7
திருமண வாழ்விலிருந்து உதாரணம்
பிரியமானவர்களே, மோசேயின் சட்டத்தைப் பற்றித் தெரிந்த உங்களுடனேயே நான் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரைக்குமே மோசேயின் சட்டம் அவன்மேல் அதிகாரம் செலுத்துகிறதென்று உங்களுக்குத் தெரியாதா? உதாரணமாக, திருமணமான ஒரு பெண், அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்தால், அவள் அந்தத் திருமணச் சட்டத்திலிருந்து விடுபடுகிறாள். எனவே, தன் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் ஒரு விபசாரி என்றே சொல்லப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்து விட்டால், அவள் சட்டத்திலிருந்து விடுபடுவாள். அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தாலும் அவள் விபசாரியல்ல.
ஆகவே, பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கு மரித்தீர்கள். இப்பொழுது, நீங்கள் மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கே உரியவர்களானீர்கள் இதன்மூலம் நாம் இறைவனுக்குக் கனியை விளைவிக்கிறவர்களாய் இருக்கிறோம். நம்முடைய மனித இயல்பின்படியே நாம் வாழ்ந்தபொழுது, மோசேயின் சட்டத்தினாலே தூண்டிவிடப்பட்ட பாவ ஆசைகள் நம்முடைய உடல்களில் செயலாற்றியது. எனவே நம்மிலிருந்து மரணத்திற்கேதுவான கனி பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நாம் முந்தி நம்மைக் கட்டி வைத்திருந்த மோசேயின் சட்டத்திற்கு மரித்தபடியால், இப்பொழுது அதிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறோம். ஆகவே எழுதப்பட்ட பழைய முறைமையின்படி அவைகளுக்குக் கீழ்ப்படிவதை விட்டு, ஆவியானவரின் புதிய வழியின்படியே நாம் இறைவனுக்கு ஊழியம் செய்கிறோம்.
மோசேயின் சட்டம் பாவத்தை வெளிப்படுத்துகிறது
அப்படியானால் என்ன சொல்லுவோம்? மோசேயின் சட்டம் பாவமுள்ளது என்று சொல்லலாமா? நிச்சயமாக அல்ல, மோசேயின் சட்டம் இல்லாதிருந்தால், பாவம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்திருக்காது. “பிறருக்குரியவற்றில் ஆசைகொள்ளாதே”* என்று மோசேயின் சட்டம் சொல்லியிருக்காவிட்டால், பிறருக்குரியவற்றில் ஆசைகொள்வது பாவம் என்றே நான் அறியாதிருந்திருப்பேன். ஆனால் கட்டளையின் மூலமாகக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, பாவம் எல்லா விதமான ஆசைகளையும் என்னில் தூண்டிவிட்டது. ஏனெனில் மோசேயின் சட்டம் இல்லாமல் பாவம் செத்ததாயிருக்கிறது. முன்பு நான் மோசேயின் சட்டம் இல்லாமல் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் கட்டளை வந்தபொழுது, பாவத்திற்கு உயிர்வந்தது. நானோ செத்தவனானேன். 10 வாழ்வளிப்பதற்காகவே கொடுக்கப்பட்ட கட்டளை, உண்மையில் எனக்கு மரணத்தைக் கொண்டு வந்ததையே நான் கண்டேன். 11 ஏனெனில் பாவம், கட்டளையின் மூலமாகக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, என்னை ஏமாற்றி, கட்டளையின் மூலமாக என்னை மரணத்திற்குட்படுத்தியது. 12 எனவே மோசேயின் சட்டம் பரிசுத்தமானதே. கட்டளையும்கூட பரிசுத்தமானதாகவும், நியாயமானதாகவும், நல்லதாகவுமே இருக்கிறது.
13 அப்படியானால் நன்மையான அந்த மோசேயின் சட்டமே எனக்கு மரணமாயிற்றோ? இல்லவே இல்லை. பாவத்தைப் பாவம் என எடுத்துக்காட்டுவதற்காக இருந்த, நன்மையான மோசேயின் சட்டத்தின் மூலமாகவே, பாவம் எனக்கு மரணத்தீர்ப்பை ஏற்படுத்தியது. எனவே கட்டளையின் மூலமாக பாவம் முழுமையாகவே பாவம் என வெளிப்படுத்துகிறது.
14 மோசேயின் சட்டம் ஆவிக்குரியது என்பதை நாம் அறிவோம்; நானோ மாம்ச இயல்புடையவன், பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன். 15 நான் செய்கிறதையே என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். 16 நான் செய்ய விரும்பாததையே செய்வேனாகில், மோசேயின் சட்டம் நல்லது என்று நான் என் உள்ளத்தில் ஒத்துக்கொள்கிறேன். 17 எனவே, உண்மையில் நான் வெறுக்கிறதையே செய்கிறது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே இதைச் செய்கிறது. 18 என்னில், அதாவது என் மாம்ச இயல்பில், உண்மையாக நன்மை எதுவுமே குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. ஏனெனில், நன்மைசெய்ய வேண்டுமென்ற ஆசை என்னில் இருந்துங்கூட, அதை என்னால் செய்துமுடிக்க இயலாதிருக்கிறதே. 19 நான் செய்ய விரும்புகிற நன்மையை நான் செய்வதில்லை; அதற்குப் பதிலாக, நான் செய்யவிரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கிறேன். 20 நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்தது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே அதைச் செய்கிறது.
21 நான் நன்மைசெய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன். ஆனால் தீமையையே செய்யும் ஒரு சட்டம் என்னில் இயங்குகிறதை நான் காண்கிறேன். 22 என்னுடைய உள்ளான உள்ளத்திலே நான் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியடைகிறேன். 23 ஆனால் என் உடலின் உறுப்புக்களிலோ இன்னொரு சட்டம் இயங்குகிறதைக் காண்கிறேன். அது என் உள்ளத்தில் இயங்கும் சட்டத்திற்கு எதிராகப் போராடி ஈடுபட்டு, என் உடல் உறுப்புகளில் இயங்குகின்ற பாவத்திற்கு என்னை அடிமைப்படுத்துகிறது. 24 நான் பரிதாபகரமான மனிதன்! மரணத்துக்கே என்னை கொண்டுசெல்லுகின்ற இந்த உடலில் இருந்து யார்தான் என்னைத் தப்புவிப்பார்? 25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கிற இறைவனுக்கு நன்றி!
நானோ என் உள்ளத்திலே இறைவனுடைய சட்டத்துக்கு அடிமையாயிருக்கிறேன். ஆனால் என்னுடைய மாம்ச இயல்பிலோ பாவத்திற்கே அடிமையாயிருக்கிறேன்.
* 7:7 யாத். 20:17; உபா. 5:21