௩
இயேசுவும் நிக்கொதேமுவும்
௧ நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன். ௨ ஓர் இரவு அவன் இயேசுவிடம் வந்தான். “போதகரே! நீங்கள் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனின் உதவியின்றி எவரொருவராலும் நீர் செய்வதுபோன்ற அற்புதங்களைச் செய்ய இயலாது” என்று சொன்னான்.
௩ அதற்கு இயேசு “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.
௪ அதற்கு நிக்கொதேமு “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.
௫ இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. ௬ ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. ௭ நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ ௮ காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார்.
௯ “இவை எவ்வாறு இயலும்?” என்று நிக்கொதேமு கேட்டான்.
௧௦ “நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப்பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே! ௧௧ நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. ௧௨ நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. ௧௩ பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.
௧௪ “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.*வனாந்தரத்தில்...வேண்டும் தேவனின் மக்கள் பாம்புக்கடியால் செத்துக்கொண்டிருந்தபோது தேவன் மோசேயிடம் வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து கம்பத்தின்மேல் வைத்து அதனைப் பார்த்து குணமடையச் சொன்னார். ௧௫ பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.
௧௬ “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். ௧௭ தேவன் தன் மகனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது மகனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் மகனை அனுப்பினார். ௧௮ தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே மகன் மீது நம்பிக்கை இல்லை. ௧௯ இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். ௨௦ தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். ௨௧ ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும்”†வாக்கியம் 16-21 சில அறிஞர்கள் 16 முதல் 21 வரையிலான வாக்கியங்கள் இயேசுவின் வார்த்தைகள் என்று எண்ணினர். மற்றவர்கள் யோவானால் எழுதப்பட்டது எனக் கருதினர். என்று இயேசு கூறினார்.
இயேசுவும், யோவான் ஸ்நானகனும்
௨௨ அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். ௨௩ யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். ௨௪ (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).
௨௫ யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். ௨௬ ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர்.
௨௭ “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். ௨௮ ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ ௨௯ மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். ௩௦ இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.
பரலோகத்திலிருந்து வந்தவர்
௩௧ “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். ௩௨ அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. ௩௩ அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். ௩௪ தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். ௩௫ பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். ௩௬ இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.
*௩:௧௪: வனாந்தரத்தில்...வேண்டும் தேவனின் மக்கள் பாம்புக்கடியால் செத்துக்கொண்டிருந்தபோது தேவன் மோசேயிடம் வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து கம்பத்தின்மேல் வைத்து அதனைப் பார்த்து குணமடையச் சொன்னார்.
†௩:௨௧: வாக்கியம் 16-21 சில அறிஞர்கள் 16 முதல் 21 வரையிலான வாக்கியங்கள் இயேசுவின் வார்த்தைகள் என்று எண்ணினர். மற்றவர்கள் யோவானால் எழுதப்பட்டது எனக் கருதினர்.