பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்
(மாற். 2:1-12; லூ. 5:17-26)
௧ இயேசு ஒரு படகில் ஏரியைக் கடந்து மீண்டும் தம் சொந்த நகருக்குத் திரும்பினார். ௨ பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம், “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
௩ இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள். “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
௪ அவர்கள் இவ்வாறு எண்ணியதை இயேசு அறிந்தார். எனவே இயேசு, “நீங்கள் ஏன் தீய எண்ணங்களைச் சிந்திக்கின்றீர்கள்? ௫ பக்கவாத வியாதிக்காரனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’, என்று கூறுவது எளிதா? அல்லது ‘எழுந்து நட’, என்று கூறுவது எளிதா? ௬ ஆனால் மனித குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்கும் வல்லமை இருப்பதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்று சொன்னார். பிறகு அந்த வியாதிக்காரனிடம் இயேசு “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்!” என்று கூறினார்.
௭ அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான். ௮ இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.
இயேசு மத்தேயுவைத் தேர்ந்தெடுத்தல்
(மாற். 2:13-17 லூ. 5:27-32)
௯ அங்கிருந்து இயேசு செல்லும்பொழுது, மத்தேயு என்ற மனிதனைக் கண்டார். மத்தேயு வரி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான். “என்னைத் தொடர்ந்து வா” என்று மத்தேயுவிடம் இயேசு கூறினார். உடனே மத்தேயு எழுந்திருந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான்.
௧௦ இயேசு மத்தேயுவின் வீட்டில் விருந்துண்டார். வரி வசூலிப்பவர்கள் பலரும் தீயவர்கள் பலரும் வந்திருந்து இயேசுவுடனும் அவரது சீஷர்களுடனும் விருந்துண்டனர். ௧௧ அத்தகைய மனிதர்களுடன் இயேசு விருந்துண்டதைப் பரிசேயர்கள் கண்டனர். பரிசேயர்கள் இயேசுவின் சீஷர்களிடம், “ஏன் உங்கள் குருவானவர் வரி வசூலிப்பவர்களுடனும் தீய மனிதர்களுடனும் உணவு உண்கிறார்?” என்று கேட்டனர்.
௧௨ பரிசேயர்கள் இவ்வாறு கூறுவதை இயேசு கேட்டார். எனவே, இயேசு பரிசேயர்களிடம், “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் மருத்துவர் தேவை. ௧௩ நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை.ஓசியா 6:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார்.
வித்தியாசமான போதனை
(மாற். 2:18-22; லூ. 5:33-39)
௧௪ பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள்.
௧௫ அதற்கு இயேசு அவர்களிடம், “திருமணத்தின்போது, மணமகன் உடன் இருக்கும் பொழுது அவன் நண்பர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும் நேரம் வரும். அப்பொழுது மணமகனின் நண்பர்கள் வருத்தம் அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.
௧௬ “ஒருவன் தன் பழைய சட்டையிலுள்ள ஒரு ஓட்டையை தைக்கும்பொழுது, சுருக்கமடையாத புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை. அப்படிச் செய்தால், இணைத்த துண்டுத்துணியானது சுருங்கி சட்டையிலிருந்து கிழிந்துவிடும். அதனால் ஓட்டை மேலும் மோசமடையும். ௧௭ மேலும், மக்கள் ஒருபோதும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகளில் வைப்பதில்லை. ஏனென்றால் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகள் கிழிந்துவிடும். திராட்சை இரசமும் சிந்திவிடும். திராட்சை இரசப் பைகளும் வீணாகும். அதனால், மக்கள் எப்பொழுதும் புதிய திராட்சை இரசத்தை புதிய பைகளிலேயே ஊற்றுகிறார்கள். அதனால் திராட்சை இரசமும் பைகளும் நன்றாக இருக்கும்” என்றார்.
மரித்த பெண் உயிரடைதல், நோயாளிப் பெண் சுகமடைதல்
(மாற். 5:21-43; லூ. 8:40-56)
௧௮ இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி, “என் மகள் சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான்.
௧௯ உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.
௨௦ அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். ௨௧ அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள்.
௨௨ இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம், “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள்.
௨௩ இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். ௨௪ இயேசு, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். ௨௫ அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். ௨௬ இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது.
இயேசு பலரைக் குணமாக்குதல்
௨௭ இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள்.
௨௮ இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள் “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர்.
௨௯ பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார். ௩௦ உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர், “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார். ௩௧ ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.
௩௨ அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை. ௩௩ இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள், “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.
௩௪ ஆனால் பரிசேயர்கள், “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள்.
இயேசுவின் கரிசனை
௩௫ இயேசு எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். பரலோக அரசைப் பற்றிய நற்செய்தியை இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் மக்களுக்குக் கூறினார். இயேசு எல்லாவகையான நோய்களையும் குணமாக்கினார். ௩௬ திரளான மனிதர்களைக் கண்ட இயேசு அவர்களுக்காக வருத்தமடைந்தார். ஏனென்றால், மக்கள் கவலை கொண்டும் ஆதரவற்றும் இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையைப்போல மக்கள் தங்களை வழிநடத்த மேய்ப்பனின்றி இருந்தனர். ௩௭ இயேசு தம் சீஷர்களிடம், “ஏராளமான மக்கள் அறுவடைக்காக (காப்பாற்றப்பட) உள்ளனர். ஆனால் அவர்களை அறுவடை செய்வதற்கோ மிகச் சில பணியாளர்களே உள்ளனர். தேவனுக்கு உரியது அறுவடை (மக்கள்). ௩௮ பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் மேலும் பலரைத் தம் அறுவடையைச் சேகரிக்க அனுப்புவார்” என்றார்.

௯:௧௩: ஓசியா 6:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.