யாத்திராகமம்
ஆசிரியர்
இந்த புத்தகமும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான மோசேயினால் எழுதப்பட்டது என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. சந்தேகப்படாமல் மோசே தான் இதின் தெய்வீகமாக வழி நடத்தப்பட்ட ஆசிரியர் என்று இரண்டு காரியங்களால் ஏற்றுக்கொள்ளலாம். யாத்திராகமமே மோசே எழுதின காரியங்களை குறிப்பிடுகிறது. பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; என்று யாத் 34:27 ல் சொல்கிறது யாத். 24:4 ல் சொல்கிறது மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து; ஆகையால் இந்த புத்தகத்தை மோசே தான் எழுதினார் என்பது நியாயமாக இருக்கிறது. இரண்டாவதாக, மோசே தாமே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றவன் பார்வோனுடைய குடும்பத்தில் வளர்க்கப்பட்டு கல்வி கற்றவன். ஆகையால் எழுதுவதிலும் ஞானம் பெற்றவனாய் இருந்தான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அவிசுவாசத்தினால் 40 வருடங்கள் வனாந்திரத்தில் வீணாக சுற்றி அலைக்கழிக்கப்பட்டார்கள். இந்த நாட்களில் தான் இந்த புத்தகம் அதிகமாக எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
எகிப்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களுக்காகவே இது எழுதப்பட்டது. எகிப்திலிருந்து வெளியே வந்த சீனாய் ஜனங்களுக்காக மோசே எழிதினான். (யாத் 17:14; 24:4; 34:27-28).
எழுதப்பட்ட நோக்கம்
இஸ்ரவேலர்கள் எப்படி யெகோவாவின் ஜனங்களாக மாறினார்கள் என்பதையும். தேவனுடைய ஜனங்களாக உடன்படிக்கையின்படி எப்படி வாழவேண்டும் என்பதையும் விவரித்துக் காட்டுகிறது இஸ்ரவேல் ஜனங்களுடன் உடன்படிக்கை செய்த தேவன் உண்மையுள்ளவர், பரிசுத்தமானவர், சகல வல்லமையுள்ளவர். ஆபிரகாமுக்கு செய்யப்பட்ட வாக்குத்தத்ததை ஆபிரகாமின் சந்ததியாரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தபோது தேவனின் குணங்களை தேவனின் பெயர் மூலமாகவும் அவருடைய வல்லமையான செயல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தபடுவதை காண்கிறோம். ஒரு தனிக் குடும்பம் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டு, தேசமாக உருவாகுவதை இந்த புத்தகம் சொல்கிறது. யாத். 2:24; 6:5; 12:37.
மையக் கருத்து
விடுதலை
பொருளடக்கம்
1. முன்னுரை — 1:1-2:25
2. எகிப்தின் அடிமைதனத்திலிருந்து இஸ்ரவேலின் மீட்பு — 3:1-18:27
3. சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட உடன்படிக்கை — 19:1-24:18
4. தேவனுடைய இராஜரீக கூடாரம் — 25:1-31:18
5. கலகத்தினால் தேவனின் சமூகத்தை இழத்தல் — 32:1-34:35
6. தேவனுடைய இராஜரீக கூடாரம் ஸ்தாபிக்கப்பட்டது — 35:1-40:38
அத்தியாயம் 1
இஸ்ரவேலர்கள் எகிப்தில் துன்புறுத்தப்படுதல்
எகிப்திற்குப் போன இஸ்ரவேலுடைய மகன்களின் பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், பென்யமீன், தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே. இவர்கள் யாக்கோபுடன் தங்கள் தங்கள் குடும்பங்களோடு போனார்கள். யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர். யோசேப்பும் அவனுடைய சகோதரர்கள் அனைவரும், அந்தத் தலைமுறையினர் எல்லோரும் மரணமடைந்தார்கள். இஸ்ரவேலர்கள் அதிகமாக பலுகி, ஏராளமாகப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான். அவன் தன்னுடைய மக்களை நோக்கி: “இதோ, இஸ்ரவேலர்களுடைய மக்கள் நம்மைவிட ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாக இருக்கிறார்கள். 10 அவர்கள் பெருகாதபடியும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைவரோடு கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்செய்து, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடியும், நாம் அவர்களைக்குறித்து ஒரு தீர்மானம் செய்யவேண்டும்” என்றான். 11 அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படி, அவர்கள்மேல் மேற்பார்வையாளர்களை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் சேமிப்புக் கிடங்கு பட்டணங்களைக் கட்டினார்கள். 12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாக அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேலர்களைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள். 13 எகிப்தியர்கள் இஸ்ரவேர்களைக் கொடுமையாக வேலைவாங்கினார்கள். 14 கலவையும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையாலும், வயலில் செய்யும் எல்லாவித வேலையாலும், அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்த எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாக நடத்தினார்கள். 15 அதுமட்டுமில்லாமல், எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பெயருடைய எபிரெய மருத்துவச்சிகளுடன் பேசி: 16 “நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும்” என்றான். 17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள். 18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: “நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன” என்று கேட்டான். 19 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள்” என்றார்கள். 20 இதினால் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். மக்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். 21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததால், அவர்களுடைய குடும்பங்கள் செழிக்கும்படிச் செய்தார். 22 அப்பொழுது பார்வோன், “எபிரெயருக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடு வைக்கவும்” தன்னுடைய மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.