௧௯
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குரியவர்கள்
௧ கர்த்தர் மோசேயிடம், ௨ “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நீ கூற வேண்டியதாவது: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர். எனவே, நீங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும்.
௩ “உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யவேண்டும். என் ஓய்வு நாட்களை*ஓய்வு நாட்கள் அல்லது வாரத்தின் ஏழாவது நாள். இது சனிக்கிழமையை குறிக்கலாம் அல்லது ஜனங்கள் வேலை செய்யக் கூடாத எல்லா விசேஷ நாட்களையும் குறிக்கலாம். ஆசரிக்கவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்!
௪ “விக்கிரகங்களை வணங்காதீர்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உருவாக்காதீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
௫ “நீங்கள் சமாதானப் பலியைக் கர்த்தருக்குக் கொடுக்கும்போது அது அங்கீகரிக்கப்படத்தக்க சரியான வழியிலேயே செய்யவேண்டும். ௬ நீங்கள் பலிகொடுத்த நாளிலும், மறுநாளும் அதனை உண்ணலாம். ஆனால் அந்த உணவில் மீதியானது மூன்றாவது நாளும் இருந்தால் அதனை நெருப்பில் போட்டு எரித்துவிட வேண்டும். ௭ மூன்றாவது நாள் பலியின் மீதியான எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. இது தீட்டானது, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ௮ இதனை எவராவது செய்தால் அது பாவமாயிருக்கும். ஏனென்றால் அவர்கள் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றை மதிக்கவில்லை. இத்தகைய மனிதர்கள் தம் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள்.
௯ “அறுவடைக் காலத்தில் நீங்கள் விளைந்த பயிரை அறுவடை செய்யும்போது வயலின் எல்லாப் பகுதிகளையும் மூலைகளையும் சேர்த்து அறுக்காதீர்கள். தானியங்கள் தரையில் சிதறுமானால் அவற்றைச் சேகரித்து அள்ளிக்கொள்ளாதீர்கள். ௧௦ உங்கள் திராட்சைக் கொடியில் உள்ள அனைத்து திராட்சைப் பழங்களையும் பறிக்காதீர்கள். தரையில் விழும் திராட்சைப் பழங்களையும் பொறுக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
௧௧ “நீங்கள் திருடக்கூடாது. நீங்கள் ஜனங்களை ஏமாற்றவும் கூடாது. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ௧௨ எனது பெயரைப் பயன்படுத்தி பொய் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தேவனின் பெயரை மதிக்காமல் இருக்கிறீர்கள். நானே கர்த்தர்.
௧௩ “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள்.
௧௪ “செவிடர்களை நீங்கள் சபிக்காதீர்கள். குருடன் விழுந்துவிடும்படி அவன் எதிரே எதுவும் போடாதீர்கள். உங்கள் தேவனுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும். நானே கர்த்தர்!
௧௫ “நீங்கள் நியாயத்தீர்ப்பில் நடுநிலையுடன் இருங்கள். ஒருவன் ஏழை என்பதினால் சிறப்பான சலுகையோ அல்லது ஒருவர் முக்கியமான மனிதர் என்பதினால் விசேஷ சலுகையோ செய்யக் கூடாது. உனது அயலானுக்குத் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையில் இருந்து சொல்ல வேண்டும். ௧௬ மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்!
௧௭ “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. ௧௮ உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்!
௧௯ “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இருவிதமான மிருகங்களைச் சேர்த்து இனப்பெருக்கம் செய்யக்கூடாது. உங்களது வயலில் இரண்டுவிதமான விதைகளை விதைக்கக்கூடாது. இரண்டு விதமான நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது.
௨௦ “அடுத்தவனிடம் அடிமையாய் இருக்கிற ஒரு பெண்ணுடன் ஒருவன் பாலியல் உறவுகொள்ள நேரிடலாம். ஆனால் அவளை வாங்கவோ அவளுக்குச் சுதந்திரம் அளிக்கவோ முடியாது. இவ்வாறு நடந்தால் இது தண்டனைக்குரியது. ஆனால் இது மரணத்திற்குரியது அல்ல. ஏனென்றால் அவள் சுதந்திரமானவள் அல்ல. ௨௧ அவன் குற்றபரிகார பலியாக ஆட்டுக்கடா ஒன்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரவேண்டும். ௨௨ அவன் சுத்திகரிக்கப்படும்படி ஆசாரியன் பாவ நிவிர்த்தி செய்வான். கர்த்தருக்கு முன்பாக ஆசாரியன் ஆட்டுக்கடாவை குற்றபரிகார பலியாகச் செலுத்த வேண்டும், அப்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
௨௩ “வருங்காலத்தில் உங்கள் நாட்டுக்குள் நுழைந்த பின்பு உணவுக்காகப் பலவிதமான மரங்களை நீங்கள் நடுவீர்கள். ஒரு மரத்தை நட்டபிறகு மூன்று வருடத்திற்கு அதிலுள்ள பழங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். ௨௪ நான்காவது ஆண்டில் கிடைக்கும் பழங்கள் கர்த்தருக்குரியவை. அவற்றப் பரிசுத்தக் காணிக்கையாகக் கர்த்தரைத் துதிப்பதற்காகக் கொடுக்க வேண்டும். ௨௫ ஐந்தாவது ஆண்டில் அம்மரத்திலுள்ள கனியை நீங்கள் உண்ணலாம். அம்மரம் உங்களுக்காக மேலும் மேலும் பழங்களைத் தரும். உனது தேவனாகிய கர்த்தர் நானே.
௨௬ “இரத்தம் இருக்கிற இறைச்சியை நீங்கள் உண்ணக் கூடாது.
“மாயவேலைகளைப் பயன்படுத்தவோ, அல்லது எதிர்காலத்தைப்பற்றி அறிய மந்திர, தந்திர வழிகளில் முயற்சி செய்யவோ கூடாது.
௨௭ “உன் முகத்தில் வளருகிற முடியையும், தாடியையும் மழிக்கக் கூடாது. ௨௮ மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர்.
௨௯ “உனது மகள் வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படிவிடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது.
௩௦ “எனது ஓய்வு நாளில் நீங்கள் வேலை செய்யக்கூடாது. என் பரிசுத்தமான இடத்தை நீங்கள் மதிக்க வேண்டும். நானே கர்த்தர்.
௩௧ “மந்திரவாதிகளிடமும் செத்தவர்களிடமும் தொடர்புகொள்வதாகக் கூறுபவர்களிடமும் புத்திமதி கேட்டு செல்லாதீர்கள். அவர்கள் உங்களைத் தீட்டுப்படுத்துவார்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
௩௨ “முதியவர்களுக்கு மரியாதை கொடு. அவர்கள் அறைக்குள் வரும்போது எழுந்து நில். உங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துங்கள். நானே கர்த்தர்.
௩௩ “உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே. ௩௪ நீ உனது நாட்டாரை மதிப்பதுபோலவே அந்நியர்களையும் மதிக்க வேண்டும். நீ உன்னையே நேசிப்பது போல அந்நியர்களையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நீங்களும் முன்பு எகிப்தில் அந்நியராயிருந்தீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
௩௫ “நியாய விசாரணையின்போது நடு நிலமையில் இருங்கள். அளக்கும்போதும், நிறுக்கும்போதும் நேர்மையாக இருங்கள். ௩௬ உங்கள் கூடைகளும், ஜாடிகளும் சரியான அளவுள்ளவையாக இருக்கட்டும். உங்கள் எடைக் கற்களும், தராசும் பொருட்களைச் சரியாக எடை போடட்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எகிப்திலிருந்து உங்களை நானே வெளியே அழைத்து வந்தேன்.
௩௭ “எனது கட்டளைகளையும், எனது விதிகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நானே கர்த்தர்” என்று கூறினார்.

*௧௯:௩: ஓய்வு நாட்கள் அல்லது வாரத்தின் ஏழாவது நாள். இது சனிக்கிழமையை குறிக்கலாம் அல்லது ஜனங்கள் வேலை செய்யக் கூடாத எல்லா விசேஷ நாட்களையும் குறிக்கலாம்.