௨௨
எருசலேமிற்குத் தேவனுடைய செய்தி
௧ தரிசனப் பள்ளத்தாக்கைப் பற்றிய சோகமான செய்தி:
ஜனங்களே உங்களுக்கு என்ன தவறு ஏற்பட்டது?
உங்கள் வீட்டு மாடிகளில் ஏன் மறைந்து கொண்டிருக்கிறீர்கள்?
௨ கடந்த காலத்தில் இந்நகரம் பரபரப்புடைய நகரமாக இருந்தது.
இந்த நகரம் ஆரவாரமும் மகிழ்ச்சியும் உடையதாக இருந்தது.
ஆனால் இப்போது அவை மாறியுள்ளன.
உனது ஜனங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் வாள்களினால் அல்ல.
ஜனங்கள் மரித்தனர்.
ஆனால் போரிடும்போது அல்ல.
௩ உங்கள் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து தூரத்துக்கு ஓடிப்போனார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வில் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள்,
தலைவர்கள் அனைவரும் சேர்ந்து தூர ஓடிப் போனார்கள்.
ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
௪ எனவே, “என்னைப் பார்க்கவேண்டாம்!
என்னை அழ விடுங்கள்!
எருசலேமின் அழிவைப் பற்றி நான் வருந்தும்போது
எனக்கு ஆறுதல் சொல்ல வரவேண்டாம்”.
௫ கர்த்தர் ஒரு விசேஷமான நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த நாளில் அமளியும் குழப்பமும் ஏற்படும். தரிசனப் பள்ளத்தாக்கில் ஜனங்கள் ஒருவர் மீது ஒருவர் நடப்பார்கள். நகரச் சுவர்கள் கீழேத் தள்ளப்படும். பள்ளத்தாக்கில் உள்ள ஜனங்கள் நகரத்திலுள்ள மலை மேல் உள்ள ஜனங்களைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். ௬ ஏலாமிலிருந்து வந்த குதிரை வீரர்கள் தங்கள் அம்புகள் நிரப்பப்பட்ட பைகளை எடுத்துக்கொண்டு போர் செய்யப் போவார்கள். கீர் நாட்டு ஜனங்கள் தங்கள் கேடயங்களோடு ஆரவாரம் செய்வார்கள். ௭ உங்களது சிறப்பான பள்ளத்தாக்கில் படைவீரர்கள் சந்திப்பார்கள். பள்ளத்தாக்கானது இரதங்களால் நிறைந்துவிடும். குதிரை வீரர்களை நகர வாசலுக்கருகில் நிறுத்தி வைப்பார். ௮ அந்த நேரத்தில், யூதாவிலுள்ள ஜனங்கள் தம் ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புவார்கள். அவர்கள் அவற்றை பெத்-ஹ-யார்ல்*பெத்-ஹ-யார் சாலோமோனின் அரண்மனையின் ஒரு பகுதி அவனது ஆயுதங்களையும் செல்வத்தையும் சேர்த்து வைக்கும் இடம். வைத்திருக்கிறார்கள். யூதாவைப் பாதுகாக்கும் சுவர்களைப் பகைவர்கள் இடித்துப் போடுவார்கள். ௯-௧௧ தாவீதின் நகரச் சுவர்கள் விரிசல்விடத் துவங்கின. அந்த விரிசல்களை நீ பார்ப்பாய். எனவே நீ வீடுகளை எண்ணிக் கணக்கிடுவாய். நீ வீட்டிலுள்ள கற்களைக் கொண்டு சுவர்களை நிலைப்படுத்த பயன்படுத்துவாய். இரண்டு சுவர்களுக்கு இடையில் பழைய ஓடையில் உள்ள தண்ணீரைச் சேமித்து வைக்க இடம்பண்ணுவாய். நீ தண்ணீரைப் பாதுகாப்பாய்.
உன்னைக் காத்துக்கொள்ள நீ இவ்வாறு அனைத்தையும் செய்வாய். ஆனால் நீ இவற்றையெல்லாம் செய்த தேவனை நம்பமாட்டாய். நீண்ட காலத்திற்கு முன்பே இவற்றைச் செய்தவரை (தேவனை) நீ பார்க்கமாட்டாய்.
௧௨ எனவே, சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், ஜனங்களிடம் அவர்களது மரித்துப்போன நண்பர்களுக்காக அழவும் சோகப்படவும் சொல்வார். ஜனங்கள் தங்கள் தலைகளை மழித்துக்கொண்டு, துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.
௧௩ ஆனால், பார்! ஜனங்கள் இப்பொழுது மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
அவர்கள் சந்தோஷமாய் கொண்டாடுகிறார்கள்.
ஜனங்கள் சொல்லுகிறதாவது: “ஆடுகளையும் மாடுகளையும் கொல்லுங்கள்.
நாம் கொண்டாடுவோம்.
உங்கள் உணவை உண்ணுங்கள். திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
உண்ணுங்கள் குடியுங்கள்.
ஏனென்றால், நாளை மரித்துவிடுவோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
௧௪ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னிடம் இவற்றையெல்லாம் சொன்னார். இவற்றை நான் என் காதுகளால் கேட்டேன். “நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். குற்றம் மன்னிக்கப்படுவதற்கு முன்னால் நீங்கள் மரித்துப் போவீர்கள் என்று நான் உறுதிபடக் கூறுகிறேன்!” சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
செப்னாவிற்கு தேவனுடைய செய்தி
௧௫ சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், செப்னா என்ற வேலைக்காரனிடம் போய், அந்த வேலைக்காரனே அரண்மனையின் மேலாளிடம்: ௧௬ “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் குடும்பத்திலுள்ள யாராவது இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? ஏன் இங்கே ஒரு கல்லறையை உருவாக்கினாய்?” என்று அந்த வேலைக்காரனைக் கேள்.
அதற்கு ஏசாயா, “இந்த மனிதனைப் பாருங்கள்! இவன் தனது கல்லறையை உயர்ந்த இடத்தில் அமைத்துக்கொண்டிருக்கிறான். இந்த மனிதன் அவனது கல்லறையை அமைக்க பாறைக்குள் வெட்டிக்கொண்டிருக்கிறான்.
௧௭-௧௮ “மனிதனே, கர்த்தர் உன்னை நசுக்கி விடுவார். கர்த்தர் உன்னை உருட்டி சிறு உருண்டையாக்கி வெகு தொலைவிலுள்ள இன்னொரு நாட்டின் திறந்த கைகளில் எறிந்துவிடுவார். அங்கே நீ மரித்துப் போவாய்” என்று கூறினான்.
கர்த்தர்: “நீ உனது இரதங்களைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்தத் தொலைதூர நாட்டிலுள்ள உனது புதிய அரசன் உன்னுடையதைவிட சிறந்த இரதங்களை வைத்திருப்பான். அவனது அரண்மனையில் உனது இரதங்கள் முக்கியத்துவம் பெறாது. ௧௯ உன்னை உன் பதவியை விட்டுத் துரத்திவிடுவேன். உனது முக்கியமான வேலையிலிருந்து உன்னைப் புதிய அரசன் எடுத்து விடுவான். ௨௦ அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் மகனான எலியாக்கீமை அழைப்பேன். ௨௧ நான் உனது ஆடையை எடுத்து அந்த வேலைக்காரன் மீது போடுவேன். நான் அவனுக்கு உனது செங்கோலைக் கொடுப்பேன். நான் உனக்குரிய முக்கியமான வேலையை அவனுக்குக் கொடுப்பேன். அந்த வேலைக்காரன் எருசலேம் ஜனங்களுக்கும் யூதாவின் குடும்பத்திற்கும் ஒரு தந்தையைப்போல இருப்பான்.
௨௨ “தாவீதின் வீட்டுச் சாவியை அந்த மனிதனின் கழுத்தைச்சுற்றி நான் போடுவேன். அவன் ஒரு கதவைத் திறந்தால், அக்கதவு திறந்தே இருக்கும். எந்த நபராலும் அதனை அடைக்கமுடியாது. அவன் ஒரு கதவை அடைத்தால், அது மூடியே இருக்கும் எந்த நபராலும் அதனைத் திறக்கவே முடியாது. அந்த வேலையாள், தந்தையின் வீட்டிலுள்ள மதிப்பிற்குரிய நாற்காலியைப்போல இருப்பான். ௨௩ நான் மிகப்பலமான பலகையில் அடிக்கப்பட்ட ஆணியைப் போல அவனைப் பலமுள்ளவனாக்குவேன். ௨௪ அவன் தந்தையின் வீட்டிலுள்ள அனைத்து மதிப்பும், முக்கியத்துவமும் கொண்ட பொருட்களெல்லாம் அவன்மேல் தொங்கும். முதியவர்களும், சிறுவர்களும் அவனைச் சார்ந்து இருப்பார்கள். அந்த ஜனங்கள் சிறு பாத்திரங்களும், தண்ணீர் நிரம்பிய பெரிய பாட்டில்களும் அவனுக்குமேல் தொங்குவதுபோல் இருக்கும்.
௨௫ “அந்த நேரத்தில், பலமான பலகையில் அடிக்கப்பட்டிருந்த ஆணியானது (செப்னா) பலவீனமாகி உடைந்துபோகும். அந்த ஆணி தரையில் விழுந்துவிட அந்த ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அனைத்து பொருட்களும் விழுந்து அழிந்துபோகும். பிறகு நான் சொன்ன அனைத்தும் நிகழும் (இவையெல்லாம் நிகழும்.” ஏனென்றால், கர்த்தர் அவற்றைச் சொன்னார்).
*௨௨:௮: பெத்-ஹ-யார் சாலோமோனின் அரண்மனையின் ஒரு பகுதி அவனது ஆயுதங்களையும் செல்வத்தையும் சேர்த்து வைக்கும் இடம்.