அத்தியாயம் 22
நியாயப்பிரமாண புத்தகம் கண்டெடுக்கப்படுதல்
யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; போஸ்காத் ஊரைச் சேர்ந்த அதாயாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் எதிதாள். அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருட ஆட்சியிலே, ராஜா மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனைக் யெகோவாவின் ஆலயத்திற்கு அனுப்பி: நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், யெகோவவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல் காக்கிறவர்கள் மக்களின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து, பின்பு அவர்கள் அதைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் யெகோவாவின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரர்களாகிய, தச்சர்களுக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொல்லர்களுக்கும், ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும். ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாக நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா எழுத்தனாகிய சாப்பானை நோக்கி: நான் யெகோவாவின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான். அப்பொழுது சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவிற்கு மறுஉத்திரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கிடைத்த பணத்தை உமது அடியார்கள் சேர்த்துக் கட்டி, அதைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான். 10 எழுத்தனாகிய சாப்பான் மேலும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவிற்கு முன்பாக வாசித்தான். 11 ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, 12 ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் மகனாகிய அக்போருக்கும், எழுத்தனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் வேலைக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது: 13 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் யெகோவாவிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த யெகோவவுடைய கடுங்கோபம் பெரியது என்றான். 14 அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் மகனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் ஆசாரிய *இராஜாவின்ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். 15 அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்திற்கு அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ உரைக்கிறது என்னவென்றால்: 16 இதோ, யூதாவின் ராஜா, வாசித்த புத்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் எழுதப்பட்டிருக்கிற பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும், அதின் குடிமக்களின்மேலும் வரச்செய்வேன். 17 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபம்காட்டினதால், என் கடுங்கோபம் இந்த இடத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று யெகோவ சொல்லுகிறார் என்று சொல்லுங்கள். 18 யெகோவவிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: 19 நான் இந்த இடத்திற்கும் அதின் குடிமக்களுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுததால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். 20 ஆகையால், இதோ, நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த இடத்தின்மேல் வரச்செய்யும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று யெகோவ சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறுஉத்திரவை அவர்கள் போய் ராஜாவிற்குச் சொன்னார்கள்.

*அத்தியாயம் 22:14 இராஜாவின்