
7 தாவீது சாலொமோனிடம், “என் மகனே, நான் என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன்.
8 ஆனால் யெகோவாவின் இந்த வார்த்தை எனக்கு வந்தது. ‘நீ பல யுத்தங்களைச் செய்து போர்முனையில் அதிகமான இரத்தத்தைச் சிந்தினாய். எனது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல. ஏனெனில் என் பார்வையில் பூமியில் நீ அதிக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறாய்.
9 ஆனால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் சமாதானமும் அமைதியும் உள்ளவனாய் இருப்பான். நான் எல்லா பகுதிகளிலுமுள்ள பகைவர்களிடமிருந்து அவனுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவனுடைய பெயர் சாலொமோன் எனப்படும். அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரயேலுக்கு சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவேன்.
10 அவனே என் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனது மகனாயிருப்பான். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். நான் அவனுடைய ஆட்சியின் சிங்காசனத்தை இஸ்ரயேலுக்கு மேலாக என்றென்றும் நிலைத்திருக்கப் பண்ணுவேன்’ என்று என்னிடம் சொன்னார் என்றான்.
11 “இப்பொழுதும் என் மகனே, யெகோவா உன்னோடு இருப்பாராக. அவர் கூறியதுபோல யெகோவாவாகிய உன் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டுவதில் நீ வெற்றியடைவாயாக.
12 அவர் உன்னை இஸ்ரயேலுக்கு மேலாக ஆளுநனாக நியமிப்பார். அப்போது யெகோவா உனக்கு நீ உன் யெகோவாவாகிய இறைவனின் சட்டங்களைக் கைக்கொள்ளும்படி விவேகத்தையும், அறிவையும் கொடுப்பாராக.
13 யெகோவா மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்களையும், விதிமுறைகளையும் மிகக் கவனமாக கைக்கொள்வாயானால் உனக்கு வெற்றி கிடைக்கும். திடன்கொண்டு தைரியமாயிரு. பயப்படாதே, கலங்காதே.
14 “யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கென நான் ஒரு இலட்சம் தாலந்து நிறையுள்ள தங்கத்தையும், பத்துலட்சம் தாலந்து நிறையுள்ள வெள்ளியையும், ஏராளமான வெண்கலத்தையும், அளவிடமுடியாத இரும்பையும், மரங்களையும், கற்களையும் மிகவும் சிரமத்துடன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன். அத்துடன் நீயும் வேண்டியதைச் சேர்த்துக்கொள்.
15 கல் வெட்டுவதற்கும், மேசன் வேலை செய்வதற்கும், தச்சுவேலை செய்வதற்கும் உன்னிடம் தேர்ச்சிபெற்ற தொழில் வல்லுநர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள்.
16 தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றில் கைவேலை செய்யக்கூடிய கைவினைஞர்கள் எண்ணற்றவர்கள் உன்னிடம் இருக்கிறார்கள். இப்பொழுது நீ வேலையைத் தொடங்கு; யெகோவா உன்னோடு இருப்பாராக” என்றான்.
17 பின்னர் தாவீது தனது மகன் சாலொமோனுக்கு உதவிசெய்யும்படி, இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.
18 அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இல்லையா? அவர் உங்களுக்கு எல்லாப் பக்கங்களிலும் அமைதியைத் தரவில்லையா? நாட்டின் குடிகளை எனது கையில் ஒப்படைத்துள்ளார். நாடு யெகோவாவுக்கும், அவருடைய மக்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறது.
19 உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் இப்பொழுதே அர்ப்பணியுங்கள். இறைவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டத் தொடங்குங்கள். அப்பொழுது யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், இறைவனுக்குச் சொந்தமான பரிசுத்த பொருட்களையும் யெகோவாவினுடைய பெயரில் கட்டப்படப்போகும் ஆலயத்திற்குள் கொண்டுவந்து வைக்கலாம்” என்று சொன்னான்.