௨௦
௧ ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம்மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள்.
௨ பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: ௩ “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மூப்பர்களிடம் (தலைவர்கள்) கூறு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறீர்களா? அது அவ்வாறானால் நான் அதனைத் தரமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.’ ௪ அவர்களை நியாயம்தீர்க்க வேண்டுமா? மனுபுத்திரனே, நீ அவர்களை நியாயம்தீர்க்கிறாயா? அவர்கள் பிதாக்கள் செய்த அருவருப்பான பாவங்களைப்பற்றி நீ சொல்ல வேண்டும். ௫ நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில், நான் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என் கையை உயர்த்தி, நான் அவர்களுக்கு முன்னால், எகிப்தில், என்னை வெளிப்படுத்தினேன். என் கையை உயர்த்தி நான் சொன்னேன்: “நானே உமது தேவனாகிய கர்த்தர்.” ௬ அந்நாளில் உன்னை எகிப்தைவிட்டு வெளியே எடுத்துச்செல்வேன் என்று வாக்களித்தேன்: நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். இது பல நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. இது எல்லா நாடுகளையும்விட அழகான நாடு!
௭ “ ‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். “நானே உங்களது தேவனாகிய கர்த்தர்.” ௮ ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி என் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் தம் அருவருப்பான விக்கிரகங்களை எறியவில்லை. ஆனால் அவர்கள் எகிப்தியரின் அந்த ஆபாசமான சிலைகளை விடவில்லை. எனவே நான் (தேவன்) எகிப்தில் அவர்களையும் அழித்திட முடிவு செய்தேன். எனது கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணருமாறுச் செய்தேன். ௯ ஆனால் நான் அவர்களை அழிக்கவில்லை. அவர்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவருவேன் என்று அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டில் ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். நான் எனது நல்ல பெயரை அழிக்கவில்லை. எனவே, மற்ற ஜனங்களின் முன்பு இஸ்ரவேலை நான் அழிக்கவில்லை. ௧௦ நான் இஸ்ரவேல் குடும்பத்தாரை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தினேன். ௧௧ பிறகு நான் எனது சட்டங்களைக் கொடுத்தேன். எனது விதிகளை எல்லாம் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் அந்த விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். ௧௨ நான் அவர்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களைப்பற்றியும் சொன்னேன். அவ்விடுமுறை நாட்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள அடையாளங்கள் ஆகும். நானே கர்த்தர். நான் அவர்களை எனக்குப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருந்தேன் என அவை காட்டும். எனக்குரிய சிறப்பாக அவற்றைச் செய்தேன்.
௧௩ “ ‘ஆனால் இஸ்ரவேல் குடும்பத்தார் வனாந்தரத்தில் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவை நல்ல விதிகள். ஒருவன் அவ்விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை எல்லாம் முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் அந்நாட்களில் பலமுறை வேலை செய்தனர். நான் அவர்களை வனாந்தரத்திலேயே அழிக்கவேண்டுமென முடிவெடுத்தேன். என் கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். ௧௪ ஆனால் அவர்களை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்ததை மற்ற நாடுகள் பார்த்தன. நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை எனவே மற்றவர்கள் முன்பு நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. ௧௫ வனாந்தரத்தில் அந்த ஜனங்களுக்கு இன்னொரு வாக்கு கொடுத்தேன். நான் கொடுத்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வரமாட்டேன் என்று சொன்னேன். அது நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. எல்லா நாடுகளையும் விட அது அழகான நாடு!
௧௬ “ ‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். என் சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் எனது ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் செய்தனர். ஏனென்றால், அவர்கள் இருதயங்கள் அந்த அசுத்த விக்கிரங்களுக்குச் சொந்தமாயிருந்தன. ௧௭ ஆனால் நான் அவர்களுக்காக வருத்தப்பட்டேன். நான் அவர்களை அழிக்கவில்லை. நான் வனாந்தரத்தில் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை. ௧௮ வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். ௧௯ நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள். ௨௦ எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.”
௨௧ “ ‘ஆனால் அப்பிள்ளைகள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. நான் சொன்னபடி அவர்கள் செய்யவில்லை. அவை நல்ல சட்டங்கள். ஒருவன் அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றவையாகக் கருதினர். எனவே அவர்களை வனாந்திரத்தில் நான் முழுமையாக அழிக்க விரும்பினேன். ௨௨ ஆனால் நான் என்னைக் கட்டுப்படுத்தினேன். நான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்ததை மற்ற நாட்டினர் பார்த்தனர். நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை. எனவே மற்ற நாடுகளின் முன்னால் நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. ௨௩ எனவே வனாந்திரத்தில் அந்த ஜனங்களுக்கு வேறொரு வாக்கு தந்தேன். அவர்களைப் பல்வேறு நாடுகளில் சிதறடிப்பேன் என்று வாக்குறுதி செய்தேன்.
௨௪ “ ‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் தம் தந்தையர்களுடைய அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். ௨௫ எனவே நான் அவர்களுக்கு நன்மையற்ற சட்டங்களைக் கொடுத்தேன். வாழ்வு தராத கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். ௨௬ நான் அவர்கள் தமது அன்பளிப்புகளால் (அவர்கள் விக்கிரகங்களுக்கு படைத்தவை) தங்களையே தீட்டுப்படுத்திக்கொள்ள இடங்கொடுத்தேன். அவர்கள் தம் முதல் குழந்தைகளைக் கூட பலியிடத் தொடங்கினார்கள். இவ்வழியில், அந்த ஜனங்களை அழிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.’ ௨௭ எனவே இப்பொழுது, மனுபுத்திரனே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் ஜனங்கள் என்னைப் பற்றி கெட்டவற்றைச் சொன்னார்கள். எனக்கு எதிராகத் தீயத்திட்டங்களைப் போட்டனர். ௨௮ ஆனால் நான் வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தேன். அவர்கள் அனைத்து குன்றுகளையும் பச்சை மரங்களையும் பார்த்தனர். அவர்கள் அந்த இடங்களுக்கு தொழுகைச் செய்யச் சென்றனர். அவர்கள் தம் பலிகளையும் எனக்குக் கோப பலியையும்*கோப பலி ஜனங்கள் இந்த உணவை சமாதான பலி என்று சொல்லுவார்கள். ஆனால் எசேக்கியேல், இந்த உணவு தேவனைக் கோபம்தான் மூட்டுகிறதென்று பரிகாசம் செய்கிறான். கொண்டு சென்றனர். அவர்கள் பலிகளைக் கொடுத்தனர். அது இனிய மணத்தைக் கொடுத்தது. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் பானங்களின் காணிக்கையைக் கொடுத்தனர். ௨௯ நான் அந்த ஜனங்களிடம் அந்த மேடான இடங்களுக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டேன். இன்றும் அம்மேடான இடங்கள் அங்கு இருக்கின்றன’ ” என்று சொல்.
௩௦ தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்துப் பாவங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. ‘என் கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: உங்கள் முற் பிதாக்களைப்போன்று தீமைகளைச் செய்து நீங்கள் உங்களை அசுத்தமாக்கிக்கொண்டீர்கள். நீங்கள் வேசியைப்போன்று நடந்துகொண்டீர்கள். நீங்கள் உங்கள் முன்னோர்கள் வழிபட்ட அருவருப்பான தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினீர்கள். ௩௧ நீங்கள் அதேபோன்று அன்பளிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பொய்த் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் போடுகிறீர்கள். இன்றுவரை நீங்கள் அசுத்த விக்கிரகங்களோடு சேர்ந்து உங்களை தீட்டாக்கிக்கொண்டீர்கள்! நான் உங்களை என்னிடம் ஆலோசனை கேட்க வரவிடவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நானே ஆண்டவரும் கர்த்தருமாயிருக்கிறேன். என் உயிரின் மூலம் நான் வாக்களிக்கிறேன், நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஆலோசனை தரமாட்டேன்! ௩௨ நீங்கள் வேறு நாட்டினரைப்போன்று இருப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிற நாட்டினரைப்போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் மரத்துண்டுகளையும் கல்லையும் (சிலைகள்) சேவிக்கிறீர்கள்.’ ”
௩௩ எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக் கொண்டு நான் வாக்களிக்கிறேன், நான் உங்களை அரசனைப்போன்று ஆள்வேன். ஆனால் நான் என் வல்லமை வாய்ந்த கையை உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். நான் உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! ௩௪ உங்களை நான் சிதறடித்த நாடுகளிலிருந்து வெளியே கொண்டு வருவேன். நான் உங்களை ஒன்று சேர்ப்பேன். இந்நாடுகளிலிருந்து உங்களை மீண்டும் கொண்டு வருவேன். ஆனால், நான் எனது வல்லமை வாய்ந்த கரத்தை உங்களுக்கு எதிராக உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! ௩௫ நான் உங்களை முன்பு போல் வனாந்திரத்தில் வழிநடத்துவேன். ஆனால் இது மற்ற நாட்டினர் வாழும் இடம். நாம் நேருக்கு நேராக நிற்போம். நான் உங்களை நியாயந்தீர்ப்பேன். ௩௬ நான் எகிப்தின் அருகில் உள்ள வனாந்திரத்தில் உங்கள் முன்னோர்களை நியாயந்தீர்த்தது போன்று உங்களை நியாயந்தீர்ப்பேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
௩௭ “நான் உடன்படிக்கையின் உங்கள் குற்றங்களை நியாயம் தீர்த்து தண்டிப்பேன். ௩௮ நான் எனக்கு எதிராகத் திரும்பி பாவம் செய்தவர்களை விலக்குவேன். நான் அவர்களை உங்கள் தாய்நாட்டிலிருந்து விலக்குவேன். அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
௩௯ இப்பொழுது, இஸ்ரவேல் குடும்பத்தினரே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “எவராவது தம் அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளவேண்டுமானால், அவன் போய் தொழுதுகொள்ளட்டும். ஆனால் பிறகு, என்னிடமிருந்து ஆலோசனை கிடைக்கும் என்று எண்ண வேண்டாம்! இனிமேலும் எனது நாமத்தை உங்கள் அன்பளிப்புகளாலும், உங்கள் விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுத்த முடியாது.”
௪௦ எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “ஜனங்கள் எனது பரிசுத்தமான மலைகளுக்கு இஸ்ரவேலிலுள்ள உயரமான மலையில் எனக்குச் சேவை செய்ய வரவேண்டும்! இஸ்ரவேலின் எல்லா வம்சத்தாருமாகிய அனைவரும் உங்கள் நிலத்தில் (தேசத்தில்) இருப்பீர்கள். என்னிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய இடம் அதுதான். நீங்கள் அந்த இடத்திற்கு உங்கள் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். உங்கள் விளைச்சலின் முதல் பகுதியை அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். உங்கள் பரிசுத்த அன்பளிப்புகள் அனைத்தையும் அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். ௪௧ பிறகு நான் உங்கள் பலிகளின் இனிய மணத்தால் பிரியமாய் இருப்பேன். நான் உங்களைத் திரும்ப அழைத்து வரும்போது அது நிகழும். நான் உங்களைப் பல தேசங்களில் சிதற அடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் உங்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக மீண்டும் செய்வேன். அந்நாடுகள் எல்லாம் இதனைப் பார்க்கும். ௪௨ பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டுவரும்போது இதனை அறிவீர்கள். உங்கள் முற்பிதாக்களிடம் அந்த நாட்டையே உங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்தேன். ௪௩ அந்நாட்டில் உங்களை அசுத்தமாக்கிய நீங்கள் செய்த பாவங்களை நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் தீய வழிகளினிமித்தம் வெட்கப்பட்டுப்போவீர்கள். ௪௪ இஸ்ரவேல் குடும்பத்தாரே, நீங்கள் பல கெட்டக் காரியங்களைச் செய்தீர்கள். அத்தீயக்காரியங்களால் நீங்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனது நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கேற்ற அத்தண்டனைகளை நான் தரவில்லை. பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.”
௪௫ பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: ௪௬ “மனுபுத்திரனே, யூதாவின் தென் பகுதியிலுள்ள நெகேவைப் பார். நெகேவ் காட்டிற்கு எதிராகப் பேசு. ௪௭ நெகேவ்காட்டிடம் சொல், ‘கர்த்தருடைய வார்த்தையைக் கேள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: பார், உன் காட்டில் நெருப்பிட நான் தயாராக இருக்கிறேன். நெருப்பானது எல்லா பச்சை மரங்களையும் எல்லா காய்ந்த மரங்களையும் அழிக்கும். எரியும் ஜூவாலையை அணைக்கமுடியாது. தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து நிலமும் எரியும். ௪௮ பிறகு எல்லா ஜனங்களும் கர்த்தராகிய நானே நெருப்பு வைத்தேன் என அறிவார்கள். அந்நெருப்பு அணைக்கப்படாது!’ ”
௪௯ பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!”
*௨௦:௨௮: கோப பலி ஜனங்கள் இந்த உணவை சமாதான பலி என்று சொல்லுவார்கள். ஆனால் எசேக்கியேல், இந்த உணவு தேவனைக் கோபம்தான் மூட்டுகிறதென்று பரிகாசம் செய்கிறான்.