௨௩
தாவீதின் கடைசி வார்த்தைகள்
௧ இவையே தாவீதின் கடைசி வார்த்தைகள்:
 
“இச்செய்தி ஈசாயின் மகன் தாவீதினுடையது.
தேவனால் உயர்த்தப்பட்ட மனிதனுடையது.
யாக்கோபின் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்,
இஸ்ரவேலின் இனியப் பாடகன்.
௨ கர்த்தருடைய ஆவி என் மூலமாகப் பேசினார்.
என் நாவில் அவரது வார்த்தைகள் இருந்தன.
௩ இஸ்ரவேலின் தேவன் பேசினார்.
இஸ்ரவேலின் கன்மலையானவர் என்னிடம்,
‘நேர்மையாய் ஆளும் மனிதன்,
தேவனை மதித்து ஆளும் மனிதன்,
௪ உதயகால ஒளியைப் போன்றிருப்பான்:
மேகங்கள் அற்ற அதிகாலையைப்போல இருப்பான்.
மழையைத் தொடர்ந்து தோன்றும் வெளிச்சத்தைப் போன்றிருப்பான்.
அம்மழை நிலத்திலிருந்து பசும்புல்லை எழச்செய்யும்’ என்று சொன்னார்.
 
௫ “கர்த்தர் என் குடும்பத்தை பலமுள்ளதாகவும் பாதுகாப்புள்ளதாகவும் மாற்றினார்.
தேவன் என்னோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்தார்!
எல்லா வழிகளிலும் இந்த உடன்படிக்கை
நல்லதே என்று தேவன் உறுதி செய்தார்.
உறுதியாக அவர் எனக்கு எல்லா வெற்றியையும் தருவார்.
எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் தருவார்.
 
௬ “ஆனால் தீயோர் முட்களைப் போன்றவர்கள்.
ஜனங்கள் முட்களை வைத்திருப்பதில்லை.
அவர்கள் அவற்றை வீசிவிடுவார்கள்.
௭ ஒருவன் அவற்றைத் தொட்டால்
அவை மரத்தாலும் வெண்கலத்தாலுமான ஈட்டியால் குத்துவது போலிருக்கும்.
ஆம், அம்மக்கள் முட்களைப் போன்றவர்கள்.
அவர்கள் தீயில் வீசப்படுவார்கள்.
அவர்கள் முற்றிலும் எரிக்கப்படுவார்கள்!”
மூன்று புகழ்வாய்ந்த வீரர்கள்
௮ இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்:
தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் மகனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன்.
௯ இவனுக்குப் பின் அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். ௧௦ மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர்.
௧௧ இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் மகன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். ௧௨ ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.
மூன்று பெரும் வீரர்கள்
௧௩ ஒரு முறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான் பெலிஸ்தரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இருந்தது. முப்பது பெரும் வீரர்களில்*முப்பது பெரும் வீரர்கள் இவர்கள் தாவீதின் புகழ்மிக்க வீரமுடைய வீரர்கள். மூன்று பேர் நிலத்தில் தவழ்ந்தவாறே சென்று தாவீது இருக்குமிடத்தை அடைந்தனர்.
௧௪ மற்றொரு முறை தாவீது அரணுக்குள் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். பெலிஸ்திய வீரர்களின் ஒரு கூட்டத்தினர் பெத்லேகேமில் இருந்தனர். ௧௫ தாவீது தனது சொந்த ஊரின் தண்ணீரைப் பருகும் தாகங்கொண்டிருந்தான். தாவீது, “பெத்லகேமின் நகர வாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து யாரேனும் எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவார்களா என்று விரும்புகிறேன்!” என்றான். தாவீதுக்கு உண்மையில் அது தேவைப்படவில்லை. வெறுமனே அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
௧௬ ஆனால் அந்த மூன்று பெரும் வீரர்களும் பெலிஸ்தரின் படைக்குள் புகுந்து சென்றனர். பெத்லகேமின் நகரவாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தனர். அம்முப்பெரும் வீரர்களும் அந்த தண்ணீரை தாவீதிடம் கொண்டு வந்தனர். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். கர்த்தருக்குக் காணிக்கையாக அதை நிலத்தில் ஊற்றிவிட்டான். ௧௭ தாவீது, “கர்த்தாவே, நான் இந்த தண்ணீரைப் பருகமுடியாது. எனக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற மனிதரின் இரத்தத்தைக் குடிப்பதற்கு அது சமமாகும்” என்றான். இதனாலேயே தாவீது தண்ணீரைப் பருகவில்லை. இதைப்போன்ற பல துணிவான காரியங்களை முப்பெரும் வீரர்களும் செய்தார்கள்.
மற்ற தைரியமான வீரர்கள்
௧௮ அபிசாயி யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனும் ஆவான். முப்பெரும் வீரர்களின் தலைவன். 300 வீரர்களைத் தனது ஈட்டியால் கொன்றவன் இந்த அபிசாயி. ௧௯ இவன் முப்பெரும் வீரர்களைப் போன்ற புகழ் பெற்றவன். அவன் அவர்களில் ஒருவனாக இல்லாதிருந்தும், அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்.
௨௦ பின்பு யோய்தாவின் மகன் பெனாயா இருந்தான். இவன் வலிமைக்கொண்ட ஒருவனின் மகன். அவன் கப்செயேல் ஊரான். பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். மோவாபிலுள்ள ஏரியேலின் இரண்டு மகன்களை பெனாயா கொன்றான். ஒரு நாள் பனிபெய்துக்கொண்டிருக்கையில் பெனாயா நிலத்திலிருந்த ஒரு குழியில் இறங்கிச் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். ௨௧ பெனாயா ஒரு மிகப் பெரிய எகிப்திய வீரனையும் கொன்றான். எகிப்தியனின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. பெனாயா கையில் ஒரு தடி மட்டுமே இருந்தது. ஆனால் பெனாயா எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து எடுத்தான். எகிப்தியனின் ஈட்டியாலேயே பெனாயா அவனைக் கொன்றான். ௨௨ யோய்தாவின் மகன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன். ௨௩ பெனாயாமுப்பெரும் வீரர்களைக் காட்டிலும் மிகவும் புகழ் பெற்றவன். ஆனால் அவன் முப்பெரும் வீரர்களின் குழுவைச் சார்ந்தவன் அல்லன். தாவீது தனது மெய்க்காப்பாளர்களின் தலைவனாக பெனாயாவை நியமித்தான்.
முப்பது வீரர்கள்
௨௪ முப்பது வீரர்களின் பெயர்ப் பட்டியல்:
 
யோவாபின் சகோதரனாகிய ஆசகேல்;
பெத்லகேமின் தோதோவின் மகன் எல்க்கானான்;
௨௫ ஆரோதியனாகிய சம்மா;
ஆரோதியனாகிய எலிக்கா;
௨௬ பல்தியனாகிய ஏலெஸ்;
தெக்கோவின் இக்கேசின் மகன் ஈரா;
௨௭ ஆனதோத் தியனாகிய அபியேசர்;
ஊசாத்தியனாகிய மெபுன்னாயி;
௨௮ அகோகியனாகிய சல்மோன்;
தெந்தோபாத் தியனாகிய மகராயி;
௨௯ பானாவின் மகன் ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன்;
பென்யமீனியரின் கிபியா ஊரைச் சார்ந்தரிபாயின் மகன் இத்தாயி;
௩௦ பிரத்தோனியனாகிய பெனாயா;
காகாஸ் நீரோடைகளின் நாட்டிலுள்ள ஈத்தாயி;
௩௧ அர்பாத்தியன் ஆகிய அபி அல்பொன்;
பருமியன் ஆகிய அஸ்மாவேத்;
௩௨ சால்போனியன் ஆகிய எலி யூபா; யாசேனின் மகனாகிய யோனத்தான்; ௩௩ ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் மகனாகிய அகியாம்;
௩௪ மாகாத்தியன் ஆகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத்;
கீலோனியன் ஆகிய அகித்தோப்பேலின் மகன் எலியாம்;
௩௫ கர்மேலியன் ஆகிய எஸ்ராயி;
அர்பியனாகிய பாராயி;
௩௬ சோபாவில் உள்ள நாத்தானின் மகன் ஈகால்;
காதியனாகிய பானி;
௩௭ அம்மோனியனாகிய சேலேக் பெரோத்தியனாகிய நகராய், (செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதங்களை நகராய் சுமந்துச் சென்றான்)
௩௮ இத்ரியனாகிய ஈரா;
இத்ரியனாகிய காரேப்;
௩௯ ஏத்தியனாகிய உரியா.
 
மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கை 37 பேர் ஆகும்.

*௨௩:௧௩: முப்பது பெரும் வீரர்கள் இவர்கள் தாவீதின் புகழ்மிக்க வீரமுடைய வீரர்கள்.