௧௧௯
ஆலெப
௧ பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
௨ கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
௩ அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
௪ கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
௫ கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
௬ நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
௭ உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
௮ கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!
பேத்
௯ ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்?
உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
௧௦ நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன்.
தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
௧௧ நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
௧௨ ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
௧௩ உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.
௧௪ வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக்
கற்பதில் களிப்படைவேன்.
௧௫ நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன்.
உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.
௧௬ நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன்.
உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.
கிமெல்
௧௭ உமது ஊழியனாகிய என்னிடம் நல்ல வராயிரும்.
அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
௧௮ கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
௧௯ நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
௨௦ நான் எப்போதும் உமது நியாயங்களைக்
கற்க விரும்புகிறேன்.
௨௧ கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
௨௨ நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
௨௩ தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
௨௪ உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.
டாலெத்
௨௫ நான் விரைவில் மரிப்பேன்.
கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும்.
௨௬ நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன்.
நீர் எனக்கு பதிலளித்தீர்.
இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும்.
௨௭ கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.
நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.
௨௮ நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன்.
நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.
௨௯ கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும்.
உமது போதனைகளால் என்னை வழிநடத்தும்.
௩௦ கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன்.
உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன்.
௩௧ கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன்.
நான் வெட்கமடையவிடாதிரும்.
௩௨ நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும்.
௩௩ கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
௩௪ நான் புரிந்துகொள்ள உதவும்.
நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
௩௫ கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
௩௬ செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
௩௭ கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
௩௮ ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
௩௯ கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
௪௦ பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.
வௌ
௪௧ கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும்.
நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
௪௨ அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும்.
கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன்.
௪௩ உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும்.
கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன்.
௪௪ கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.
௪௫ நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது
சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
௪௬ நான் உமது உடன்படிக்கையை அரசர்களோடு கலந்து ஆலோசிப்பேன்.
அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள்.
௪௭ கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
நான் அக்கட்டளைகளை நேசிக்கிறேன்.
௪௮ கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன்.
அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.
சாயீன்
௪௯ கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும்.
அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
௫௦ நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர்.
உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.
௫௧ என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர்.
ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
௫௨ உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன்.
கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.
௫௩ தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர்.
அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன்.
௫௪ உமது சட்டங்கள் எனது வீட்டின்*வீட்டில் அல்லது “நான் வாழுகின்ற ஆலயத்தில்.” பாடல்களாகின்றன.
௫௫ கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன்.
நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.
௫௬ நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.
கேத்
௫௭ கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
௫௮ கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன்.
நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும்.
௫௯ என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன்.
உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.
௬௦ தாமதமின்றி
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.
௬௧ தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின.
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
௬௨ உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.
௬௩ உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன்.
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.
௬௪ கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
தேத்
௬௫ கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
௬௬ கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
௬௭ நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
௬௮ தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
௬௯ என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
௭௦ அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
௭௧ துன்புறுவது எனக்கு நல்லது.
நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
௭௨ கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
யோட்
௭௩ கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர்.
உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர்.
உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.
௭௪ கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள்,
என்னை மதிக்கிறார்கள்.
நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
௭௫ கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன்.
நீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும்.
௭௬ இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும்.
நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும்.
௭௭ கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும்.
நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன்.
௭௮ என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள்.
அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.
௭௯ உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர்
என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன்.
௮௦ கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச்
செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன்.
கப்
௮௧ நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.
௮௨ நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என் கண்களோ தளர்ந்து போகின்றன.
கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்?
௮௩ குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல
ஆனாலும் நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.
௮௪ எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்?
கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்?
௮௫ சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள்.
அது உமது போதனைகளுக்கு எதிரானது.
௮௬ கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும்.
அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்!
௮௭ அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.
௮௮ கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும்.
நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.
லாமேட்
௮௯ கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும்.
உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
௯௦ நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர்.
கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.
௯௧ உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி
கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.
௯௨ உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால்
எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
௯௩ கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.
௯௪ கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும்.
ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
௯௫ தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள்.
ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
௯௬ உமது சட்டங்களைத் தவிர,
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
மேம்
௯௭ கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
௯௮ கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
௯௯ உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
௧௦௦ நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
௧௦௧ வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
௧௦௨ கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
௧௦௩ என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
௧௦௪ உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
நூன்
௧௦௫ கர்த்தாவே, உமது வார்த்தைகள்
என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
௧௦௬ உமது சட்டங்கள் நல்லவை.
நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
௧௦௭ கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
௧௦௮ கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
௧௦௯ என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
௧௧௦ தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
௧௧௧ கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
௧௧௨ உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
சாமெக்
௧௧௩ கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
௧௧௪ என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.
கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
௧௧௫ கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.
நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
௧௧௬ கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.
நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
௧௧௭ கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.
நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
௧௧௮ கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.
ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
௧௧௯ கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.
எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
௧௨௦ கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.
நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.
ஆயின்
௧௨௧ நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
௧௨௨ என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
௧௨௩ கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
௧௨௪ நான் உமது ஊழியன்.
உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
௧௨௫ நான் உமது ஊழியன்.
உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
௧௨௬ கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
௧௨௭ கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
௧௨௮ நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
பே
௧௨௯ கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
௧௩௦ ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
௧௩௧ கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
௧௩௨ தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
௧௩௩ கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
௧௩௪ கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
௧௩௫ கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
௧௩௬ ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
த்சாதே
௧௩௭ கர்த்தாவே, நீர் நல்லவர்,
உமது சட்டங்கள் நியாயமானவை.
௧௩௮ நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
௧௩௯ என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
௧௪௦ கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
நான் அதை நேசிக்கிறேன்.
௧௪௧ நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
௧௪௨ கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
உமது போதனைகள் நம்பக் கூடியவை.
௧௪௩ எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
௧௪௪ உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.
கோப்
௧௪௫ கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.
எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
௧௪௬ கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்!
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
௧௪௭ நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.
நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
௧௪௮ உமது வார்த்தைகளைக் கற்பதற்கு
இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
௧௪௯ உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.
கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
௧௫௦ ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
௧௫௧ கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.
உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
௧௫௨ பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,
உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.
ரேஷ்
௧௫௩ கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.
நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
௧௫௪ கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.
நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
௧௫௫ தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்
அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
௧௫௬ கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.
நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
௧௫௭ என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.
ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
௧௫௮ நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.
கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.
நான் அதை வெறுக்கிறேன்.
௧௫௯ பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
௧௬௦ கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.
உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஷீன்
௧௬௧ எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
௧௬௨ கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
௧௬௩ நான் பொய்களை வெறுக்கிறேன்!
நான் அவற்றை அருவருக்கிறேன்!
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
௧௬௪ உமது நல்ல சட்டங்களுக்காக
ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
௧௬௫ உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
௧௬௬ கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
௧௬௭ நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
௧௬௮ நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
தௌ
௧௬௯ கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவானாக்கும்.
௧௭௦ கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
௧௭௧ நான் துதிப் பாடல்களைப் பாடிக்களிப்படைகிறேன்.
ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
௧௭௨ உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
௧௭௩ என்னருகில் வந்து எனக்கு உதவும்.
ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
௧௭௪ கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
௧௭௫ கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
௧௭௬ காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.

*௧௧௯:௫௪: வீட்டில் அல்லது “நான் வாழுகின்ற ஆலயத்தில்.”