22
தாவீது அதுல்லாமிலும் மிஸ்பாவிலும் தங்கியிருத்தல்
1 தாவீது காத்திலிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்னும் குகைக்குத் தப்பி ஓடினான். அதை அவனுடைய சகோதரரும், தகப்பன் வீட்டாரும் கேள்விப்பட்டபோது, அவர்களும் அவனிடம் போனார்கள்.
2 மற்றும் துன்பப்பட்டவர்களும், கடன்பட்டவர்களும், மனவிரக்தியடைந்தவர்களும் வந்து அவனைச்சுற்றி ஒன்றுசேர்ந்தார்கள். அவன் அவர்களெல்லாருக்கும் தலைவனானான். ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.
3 தாவீது அங்கிருந்து புறப்பட்டு, மோவாபிலுள்ள மிஸ்பேக்குப் போய் மோவாபின் அரசனிடம், “இறைவன் எனக்காக என்ன செய்யப்போகிறார் என்று நான் அறியும்வரை, என் தகப்பனும் தாயும் வந்து உம்முடன் தங்கியிருக்கும்படி தயவுசெய்து அனுமதி கொடுப்பீரோ?” என்று கேட்டான்.
4 அப்படியே தாவீது அவர்களை மோவாப் அரசனிடம் விட்டான். தாவீது தனது வழக்கமான கோட்டையில் இருக்கும்வரை அவர்கள் அரசனுடன் இருந்தார்கள்.
5 ஆனாலும் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “நீ இங்கே இந்த கோட்டையில் தங்கவேண்டாம். யூதாவுக்குப் புறப்பட்டுப்போ” என்றான். எனவே தாவீது அவ்விடத்தைவிட்டு ஆரேத் என்னும் காட்டுக்குப் போனான்.
சவுல் நோபின் ஆசாரியர்களைக் கொல்லுதல்
6 தாவீதும் அவன் பணியாட்களும் எங்கேயிருக்கிறார்கள் என்னும் செய்தியை சவுல் அறிந்தான். அப்பொழுது அவன் கிபியாவிலுள்ள ஒரு குன்றுக்குமேல் தமரிஸ்கு மரத்தின்கீழ் கையில் ஈட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய அதிகாரிகள் அவனைச்சுற்றி நின்றார்கள்.
7 அப்பொழுது சவுல் அந்த அதிகாரிகளிடம், “பென்யமீன் மனிதரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களனைவரையும் ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும் நியமிப்பானோ?
8 அதனால்தானோ நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாய்ச் சதி செய்திருக்கிறீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்து கொண்டதை ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. உங்களில் ஒருவனும் என்னில் அக்கறை கொள்ளவில்லை. எனக்காகப் பதுங்கியிருக்கும்படி தாவீதை என் மகன் தூண்டிவிட்டதையும் ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. அதையே இன்று அவன் செய்கிறான்” என்று சொன்னான்.
9 அப்பொழுது சவுலின் அதிகாரிகளுடன் நின்ற ஏதோமியனான தோவேக்கு சவுலிடம், “ஈசாயின் மகன் நோபிலுள்ள அகிதூபின் மகன் அகிமெலேக்கிடம் வந்ததைக் கண்டேன்.
10 அகிமெலேக்கு அவனுக்காக யெகோவாவிடம் விசாரித்து, மன்றாடினான். அவனுக்கு உணவையும், பெலிஸ்தியனான கோலியாத்தின் வாளையும் கொடுத்தான்” என்றான்.
11 அப்பொழுது சவுல் ஆளனுப்பி அகிதூபின் மகனும், ஆசாரியனுமான அகிமெலேக்கையும், நோபிலிருந்த ஆசாரியர்களான அவன் தகப்பனின் முழுக் குடும்பத்தையும் அழைத்தான். அவர்கள் அனைவரும் அரசனிடம் வந்தார்கள்.
12 அப்பொழுது சவுல் அவர்களிடம், “அகிதூபின் மகனே! நான் சொல்வதைக் கேள்” என்றான். அதற்கு அவன், “சொல்லும் ஆண்டவனே” என்றான்.
13 அப்பொழுது சவுல் அவனிடம், “நீ ஈசாயின் மகனுடன் சேர்ந்து ஏன் எனக்கு விரோதமாய்ச் சதிசெய்தாய்? நீ அவனுக்கு அப்பமும், வாளும் கொடுத்து அவனுக்காக இறைவனிடமும் விசாரித்தாயே. அவன் எனக்கு விரோதமாகக் கலகம்செய்து, இன்று செய்வதுபோல என்னைப்பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறான்” என்று கேட்டான்.
14 அதற்கு அகிமெலேக் அரசனிடம், “அரசனுடைய மருமகனும், உம்முடைய மெய்க்காவலர் தலைவனும், உம்முடைய வீட்டில் உயர்வாய் மதிக்கப்படுபவனுமான தாவீதைப்போல் உம்முடைய பணியாட்களுள் எல்லாம் உமக்கு உண்மையுள்ளவர் யார்?
15 அவனுக்காக நான் இறைவனிடம் விசாரித்தது அன்றுதான் முதல் முறையோ? ஒருபோதும் இல்லை. உமது அடியவனையும், என் தகப்பனின் குடும்பத்தில் எவனையும் அரசன் குற்றம் சாட்டாதிருப்பாராக. ஏனெனில் இந்த விவரங்களைப்பற்றி உமது அடியவனுக்கு எதுவுமே தெரியாது” என்றான்.
16 அப்பொழுது சவுல், “அகிமெலேக்கே! நீ நிச்சயமாய் சாவாய். நீயும் உன் தகப்பன் வீட்டாரனைவரும் நிச்சயமாய் சாவீர்கள்” என்றான்.
17 மேலும் அவன் தன் அருகில் நின்றவர்களிடம், “நீங்கள் யெகோவாவினுடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்” எனக் கட்டளையிட்டான். “ஏனெனில் அவர்கள் தாவீதுக்குத் துணையாயிருந்தார்கள். அவன் தப்பி ஓடிப்போனதை அறிந்திருந்தும் அவர்கள் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை” என்றான்.
ஆனால் அரசனின் அதிகாரிகளுக்கு யெகோவாவினுடைய ஆசாரியர்களைக் கொலை செய்யும்படி கையோங்க மனம்வரவில்லை.
18 எனவே அரசன் தோவேக்கிடம், “நீ ஆசாரியர்களை கொன்றுவிடு” என்று கட்டளையிட்டான். உடனே ஏதோமியனான தோவேக்கு திரும்பி அவர்களை அன்றையதினம் வெட்டி வீழ்த்தினான். அவன் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்திருந்த எண்பத்தைந்து ஆசாரியர்களை அன்றையதினம் கொன்றான்.
19 அத்துடன் ஆசாரியர்களின் பட்டணமான நோபிலுள்ள ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் எல்லோரையும் வாளுக்கு இரையாக்கினான். அங்கிருந்த மாடுகள், கழுதைகள், செம்மறியாடுகள் உட்பட எல்லாவற்றையும்கூட வாளுக்கு இரையாக்கினான்.
20 ஆனால் அகிதூபின் மகனாகிய அகிமெலேக்கின் மகன் அபியத்தார் தாவீதோடு சேரும்படி உயிர் தப்பி ஓடினான்.
21 சவுல் யெகோவாவின் ஆசாரியர்களைக் கொலைசெய்துவிட்டான் என்று தாவீதுக்கு அவன் சொன்னான்.
22 அப்பொழுது தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியனான தோவேக்கு அன்று அங்கே இருந்தபோது, அவன் சவுலுக்கு அதை நிச்சயமாய் அறிவிப்பானென்று அன்றே எனக்குத் தெரியும். உன் தகப்பனின் முழுக் குடும்பத்தின் மரணத்துக்கும் நானே காரணம்.
23 நீ பயப்படாமல் என்னோடேகூடத் தங்கியிரு, என்னைக் கொலைசெய்யத் தேடுபவனே உன்னையும் தேடுகிறான். எனவே என்னுடன் தங்குவது உனக்குப் பாதுகாப்பாயிருக்கும்” என்று சொன்னான்.