௨௭
வாக்குத்தத்தங்கள் முக்கியமானவை
௧ கர்த்தர் மோசேயிடம், ௨ “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கர்த்தரிடம் ஒருவன் சிறப்பான பொருத்தனை ஒன்றைச் செய்திருக்கலாம். அவன் கர்த்தருக்கு ஒரு நபரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். அந்த நபர் கர்த்தருக்குச் சிறப்பான ஊழியம் செய்வான். ஆசாரியன் அவனுக்கென்று ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நபரைத் திரும்பப் பெற வேண்டுமானால் அவனுக்குரிய மீட்பின் தொகையைக் கொடுக்க வேண்டும். ௩ இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு ஆணின் விலை ஐம்பது வெள்ளிச் சேக்கலாகும். (நீங்கள் இதற்கு அதிகாரப்பூர்வமான பரிசுத்த இடத்தின் சேக்கலின் அளவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.) ௪ இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும். ௫ ஐந்து வயது முதல் இருபது வயதுவரை உடைய ஒரு ஆண்மகனின் விலை இருபது வெள்ளிச் சேக்கலாகும். ஐந்து வயது இருபது வயது வரை உடைய ஒரு பெண்ணின் விலை பத்து வெள்ளிச் சேக்கலாகும். ௬ ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண் குழந்தையின் விலை ஐந்து சேக்கலாகும். ஒரு பெண் குழந்தையின் விலை மூன்று சேக்கலாகும். ௭ அறுபதும் அதற்கும் மேலும் ஆன ஒரு முதியவனின் விலை பதினைந்து சேக்கலாகும். இது போன்ற முதிய பெண்ணின் விலை பத்து சேக்கலாகும்.
௮ “ஒருவேளை அவன் அப்பணத்தைச் செலுத்த முடியாத அளவிற்கு ஏழையாக இருந்தால் அவனை ஆசாரியனிடம் அழைத்துவர வேண்டும். அவன் செலுத்த வேண்டிய தொகையைப்பற்றி ஆசாரியனே முடிவு செய்வான்.
கர்த்தருக்கான காணிக்கைகள்
௯ “கர்த்தருக்கான பலிகளாக சில மிருகங்களைப் பயன்படுத்தலாம். ஒருவன் இத்தகைய மிருகங்களைக் கொண்டுவந்தால் அவை பரிசுத்தமடைந்துவிடும். ௧௦ அவன் அந்த மிருகத்தை கர்த்தருக்கு தருவதாக வாக்களித்திருக்கலாம். எனவே அவன் அதற்குப் பதிலாக வேறு மிருகத்தைக் கொண்டுவர முயலக்கூடாது. மோசமான மிருகத்துக்குப் பதிலாக நல்ல மிருகத்தையோ, நல்ல மிருகத்துக்குப் பதில் மோசமான மிருகத்தையோ, கொண்டுவர முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு ஒருவன் செய்தால் அந்த இரண்டு மிருகங்களுமே பரிசுத்தமாகி விடுவதால், இரண்டுமே கர்த்தருக்குரியதாகிவிடும்.
௧௧ “சில மிருகங்களைக் கர்த்தருக்கு பலியாகத் தர இயலாது. இத்தகைய தீட்டுள்ள மிருகத்தை ஒருவன் கர்த்தருக்குக் கொண்டு வந்தால், அதனை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். ௧௨ ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். அம்மிருகம் நல்லதா, கெட்டதா என்பதைப்பற்றி வேறுபாடு எதுவும் இல்லை. எனவே ஆசாரியன் முடிவு செய்வதே அம்மிருகத்தின் விலையாகும். ௧௩ ஒருவேளை அவன் அந்த மிருகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விலையோடு ஐந்தில் ஒரு பங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
வீட்டின் மதிப்புத் தொகை
௧௪ “ஒருவன் தனது வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அர்ப்பணித்தால், அதன் விலையை ஆசாரியன் முடிவு செய்ய வேண்டும். அவ்வீடு நல்லது, கெட்டது என்பது பற்றி வேறுபாடு இல்லை. ஆசாரியன் தீர்மானிப்பதே அவ்வீட்டின் விலையாகும். ௧௫ ஆனால் வீட்டுக்காரன் அவ்வீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் வீட்டின் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு வீடு அவனுக்குரியதாகும்.
சொத்தின் மதிப்பு
௧௬ “ஒருவன் தனது வயல்களின் ஒரு பாகத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் அதன் விலையானது அதில் எவ்வளவு விதை விதைக்கலாம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். ஒருகலம்*கலம் 6 புஷெல் என்ற அளவுக்கு சமமான ஒரு அளவையாகும். வாற் கோதுமை, விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்பட வேண்டும். ௧௭ ஒருவேளை வயலை யூபிலி ஆண்டில் தேவனுக்குக் கொடுத்தால், அதன் விலையை ஆசாரியன் தீர்மானிப்பான். ௧௮ அவன் தனது வயலை யூபிலி ஆண்டுக்குப் பிறகு கொடுத்தால் ஆசாரியன் அதன் விலையைச் சரியாகக் கணக்கிடவேண்டும். அவன் அடுத்த யூபிலிக்கான ஆண்டு எண்ணிக்கையைக் கணக்கிட்டு விலையைச் சொல்லுவான். ௧௯ வயலைக் கொடுத்தவன் திரும்பப்பெற வேண்டும் என்று விரும்பினால் வயலின் விலையோடு ஐந்தில் ஒரு பங்கு மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். பிறகு அது அவனுக்கு உரிமை உடையதாகும். ௨௦ ஒருவேளை அவன் திரும்ப விலை கொடுத்து வாங்கிக்கொள்ளாவிட்டால், அவ்வயல் தொடர்ந்து ஆசாரியர்களுக்கு உரியதாகும். ஒருவேளை அந்த வயல் வேறுயாருக்கேனும் விற்கப்பட்டால், அவன் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது. ௨௧ எனவே வயலுக்குச் சொந்தக்காரன் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், யூபிலி ஆண்டு வந்தாலும் அது கர்த்தருக்கு பரிசுத்தமானதாக விளங்கும், என்றென்றும் ஆசாரியர்களுக்கு உரிமை உடையதாக இருக்கும். அது கர்த்தருக்கே முழுமையாகக் கொடுக்கப்பட்ட நிலம்போல் இருக்கும்.
௨௨ “ஒருவன் கர்த்தருக்கு அர்ப்பணித்த நிலம் அவன் விலைக்கு வாங்கியதாக இருக்கலாம். அது அவனது குடும்பச் சொத்தாக இல்லாமல் இருக்கலாம். ௨௩ அப்போது ஆசாரியன் யூபிலி ஆண்டுகுரிய ஆண்டுகளைக் கணக்கிட்டு அதன் விலையை முடிவு செய்வான். அது கர்த்தருக்கு உரியதாக இருக்கும். ௨௪ பிறகு யூபிலி ஆண்டில் அந்நிலம் மீண்டும் அந்நிலத்திற்கு சொந்தமான குடும்பத்திற்கே போய்ச் சேரும்.
௨௫ “இதன் விலையை முடிவு செய்யும் போது அதிகாரப்பூர்வமான அளவை பயன்படுத்த வேண்டும். ஒரு சேக்கல் என்பது இருபது கேராவாகும்.
மிருகங்களின் மதிப்புத் தொகை
௨௬ “ஜனங்கள் கர்த்தருக்கு மாடுகளையோ, ஆடுகளையோ சிறப்புக் காணிக்கைளாகக் கொடுக்கலாம். அவை முதலில் பிறந்தவையாக இருப்பின் அது ஏற்கெனவே கர்த்தருக்கு உரியது. எனவே அவற்றை ஜனங்கள் சிறப்புக் காணிக்கையாகக் கொடுக்க முடியாது. ௨௭ ஜனங்கள் முதலில் பிறந்த மிருகங்களைக் கர்த்தருக்கே கொடுக்க வேண்டும். ஆனால் அது தீட்டுள்ளதாக இருந்தால் அவன் அதனைத் திருப்பி வாங்கிக்கொள்ளவேண்டும். ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து அதனை வாங்கிக்கொள்ள வேண்டும். அவன் அதனைத் திருப்ப வாங்கிக்கொள்ளாவிட்டால் ஆசாரியன்தான் விரும்புகிற விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிட வேண்டும்.
சிறப்புக் காணிக்கைகள்
௨௮ “ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அன்பளிப்புகளில் சில சிறப்பான அன்பளிப்புகள்சிறப்பான அன்பளிப்புகள் இது பொதுவாக போரில் கைப்பற்றிய பொருள்களைக் குறிக்கும் இந்தப் பொருள்கள் (காணிக்கைகள்) கர்த்தருக்கு மட்டுமே உரியது. எனவே இவை வேறெதற்கும் பயன்படுத்தப்பட முடியாது. உள்ளன. இவை கர்த்தருக்கே உரியவை. அவற்றைக் கொடுத்தவன் திருப்பி வாங்கிக்கொள்ளவும், விற்கவும் முடியாது. இவை கர்த்தருக்கே சொந்தமானவை. காணிக்கைகளில் மனிதர்கள், மிருகங்கள், குடும்பச் சொத்திலுள்ள வயல்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். ௨௯ சிறப்புக் காணிக்கையாக மனிதனைக் கொடுத்தால், அவனைத் திரும்ப விலைக்கு வாங்க முடியாது. அவன் கொல்லப்பட வேண்டும்.
௩௦ “விளைச்சலில் பத்தில் ஒருபாகம் கர்த்தருக்கு உரியது. வயல்களில் விளைப வைகளிலும், மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்கே உரியது. ௩௧ எனவே எவனாவது இதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதன் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
௩௨ “ஒருவனது மாடு அல்லது ஆட்டு மந்தையில் பத்தில் ஒரு பங்கான மிருகங்கள் கர்த்தருக்கு உரியவை. ௩௩ கர்த்தருக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மிருகங்கள் நல்லவையா, கெட்டவையா என்பதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்காக அவன் வேறு மிருகங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். அவன் அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்பினால் இரண்டு மிருகங்களுமே கர்த்தருக்கு உரியதாகும். இவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
௩௪ இவை அனைத்தும் கர்த்தர் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளாகும். இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்காகச் சீனாய் மலையில் அவர் கொடுத்தார்.

*௨௭:௧௬: கலம் 6 புஷெல் என்ற அளவுக்கு சமமான ஒரு அளவையாகும்.

௨௭:௨௮: சிறப்பான அன்பளிப்புகள் இது பொதுவாக போரில் கைப்பற்றிய பொருள்களைக் குறிக்கும் இந்தப் பொருள்கள் (காணிக்கைகள்) கர்த்தருக்கு மட்டுமே உரியது. எனவே இவை வேறெதற்கும் பயன்படுத்தப்பட முடியாது.