௩
ஆசாரியர்களான ஆரோனின் குடும்பத்தினர்
௧ சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஆசாரியனாகிய ஆரோன், மற்றும் மோசேயின் வம்ச வரலாறு கீழ்க்கண்டவாறு இருந்தது:
௨ ஆரோனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நாதாப் முதல் மகன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள். ௩ இவர்கள் ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பைப் பெற்றிருந்தனர். ௪ ஆனால் நாதாபும் அபியூவும் தங்கள் பாவத்தின் காரணமாக, கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போதே, மரித்துப்போனார்கள். கர்த்தருக்குக் காணிக்கைப் பலி செலுத்தும்போது கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத நெருப்பை அவர்கள் பயன்படுத்தினர். எனவே, நாதாப்பும், அபியூவும் சீனாய் பாலைவனத்திலேயே மடிந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. எனவே, அவர்களின் இடத்தில் எலெயாசாரும், இத்தாமாரும் ஆசாரியர்களாகக் கர்த்தருக்கு ஊழியம் செய்தனர். அவர்களின் தந்தையான ஆரோன் உயிரோடு இருக்கும்போதே இது நிகழ்ந்தது.
ஆசாரியர்களின் உதவியாட்களான லேவியர்கள்
௫ கர்த்தர் மோசேயிடம், ௬ “லேவியர்களின் கோத்திரத்திலிருந்து அனைவரையும், ஆசாரியனாகிய ஆரோனிடம் அழைத்துக் கொண்டு வா. அவர்கள் ஆரோனின் உதவியாட்களாக இருப்பார்கள். ௭ ஆசரிப்புக் கூடாரத்தில் ஆரோன் ஊழியம் செய்யும்போது, அவனுக்கு லேவியர்கள் உதவுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தக் கூடாரத்திற்கு தொழுதுகொள்ள வரும்போதும், லேவியர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். ௮ ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பது இஸ்ரவேல் ஜனங்களின் கடமையாகும். ஆனால் லேவியர்கள் இவற்றைச் சுமந்து இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சேவை செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரத்தில் தொழுதுகொள்ள வேண்டிய முறை இதுவேயாகும்.
௯ “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் லேவியர்களை ஒப்படையுங்கள். அவர்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உதவி செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
௧௦ “ஆரோனையும் அவனது மகன்களையும், ஆசாரியர்களாக ஊழியம் செய்ய நியமனம் செய். அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். இப்பரிசுத்தமான பொருட்களின் அருகில் வேறு எவராவது வர முயன்றால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்றார்.
௧௧ மேலும் கர்த்தர் மோசேயிடம், ௧௨ “இஸ்ரவேல் ஜனங்களின் குடும்பம் ஒவ்வொன்றிலும் முதலில் பிறக்கும் மகனை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு ஊழியம் செய்வதற்காக லேவியர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் எனக்குரியவர்களாக இருப்பார்கள்; எனவே இனி இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முதல் பிள்ளையை எனக்குக் கொடுக்க வேண்டாம். ௧௩ நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக்கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டேன். நானே கர்த்தர்” என்றார்.
௧௪ கர்த்தர் மீண்டும் சீனாய் பாலைவனத்தில் மோசேயோடு பேசி, ௧௫ “லேவியின் எல்லாக் குடும்பங்களையும், கோத்திரங்களையும் ஒருமாத வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகளைக் கணக்கிடு” என்றார். ௧௬ மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவர்களை கணக்கிட்டான்.
௧௭ லேவிக்கு கெர்சோன், கோகாத், மெராரி என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
௧௮ ஒவ்வொருவரும் பல கோத்திரங்களுக்குத் தலைவர்கள்.
கெர்சோன் கோத்திரத்தில் லிப்னீயும், சீமேயியும் இருந்தனர்.
௧௯ கோகாத் கோத்திரத்தில் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் இருந்தனர்.
௨௦ மெராரி கோத்திரத்தில் மகேலியும், மூசியும் இருந்தனர்.
இந்த அனைத்துக் குடும்பங்களும் லேவியின் கோத்திரத்தில் இருந்தனர்.
௨௧ லிப்னீ, சீமேயி ஆகியோரின் குடும்பங்கள், கெர்சோனின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ௨௨ அவர்கள் இரு கோத்திரங்களிலும் ஆண்களும், ஒரு மாத வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளுமாக 7,500 பேர் இருந்தனர். ௨௩ மேற்குப்பக்கத்தில் முகாமை அமைத்துக்கொள்ளுமாறு கெர்சோனியர் கோத்திரங்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தங்கள் முகாமை அமைத்தனர். ௨௪ லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன் கெர்சோனிய கோத்திரத்தினருக்கு தலைவன் ஆனான். ௨௫ ஆசரிப்புக் கூடாரத்தின் காவலோடு பரிசுத்தக் கூடாரத்தையும், வெளிக் கூடாரத்தையும் அதன் மூடியையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கெர்சோனியருக்கு இருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள தொங்கு திரையையும் இவர்களே கவனித்துக்கொண்டனர். ௨௬ மேலும் பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பிரகாரத்தின் மூடு திரைகளையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர். பிரகாரமானது பரிசுத்தக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியிருந்தது. திரைகளுக்குத் தேவையான கயிறு மற்றும் மற்ற பொருட்களுக்கும் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர்.
௨௭ அம்ராம், இத்சேயர் எப்ரோன், ஊசியேல் ஆகிய குடும்பங்கள் கோகாத்தின் கோத்திரத்தில் இருந்தன. ௨௮ இக்கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேலான ஆண் குழந்தைகளுமாக 8,300*8,300 பழங்காலக் கிரேக்க மொழி பெயர்ப்பின் சில பிரதிகளில் “8,300” என்று உள்ளது. எபிரேய பிரதிகளில் “8,600” என்றுள்ளது. பார்க்க, எண்ணாகமம் 3:22, 28, 34, 39 பேர் இருந்தனர். கோகாத்தியர்கள் பரிசுத்தமான இடத்திலுள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வகித்தார்கள். ௨௯ பரிசுத்தக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் கோகாத்தின் கோத்திரங்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். ௩௦ ஊசியேலின் மகனான எல்சாபான் கோகாத்தியரின் கோத்திரங்களுக்குத் தலைவன் ஆனான். ௩௧ அவர்கள் பரிசுத்தப் பெட்டி, மேஜை, குத்து விளக்கு, பீடங்கள், பரிசுத்த இடத்தின் பொருட்கள், தொங்கு திரை, அங்குள்ள அனைத்து வேலைகளுக்கும் உரிய பொருட்களையும் காத்து வந்தனர்.
௩௨ ஆரோனின் மகனாகிய ஆசாரியன் எலெயாசார் லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். இவன் பரிசுத்தப் பொருட்களை காவல் காப்பவர்களுக்கெல்லாம் பொறுப்பாளியாய் இருந்தான்.
௩௩-௩௪ மகேலி, மூசி ஆகியோரின் கோத்திரங்கள் மெராரியின் குடும்பத்தோடு சேர்ந்தது. மகேலியின் கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் குழந்தைகளும் 6,200 பேர் இருந்தனர். ௩௫ அபியாயேலின் மகனாகிய சூரியேல், மெராரி கோத்திரத்தின் தலைவனாய் இருந்தான். பரிசுத்தக் கூடாரத்தின் வடக்கு பக்கத்தில் இவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். ௩௬ மெராரி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசுத்தக் கூடாரத்தின் சட்டங்கள், பலகைகள், தாழ்ப்பாள், தூண்கள், பாதங்கள் மற்றும் அதற்குரிய பொருள்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ௩௭ பரிசுத்தக் கூடாரத்தின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள தூண்கள், பாதங்கள், முளைகள், கயிறுகள் அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர்.
௩௮ மோசே, ஆரோன், அவனது மகன்கள் எல்லோரும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு எதிரில் பரிசுத்தக் கூடாரத்தின் கிழக்கில் முகாமிட்டனர். பரிசுத்த இடத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் அவர்கள் இதனைச் செய்தனர். வேறு யாராவது பரிசுத்த இடத்தின் அருகில் வந்தால், அவர்கள் கொல்லப்பட்டனர்.
௩௯ லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களையும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளையும் கணக்கிடுமாறு கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டார். அவர்களின் மொத்த எண்ணிக்கை 22,000.
முதல் மகன்களின் இடத்தை லேவியர்கள் எடுத்துக்கொள்ளுதல்
௪௦ கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேலில் முதலில் பிறந்த எல்லா ஆண்களையும், குறைந்தது ஒரு மாதமாவது ஆன ஆண் குழந்தைகளையும் கணக்கிடு. அவர்களின் பெயரையும் எழுதி பட்டியலிடு. ௪௧ கடந்த காலத்தில் நான், இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் ஆண் மக்களையெல்லாம் எனக்குரியவர்கள் என்று கூறியிருந்தேன். கர்த்தராகிய நான் இப்போது லேவியர்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் அனைத்து மிருகங்களையும் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, லேவியர்களுக்குரிய முதலில் பிறந்த மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன்” என்றார்.
௪௨ எனவே மோசே, கர்த்தருடைய கட்டளைப்படி செய்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த குழந்தைகளைக் கணக்கெடுத்தான். ௪௩ முதலாவதாக பிறந்த ஆண்களையும், ஒரு மாதமும் அதற்கு மேலுமுள்ள ஆண் குழந்தைகளையும், மோசே பட்டியலிட்டான். அதில் மொத்தம் 22,273 பெயர்கள் இருந்தன.
௪௪ மேலும் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தராகிய நான் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்: ‘இஸ்ரவேலில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலுமுள்ள முதலில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பதிலாக லேவியர்வம்சத்திலுள்ள முதலில் பிறக்கும் ஆண்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். ௪௫ மற்ற இஸ்ரவேலில் முதலில் பிறந்த மிருகங்களுக்குப் பதிலாக லேவியர்களிடமுள்ள முதலில் பிறக்கும் மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். லேவியர்கள் எனக்கு உரியவர்கள். ௪௬ மொத்தம் 22,000 லேவியர்கள் இருந்தனர். ஆனால் மற்ற குடும்பங்களில் 22,273 முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் இருந்தனர். லேவியர்களை விட, முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் 273 பேர் மற்ற குடும்பங்களில் இருந்தனர். ௪௭ அதிகாரப் பூர்வமான அளவை அடிப்படையாய் வைத்துக்கொண்டு, தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாக 273 பேர்களிடமிருந்தும் வாங்கு. (ஒரு சேக்கல் என்பது இருபது கேரா இருக்கும்.) ௪௮ இஸ்ரவேல் ஜனங்களிடம் இருந்து வெள்ளியையும் வசூல் செய். இவற்றை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் கொடுப்பாயாக. இது 273 இஸ்ரவேல் ஜனங்களுக்கான சம்பளத் தொகையாகும்’ ” என்றார்.
௪௯ மற்ற கோத்திரங்களில் இருந்து வந்த 273 பேர்களின் இடத்தை ஈடுசெய்ய போதுமான அளவில் லேவியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே மோசே அந்த 273 பேர்களுக்காக பணம் வசூல் செய்தான். ௫௦ மோசே இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளிடமிருந்து வெள்ளியை வசூல் செய்தான். அதிகாரப் பூர்வமான அளவை வைத்துக்கொண்டு, அவன் 1,365 சேக்கல் வெள்ளியை வசூலித்தான். ௫௧ மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். வெள்ளியை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
*௩:௨௮: 8,300 பழங்காலக் கிரேக்க மொழி பெயர்ப்பின் சில பிரதிகளில் “8,300” என்று உள்ளது. எபிரேய பிரதிகளில் “8,600” என்றுள்ளது. பார்க்க, எண்ணாகமம் 3:22, 28, 34, 39