௩
விசுவாசத்தின் மூலமே தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது
௧ இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்தார் என்பது பற்றி மிகத் தெளிவாகக் கலாத்திய மக்களாகிய உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நீங்களோ புத்தியற்றவர்களாய் இருந்தீர்கள். எவரையோ உங்களிடம் தந்திரம் செய்ய அனுமதித்துவிட்டீர்கள். ௨ இதைப்பற்றி எனக்குக் கூறுங்கள், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவியைப் பெற்றீர்கள். ஏனென்றால் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள். ௩ ஆவியானவரால் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்கள் சொந்த மாம்சீக பலத்தால் தொடர முயற்சி செய்கிறீர்களா? எவ்வளவு புத்தியற்றவர்கள் நீங்கள்? ௪ பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ௫ நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களுக்கு ஆவியைக் கொடுக்கிறாரா? இல்லை. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களிடம் அற்புதங்களைச் செய்கிறாரா? இல்லை. உங்களுக்கு அவர் ஆவியைக் கொடுத்ததும், அற்புதங்களை நடப்பித்ததும் நீங்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பினீர்கள் என்பதால்தான்.
௬ ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.”✡ஆதி. 15:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ௭ ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள். ௮ எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் வேதவாக்கியங்கள் கூறியது. யூதர் அல்லாத மக்களைச் சரியான வழியில் அவர்களின் விசுவாசத்தின் மூலமே தேவன் வழிநடத்துவார். “பூமியில் உள்ள மக்களையெல்லாம் ஆசீர்வதிக்க, ஆபிரகாமே, தேவன் உன்னைப் பயன்படுத்துவார்”✡ஆதி. 12:3-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று சுவிசேஷமாய் முன் அறிவித்தது. ௯ ஆபிரகாம் இதை நம்பினார். நம்பியதால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டது போலவே, நம்பிக்கையுள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவர்.
௧௦ ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்”✡உபா. 27:26-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது. ௧௧ ஆகவே எவனும், சட்டத்தின் மூலம் தேவனுக்கு வேண்டியவனாவதில்லை என்பது தெளிவாக உள்ளது. ஏனெனில் வேதவாக்கிவங்களில், “விசுவாசத்தினாலே தேவனுக்கு வேண்டியவனாக இருக்கிறவன் எப்போதும் வாழ்வான்”✡ஆபகூக் 2:4-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று சொல்லி இருப்பதே இதன் காரணம்.
௧௨ விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும். ௧௩ நம் மீது சட்டங்களானது சாபம் போட்டுள்ளது. ஆனால் கிறிஸ்து அச்சாபத்தை விலக்கிவிட்டார். தன்னையே அவர் சாபத்துக்கு உள்ளாக்கிக்கொண்டார். “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே தொங்க *உபா. 21:22-23. விடப்படுகிறதோ அவனே சாபத்துக்கு உள்ளாகிறான்”✡உபா. 21:23-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று எழுதப்பட்டிருக்கிறது. ௧௪ கிறிஸ்து இதனைச் செய்தார். அதனால் தேவனுடைய ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. தேவன் ஆபிரகாமையும் ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த்தான் வருகிறது. இயேசு மரித்தார். அதனால் தேவனுடைய வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றோம். விசுவாசத்தின் மூலம், நாம் அவ்வாக்குறுதிகளைப் பெறுகிறோம்.
சட்டமும் வாக்குறுதியும்
௧௫ சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். மனிதர்களுக்குரிய உடன்படிக்கையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இவ்வாறு மனிதர்களுக்குள் அதிகாரப்பூர்வமாக உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, யாரும் அதில் உள்ளவற்றைத் தள்ளுவதும் இல்லை. புதிதாகச் சேர்த்துக்கொள்ளுவதும் இல்லை, எவரொருவரும் அவற்றை ஒதுக்குவதும் இல்லை. ௧௬ ஆபிரகாமுக்கும் அவனது சந்ததிக்கும் தேவன் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார். அவர் “உன் சந்ததிகளுக்கு” என்று பன்மையில் சொல்லாமல் “உன் சந்ததிக்கு” என்று ஒருமையில் சொல்லி இருக்கிறார். எனவே இது கிறிஸ்துவையே குறிக்கும். ௧௭ எனவே நான் சொல்வது என்னவென்றால் சட்டங்கள் வருவதற்கு முன்பே ஆபிரகாமிடம் தேவன் ஓர் உடன்படிக்கையை அதிகாரப் பூர்வமாகச் செய்திருக்கிறார். சட்டங்களோ 430 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. எனவே அது அந்த உடன்படிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது. தேவன் ஆபிரகாமுக்குச் செய்துகொடுத்த வாக்குத்தத்தமும் தவறாதது.
௧௮ தேவனுடைய வாக்குறுதியை நாம் சட்டங்களைப் பின்பற்றி வருவதன் மூலம் அடைய முடியுமா? முடியாது. அப்படியானால் தேவன் கொடுத்தது வாக்குறுதி ஆகாது. ஆனால் தேவனோ தன் ஆசீர்வாதங்களைத் தன் வாக்குத்தத்ததின் மூலம் இலவசமாய் ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.
௧௯ அப்படியென்றால் சட்டங்களின் நோக்கம் என்ன? அவை மனிதர் செய்யும் தீமைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டின. ஆபிரகாமின் சிறப்பான வாரிசு வரும்வரை இச்சட்டம் தொடர்ந்து பயன்பட்டது. தேவன் இந்த வாரிசைப் பற்றியே வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இச்சட்டங்கள் தேவ தூதர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டது. தேவ தூதர்கள் மோசேயை மத்தியஸ்தராகப் பயன்படுத்தி சட்டங்களை மனிதர்களுக்கு வழங்கினர். ௨௦ மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.
மோசேயின் சட்டங்களுடைய நோக்கம்
௨௧ இதனால் சட்டம் தேவனுடைய வாக்குறுதிக்கு எதிரானவை என்று பொருள் கொள்ள முடியுமா? முடியாது. மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு சட்டம் இருந்தால் பிறகு நாம் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலமே தேவனுக்கு வேண்டியவராக முடியும். ௨௨ ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும்.
௨௩ இந்த விசுவாசம் வருவதற்கு முன்னால் நாம் எல்லாரும் சட்டத்தால் சிறைப்படுத்தப்பட்டிருந்தோம். தேவன் நமக்கு விசுவாசத்திற்குரிய வழியை வெளிப்படுத்தும்வரை நமக்கு விடுதலை இல்லாதிருந்தது. ௨௪ எனவே, கிறிஸ்து வரும் வரை சட்டம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம். ௨௫ இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.
௨௬-௨௭ நீங்கள் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விசுவாசத்தின் வழியில் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள் என்பதை இது காட்டும். ௨௮ இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான். ௨௯ நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் ஆபிரகாமின் பரம்பரையினர். ஆகவே தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்கிறீர்கள்.
✡௩:௬: ஆதி. 15:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡௩:௮: ஆதி. 12:3-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡௩:௧௦: உபா. 27:26-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡௩:௧௧: ஆபகூக் 2:4-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
*௩:௧௩: உபா. 21:22-23.
✡௩:௧௩: உபா. 21:23-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.