11
சவுல் யாபேசை விடுவித்தல்
1 அதன்பின் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து கீலேயாத்திலுள்ள யாபேசை முற்றுகையிட்டான். அப்பொழுது யாபேஸ் மனிதர் அனைவரும் அவனிடம், “நீர் எங்களுடன் ஒரு உடன்படிக்கை செய்யும். அப்பொழுது நாங்கள் உமக்குக் கீழ்ப்பட்டிருப்போம்” என்றார்கள்.
2 அதற்கு அம்மோனியனான நாகாஸ் அவர்களிடம், “உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் தோண்டி, இஸ்ரயேலர் அனைவருக்கும் அவமானத்தைக் கொண்டுவருவேன். உங்களுடன் உடன்படிக்கை செய்வதானால் இதுவே என் நிபந்தனை” என்றான்.
3 அதற்கு யாபேசின் முதியவர்கள் அவனிடம், “நாங்கள் இஸ்ரயேல் நாடெங்கும் தூதுவரை அனுப்பும்படி ஏழு நாட்கள் அவகாசம் கொடும். அதற்குள் எங்களைக் காப்பாற்ற ஒருவரும் வராவிட்டால் நாங்கள் உம்மிடம் சரணடைவோம்” என்றார்கள்.
4 அந்தத் தூதுவர் சவுலின் ஊரான கிபியாவிற்கு வந்து இந்த நிபந்தனையை அங்குள்ள மக்களுக்கு அறிவித்தபோது, அவர்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
5 அப்பொழுதுதான் சவுல் தன் மாடுகளுடன் வயலிலிருந்து வந்துகொண்டிருந்தான். அவன், “மக்களுக்கு நடந்தது என்ன? ஏன் அவர்கள் அழுகிறார்கள்?” என்று கேட்டான். அவர்கள் யாபேசின் தூதுவர் தங்களுக்குக் கொண்டுவந்த செய்தியை சவுலுக்கும் சொன்னார்கள்.
6 அவர்கள் சொன்ன வார்த்தைகளைச் சவுல் கேட்டபோது இறைவனின் ஆவியானவர் வல்லமையுடன் அவன்மேல் இறங்கினார். அவன் கடுங்கோபம் அடைந்தான்.
7 அவன் தன் எருதுகளில் இரண்டைப் பிடித்து, அவற்றைத் துண்டுதுண்டுகளாக வெட்டித் தூதுவரின் கைகளில் கொடுத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அனுப்பினான். அவன் இஸ்ரயேல் நாடெங்கிலும் செய்தி அனுப்பி, “சவுலையும், சாமுயேலையும் பின்பற்றாத மனிதரின் மாடுகளுக்கும் இவ்வாறே செய்யப்படும்” என்று பிரசித்தப்படுத்தினான். மக்களுக்கு யெகோவாவைப்பற்றிய பயமேற்பட்டதால் அவர்கள் ஒருமனப்பட்டவர்களாகப் புறப்பட்டு வந்தார்கள்.
8 சவுல் அவர்களை பேஸேக்கிலே கணக்கிட்டுப் பார்த்தபோது, இஸ்ரயேல் மக்களில் மூன்று இலட்சம்பேரும், யூதா மக்களில் முப்பதாயிரம் பேரும் இருந்தார்கள்.
9 அப்பொழுது அவர்கள் அங்கு வந்த தூதுவரிடம், “நீங்கள் யாபேசின் கீலேயாத் மனிதரிடம், ‘நாளைக்கு வெயில் அகோரமாய் இருக்கும் நேரத்தில் நீங்களும் விடுவிக்கப்படுவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள். தூதுவர் போய் அந்தச் செய்தியை யாபேஸ் மக்களிடம் சொன்னபோது அவர்கள் உற்சாகமடைந்தார்கள்.
10 அப்பொழுது அவர்கள் அம்மோனியரிடம், “நாளைக்கு நாங்கள் உங்களிடம் சரணடைவோம். உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை எங்களுக்குச் செய்யுங்கள்” என்றார்கள்.
11 மறுநாள் சவுல் தன் மனிதர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். இரவின் கடைசிச் சாமவேளையில் அம்மோனியரின் முகாமை உடைத்து உட்புகுந்து, வெயில் ஏறும்வரைக்கும் அவர்களைக் கொன்று குவித்தார்கள். தப்பியவர்களில் இருவராகிலும் ஒருமித்துப் போகாதபடிக்கு அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
சவுல் அரசனாக உறுதிப்படுத்தப்படுதல்
12 அதன்பின் மக்கள் சாமுயேலிடம், “சவுல் எங்களை அரசாள்வதா? என்று கேட்டவர்கள் யார்? அவர்களைக் கொண்டுவாருங்கள்; நாங்கள் அவர்களைக் கொல்வோம்” என்றார்கள்.
13 அதற்குச் சவுலோ, “இன்று யெகோவா இஸ்ரயேல் மக்களை விடுவித்தபடியால், ஒருவரையும் கொலைசெய்யக்கூடாது” என்றான்.
14 அப்பொழுது சாமுயேல் மக்களிடம், “வாருங்கள் கில்காலுக்குப் போய் அங்கே சவுலின் அரசாட்சியை மறுபடியும் உறுதிப்படுத்துவோம்” என்றான்.
15 அப்படியே மக்களனைவரும் கில்காலுக்குப் போய் அங்கே யெகோவாவின் முன்னிலையில் சவுலை அரசனாக உறுதிப்படுத்தினார்கள். அங்கே யெகோவாவுக்குச் சமாதான காணிக்கைகளைப் பலியிட்டு, சவுலும் இஸ்ரயேல் மக்களனைவரும் ஒரு பெரிய விழாக் கொண்டாடினார்கள்.