௧௮
பலன் தரும் தேவன்
௧ சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: ௨ “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். ௩ அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். ௪ அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். ௫ ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.
௬ “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். ௭ தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். ௮ நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.
தேவனுக்கு ஏற்றவன் யார்?
௯ தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். ௧௦ “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். ௧௧ வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். ௧௨ நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.
௧௩ “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். ௧௪ நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”
குழந்தைகளும்-இயேசுவும்
(மத். 19:13-15; மாற். 10:13-16)
௧௫ இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். ௧௬ ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. ௧௭ நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.
செல்வந்தனும் இயேசுவும்
(மத். 19:16-30; மாற். 10:17-31)
௧௮ ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
௧௯ இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். ௨௦ ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’ ”✡யாத். 20:12-16; உபா. 5:16-20-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.
௨௧ ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான்.
௨௨ இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். ௨௩ ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான்.
௨௪ அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! ௨௫ ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.
மீட்கப்படக்கூடியவர் யார்?
௨௬ மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள்.
௨௭ பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.
௨௮ பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான்.
௨௯ இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். ௩௦ இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார்.
இயேசு மரணத்தினின்று எழுவார்
(மத். 20:17-19; மாற். 10:32-34)
௩௧ பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். ௩௨ அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். ௩௩ அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். ௩௪ சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.
குருடனைக் குணமாக்குதல்
(மத். 20:29-34; மாற். 10:46-52)
௩௫ எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். ௩௬ மக்கள் பாதையைக் கடந்து வருவதைக் கேட்டதும் அம்மனிதன், “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” எனக் கேட்டான்.
௩௭ மக்கள் அவனுக்கு, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
௩௮ குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
௩௯ அக்கூட்டத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மக்கள் அக்குருடனை அதட்டினார்கள். அவனைப் பேசாதிருக்கும்படியாகக் கூறினார்கள். ஆனால் அக்குருடன் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டவாறே, “தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
௪௦ இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி, ௪௧ “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?” என்று கேட்டார்.
குருடன், “ஐயா, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.
௪௨ இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.
௪௩ அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.