௭
கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்
௧ எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை மீட்டுக்கொள்ளும்!
௨ நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!
௩ எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
நான் தவறிழைக்க வில்லையென்று உறுதியளிக்கிறேன்!
௪ என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
௫ ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.
௬ கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
௭ கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
௮ கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
௯ தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
தேவனே, நீர் நல்லவர்.
நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
௧௦ நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்குத் தேவன் உதவுகிறார்.
தேவன் என்னைப் பாதுகாப்பார்.
௧௧ தேவன் ஒரு நல்ல நீதிபதி,
எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
௧௨ தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
௧௩ தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.*தேவன்...ஆயத்தமாயிருக்கிறார் எழுத்தின் பிரகாரம் “அவர் திரும்பிவிடமாட்டார். அவர் தன் வாளைக் கூர்மைபடுத்துவார். தம் வில்லை வளைத்து குறிபார்ப்பார். மரண ஆயுதத்தைத் தயாரித்திருக்கிறார். நெருப்பு அம்புகளைச் செய்திருக்கிறார்” எனப் பொருள்படும்.
௧௪ சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
௧௫ அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
௧௬ அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.
௧௭ கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.
*௭:௧௩: தேவன்...ஆயத்தமாயிருக்கிறார் எழுத்தின் பிரகாரம் “அவர் திரும்பிவிடமாட்டார். அவர் தன் வாளைக் கூர்மைபடுத்துவார். தம் வில்லை வளைத்து குறிபார்ப்பார். மரண ஆயுதத்தைத் தயாரித்திருக்கிறார். நெருப்பு அம்புகளைச் செய்திருக்கிறார்” எனப் பொருள்படும்.