ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி
௧ பின் சாலொமோன் இஸ்ரவேலரின்
முதியவர்களையும் கோத்திரத் தலைவர்களையும் கூட்டினான். அவர்களை எருசலேமுக்கு வரச்செய்தான். அவர்களை தாவீது நகரத்திலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்திற்கு கொண்டு வரும்படி கேட்டான். ௨ எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சாலொமோனிடம் வந்தனர். இது, ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்து அடைக்கல கூடார பண்டிகைக்குரியதாக இருந்தது. ௩ இஸ்ரவேலின் முதியவர்கள் அனைவரும் அங்கு வந்துசேர்ந்ததும் பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் எடுத்தனர். ௪ அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியோடு ஆசரிப்புக் கூடாரத்தையும் கூடாரத்திலிருந்து பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்துகொண்டு ஆசாரியரும் லேவியர்களும் வந்தனர். ௫ சாலொமோன் அரசனும் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் கூடினார்கள். அவர்கள் பல பலிகளைக் கொடுத்தனர். எவராலும் எண்ணிப்பார்க்க முடியாதபடி ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டனர். ௬ பின்னர் ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதற்கு உரிய சரியான இடத்தில் வைத்தனர். அது ஆலயத்தின் உள்ளே மகா பரிசுத்தமான இடத்தில் இருந்தது. உடன்படிக்கைப் பெட்டியானது கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் இருந்தது. ௭ கேருபீன்கள் தங்கள் சிறகுகளை விரித்து பரிசுத்தப் பெட்டியையும் அதன் தண்டுகளையும் மூடின. ௮ தூக்கிச் செல்லத்தக்க தண்டுகள் மிகவும் நீளமானவை. அவை பரிசுத்த இடத்திற்கு முன்னால் மகா பரிசுத்த இடத்தில் நிற்கும் எவராலும் காணத்தக்கதாக இருந்தன. என்றாலும் அவை வெளியே காணப்படவில்லை. அவை இன்றும் அங்கே தான் உள்ளன. ௯ அப்பரிசுத்தப் பெட்டிக்குள்ளே இரண்டு கற்பல கைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவற்றை மோசே ஓரேப் என்ற இடத்தில் பரிசுத்தப் பெட்டிக்குள்ளே வைத்தான். அந்த இடத்தில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்ததும் கர்த்தர் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டார்.
௧௦ ஆசாரியர்கள் பரிசுத்தப் பெட்டியை மகா பரிசுத்த இடத்தில் வைத்தனர். ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறியதும் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை மூடிக்கொண்டது. ௧௧ ஆசாரியர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது. ஏனென்றால் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிவிட்டது. ௧௨ பிறகு சாலொமோன்:
 
“கர்த்தர், கனமான மேகத்தில் வாழ்வதாகச் சொன்னார்,*கர்த்தர்...சொன்னார் இது ஒரு பழைமையான பாடத்தில் உள்ளது, எபிரெய மொழியில் “கர்த்தர் இருளில் வாழச் சொன்னார்.”
௧௩ நான் உங்களுக்காக ஒரு பிரமாதமான ஆலயத்தைக் கட்டினேன்,
என்றென்றும் நீங்கள் வாழத்தக்க இடத்தை உருவாக்கினேன்” என்றான்.
 
௧௪ இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் அங்கே நின்றுக்கொண்டு இருந்தனர். எனவே சாலொமோன் அவர்களை நோக்கி திரும்பி ஆசீர்வதிக்கும்படி தேவனை வேண்டினான். ௧௫ பிறகு சாலொமோன் அரசன் கர்த்தருக்கு முன் மிக நீண்ட நேரம் ஜெபித்தான். அவன்:
 
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மிகப் பெரியவர். கர்த்தர் தாமாகவே என் தந்தையான தாவீதிற்குச் செய்த வாக்குறுதியைச் செய்து முடித்தார், அவர் என் தந்தையிடம், ௧௬ ‘நான் என் இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். ஆனால் நான் இன்னும் என்னை மகிமைப்படுத்தும் ஆலயத்தைக் கட்டுவதற்குரிய இடத்தை இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவில்லை. அதோடு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திச் செல்லும் தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் மகிமைப்படுவதற்குரிய இடமாக எருசலேமை தேர்ந்தெடுத்துள்ளேன். அதோடு, இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.’
௧௭ “என் தந்தையான தாவீது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்திட, ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினார். ௧௮ ஆனால் அவரிடம் கர்த்தரோ, ‘என்னை மகிமைப்படுத்திட நீ ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறாய். நீ என் ஆலயத்தைக் கட்ட விரும்புவது நல்லதுதான். ௧௯ ஆனால் நான் என் ஆலயத்துக்காக உன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. உன் மகன் என் ஆலயத்தைக்கட்டுவான்!’ என்று கூறினார்.
௨௦ “எனவே கர்த்தர் தனது வாக்குறுதியை நிறை வேற்றிக்கொண்டார். நான் என் தந்தையான தாவீதின் இடத்தில் அரசனாக இருக்கிறேன். கர்த்தருடைய வாக்குறுதியின்படி இப்போது நான் இஸ்ரவேலை ஆண்டு வருகிறேன். நான் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டிவிட்டேன். ௨௧ ஆலயத்திற்குள் பரிசுத்தப் பெட்டியை வைக்கவும் இடம் அமைத்துவிட்டேன். அப்பரிசுத்தப் பெட்டிக்குள் கர்த்தர் நமது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிறது. இந்த உடன்படிக்கையை அவர் நமது முற்பிதாக்களோடு எகிப்தை விட்டு வெளியே வந்ததும் செய்தார்” என்றான்.
 
௨௨ பிறகு சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்தின் முன்பு நின்றான். அனைவரும் அவனுக்கு முன்பு நின்றனர். ௨௩ அவன் தன் கைகளை விரித்து வானத்தை நோக்கி,
 
“இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப் போன்று வேறு ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய ஜனங்களிடம் அன்பாயிருந்ததால் அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டீர். அதனைக் காப்பாற்றினீர். உம்மைப் பின்பற்றுபவர்களிடம் கருணையோடும் உண்மையோடும் இருந்தீர். ௨௪ உமது சேவகனான என் தந்தை தாவீதிடம், ஒரு வாக்குறுதி தந்தீர். அதையும் காப்பாற்றினீர். உம்முடைய வாயாலேயே அந்த வாக்குறுதியைச் செய்தீர். அதை உண்மையாக்கிட உம்முடைய சொந்த பலத்தைப் பயன்படுத்தினீர். ௨௫ இப்போது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தாவீதிற்குத் தந்த மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நீர் ‘உன் மகன்கள் உன்னைப்போலவே எனக்குக் கவனமாகக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் பிறகு எப்பொழுதும் உன் குடும்பத்தில் உள்ளவர்களே இஸ்ரவேல் ஜனங்களை ஆள்வார்கள்’ என்று சொன்னீர். ௨௬ இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தந்தைக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்றும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
௨௭ “ஆனால், தேவனே உண்மையில் நீர் இந்தப் பூமியில் எங்களோடு வாழ்கின்றீரா? வானங்களும், வானாதி வானங்களும் உமக்குப் போதாதே. என்னால் கட்டப்பட்ட இந்த ஆலயம் எம்மாத்திரம்? ௨௮ ஆனால் என் ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் தயவுசெய்து கேளும். நான் உமது ஊழியன், நீர் எனது தேவனாகிய கர்த்தர், இன்று என் ஜெபத்தைக் கேட்டருளும். ௨௯ முன்பு நீர், ‘அங்கே நான் மகிமைப்படுத்தப்படுவேன்’ என்றீர். இவ்வாலயத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும். இந்த ஆலயத்தில் நான் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும் ௩௦ கர்த்தாவே, நானும் இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே உம்மிடம் திரும்பி ஜெபிக்கிறோம். தயவு செய்து அந்த ஜெபங்களைக் கேளும்! நீர் பரலோகத்தில் இருப்பதை அறிவோம். அங்கிருந்து எங்கள் ஜெபங்களைக் கேட்டு எங்களை மன்னியும்.
௩௧ “எவனாவது ஒருவன் இன்னொருவனுக்குத் தப்பு செய்தால், அவன் இங்கே பலிபீடத்திற்குக் கொண்டு வரப்படுவான். அவன் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால், ஒரு சத்தியம் செய்துக்கொள்வான். தான் ஒன்றும் அறியாதவன் என்று அவன் வாக்குறுதி செய்யவேண்டும். ௩௨ பரலேகத்திலிருந்து கவனித்து நியாயம் வழங்கவேண்டும். அவன் குற்றவாளியானால், தயவு செய்து அதை எங்களுக்கு உணர்த்தும். அவன் ஒன்றும் அறியாத அப்பாவியாக இருந்தால், அவன் குற்றமற்றவன் என்பதை உணர்த்தியருளும்.
௩௩ “சில நேரங்களில் உமது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யலாம், அவர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்கலாம். பிறகு அவர்கள் உம்மைத் துதிப்பார்கள், இந்த ஆலயத்தில் வந்து ஜெபம் செய்வார்கள். ௩௪ தயவு செய்து பரலோகத்திலிருந்து அவற்றைக் கேளும். அவர்களை மன்னித்து நமது நாட்டைப் பெற்றுக்கொள்ளும்படி உதவும், நீர் இந்த நாட்டை அவர்களின் முற்பிதாக்களுக்கு தந்துள்ளீர்.
௩௫ “சில வேளைகளில் இவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வதினால், நீர் மழையை நிறுத்திவிடுகிறீர். பிறகு அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஜெபித்து உம்மைத் துதித்து உமது பேரையும் புகழையும் பாடுவார்கள். நீர் துன்புறுத்த, அவர்கள் தமது பாவங்களுக்காக வருந்துவார்கள். ௩௬ தயவு செய்து பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபத்தைக் கேளும். பிறகு எங்களது பாவங்களை மன்னியும். ஜனங்களுக்கு சரியான வழிகளை கற்பியும். கர்த்தாவே, உமது ஜனங்களுக்கு வாரிசுரிமையாகக் கொடுத்த மண்ணுக்கு மழையை அனுப்பிவையும்.
௩௭ “இந்த பூமி வறண்டு போகலாம், உணவுப் பொருட்கள் விளையாமல் போகலாம், அல்லது ஜனங்களிடம் பெருநோய் பரவலாம் அல்லது பயிர்கள் புழுப் பூச்சிகளால் அழிக்கப்படலாம் அல்லது பகைவர்களால் ஜனங்கள் தம் நகரங்களில் தாக்கப்படலாம் அல்லது ஜனங்களுக்கு நோய் வரலாம். ௩௮ இவற்றில் ஏதாவது ஒன்று ஏற்பட்டு, ஜனங்களில் ஒவ்வொருவனும் மனம் மாறவிரும்பி, ஆலயத்தை நோக்கித் தன் கைகளை ஏறெடுத்து ஜெபம் செய்தால், ௩௯ தயவு செய்து கவனியும். நீர் உமக்குரிய இடமாகிய பரலோகத்தில் இருந்தாலும் கவனியும். அவர்களை மன்னித்து உதவிசெய்யும். உமக்கு மட்டுமே மனிதர்கள் உண்மையாக நினைப்பது தெரியும். எனவே, ஒவ்வொருவரையும் அவரவர் செய்கிறபடி நடத்தும். ௪௦ எங்கள் முற்பிதாக்களுக்காக நீர் கொடுத்த இந்நாட்டில் நாங்கள் வாழும்வரை உமக்கு பயந்துநடப்போம்.
௪௧-௪௨ “வெளி இடங்களில் உள்ள ஜனங்களும் உமது உயர்வையும் பலத்தையும் அறிவார்கள். இந்த ஆலயத்தில் ஜெபிப்பதற்காக அவர்கள் வெகு தூரத்திலிருந்து வருவார்கள். ௪௩ பரலோகத்திலிருந்து அவர்களது ஜெபங்களுக்குச் செவிசாயும். அவர்கள் கேட்பவற்றை தந்து உதவும். பிறகு அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே உம்மிடம் பயமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பின் எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்களும் உமது நாமத்தைத் தாங்கிய நான் கட்டியிருக்கிற இந்த ஆலயத்தை அறிவார்கள்.
௪௪ “சில நேரங்களில் உமது ஜனங்களுக்கு அவர்களது எதிரிகளோடு சண்டையிடுமாறு நீர் ஆணையிடுவீர். பிறகு உமது ஜனங்கள் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நகரத்திற்கும் நான் உம்மை மகிமைப்படுத்துவதற்குக் கட்டியிருக்கிற ஆலயத்திற்கும் திரும்பிவந்து அவர்கள் உம்மிடம் ஜெபம் செய்வார்கள். ௪௫ அப்போது, உம்முடைய பரலோகத்திலிருந்து அந்த ஜெபங்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவும்.
௪௬ “உமது ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வார்கள். நான் இதனை அறிவேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் பாவம் செய்கின்றனர். உமது ஜனங்களின்மேல் கோபமாக இருப்பீர். பகைவர்களால் தோற்கடிக்கப்படச் செய்வீர். பகைவர்கள் அவர்களைக் கைது செய்து தூரநாடுகளுக்குக் கொண்டுப் போவார்கள். ௪௭ அங்கே உமது ஜனங்கள் நடந்தவற்றை நினைத்துப் பார்ப்பார்கள். தம் பாவங்களுக்காக வருந்தி உம்மிடம் ஜெபிப்பார்கள், ‘பாவம் செய்து உமக்கு தவறிழைத்துவிட்டோம்’ என்பார்கள். ௪௮ அவர்கள் தொலைவிலுள்ள அந்த நிலப்பகுதியில் இருப்பார்கள். அவர்களை அடிமைப்படுத்திய எதிரிகளின் நிலத்திலிருந்து முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் உம்மை நோக்கித் திரும்பினாலும் அவர்களது முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தை நோக்கி உம்மிடம் ஜெபித்தாலும், நீர் தேர்ந்தெடுத்த நகரத்தை நோக்கித் திரும்பினாலும் நான் உமது நாமத்தால் கட்டியுள்ள ஆலயத்தை நோக்கித் திரும்பினாலும், ௪௯ நீர் அவர்களது ஜெபங்களுக்கு பரலோகத்திலிருந்து செவிசாய்த்து உதவும். ௫௦ உமது ஜனங்களின் பாவங்களை மன்னியும். அவர்கள் உமக்கு எதிராக திரும்பியதற்கு மன்னித்துவிடும். பகைவர்கள் அவர்களிடம் இரக்கத்துடன் இருக்கச் செய்யும். ௫௧ அவர்கள் உம்முடைய ஜனங்கள் என்பதை மறவாதீர். அவர்களை எகிப்திலிருந்து மீட்டு வந்ததை நினைவுகூரும். சூடான அடுப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றியதைப் போன்ற செயல் அது!.
௫௨ “தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தையும் இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். உதவி கேட்கும்போதெல்லாம் உதவும். ௫௩ நீர் அவர்களை உலகிலுள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தீர். உமது வேலையாள் மோசே மூலம் எங்கள் முற்பிதாக்களை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தபோது நீர் அதை வெளிப்படுத்தினீர்” என்றான்.
 
௫௪ சாலொமோன் இவ்வாறு தேவனிடம் ஜெபம் செய்தான்.அவன் பலிபீடத்திற்கு முன்னால் முழங்காலிட்டு தன் கைகளை உயர்த்தி பரலோகத்தை நோக்கி வேண்டினான். அவன் தன் வேண்டுதல்களை முடித்தபிறகு எழுந்து நின்றான். ௫௫ பின் உரத்த குரலில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினான்.
 
௫௬ சாலொமோன், “கர்த்தரை துதியுங்கள்! அவரது ஜனங்களுக்கு அவர் வாக்களித்தது போன்று இளைப்பாறுதல் அளிக்கிற கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுங்கள்! கர்த்தர் தமது ஊழியன் மோசே மூலம் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வார்த்தை கூட தவறுவதில்லை. கர்த்தர் அத்தனையையும் காப்பாற்றுவார்! ௫௭ தேவனாகிய கர்த்தர் நமது முற்பிதாக்களோடு இருந்ததுப்போலவே நம்மோடும் இருப்பார், கர்த்தர் நம்மை விட்டு விலகக்கூடாது என்று ஜெபிக்கிறேன். ௫௮ நாம் அவர் பக்கம் திரும்பி அவரைப் பின்பற்றுவோம். நமது முற்பிதாக்களுக்கு அவர் கொடுத்த சட்டங்களுக்கும், முடிவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம், ௫௯ நமது தேவனாகிய கர்த்தர், எனது இந்த ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் மறவாமல் இருப்பார். அவர் இதனை அவரது ஊழியனுக்கும் அரசனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் செய்வார். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ௬௦ இவ்வாறு கர்த்தர் செய்துவந்தால், உலகில் உள்ள ஜனங்கள் அனைவரும் அவரை உலகின் ஒரே தேவனாகக் கருதுவார்கள். ௬௧ நீங்கள் நமது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையோடும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும். எப்பொழுதும் அவரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இப்பொழுது போலவே எதிர்காலத்திலும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்” என்றான்.
 
௬௨ பிறகு சாலொமோன் அரசனும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு பலிகளைச் செலுத்தினார்கள். ௬௩ 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் கொன்றனர். இவை சமாதானப் பலியாகக் கொடுக்கப்பட்டன. இவ்வழியில்தான், அரசனும் இஸ்ரவேலர்களும் ஆலயத்தை கர்த்தருக்கு உரியதாக ஆக்கினார்கள்.
௬௪ அன்று சாலொமோன் ஆலயத்தின் முற்றத்தை அர்ப்பணித்தான். அவன் தகனபலி, தானியக் காணிக்கை, விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு சமாதான பலி ஆகியவற்றைக் கொடுத்தான். சாலொமோன் இவற்றை ஆலயத்தின் முற்றத்தில் கொடுத்தான். ஏனென்றால் கர்த்தருக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் அவை அனைத்தையும் கொள்ளமுடியாத அளவு சிறியதாக இருந்தது.
௬௫ ஆலயத்தில் சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் விடுமுறையைக்விடுமுறை இது பஸ்காவைக் குறிக்கிறது. கொண்டாடினார்கள். அனைத்து இஸ்ரவேலர்களும் ஆமாத்தின் எல்லை தொடங்கி எகிப்தின் நதி மட்டுமுள்ள ஜனங்களும் அங்கே இருந்தனர். அவர்கள் ஏழு நாட்கள் உண்பதும் குடிப்பதும் கர்த்தருடன் சேர்ந்து மகிழ்வதுமாக இருந்தனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் இருந்தனர். மொத்தம் 14 நாட்கள் கொண்டாடினர். ௬௬ மறுநாள், சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்பச் சொன்னான். அனைவரும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார்கள். கர்த்தர் தனது ஊழியனான தாவீதிற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நன்மை செய்ததால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

*௮:௧௨: கர்த்தர்...சொன்னார் இது ஒரு பழைமையான பாடத்தில் உள்ளது, எபிரெய மொழியில் “கர்த்தர் இருளில் வாழச் சொன்னார்.”

௮:௬௫: விடுமுறை இது பஸ்காவைக் குறிக்கிறது.