எண்ணாகமம்
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் ஆசிரியரும் பஞ்சாகமத்தின் மற்ற நான்கு புத்தகங்களும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான மோசேயினால் எழுதப்பட்டது என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. இந்த புத்தகத்தில், ஜனத்தொகைக் குறித்தும், கோத்திரங்களைக் குறித்தும், ஆசாரியர்கள் வம்சங்களைக் குறித்தும் மற்றும் பல இடங்களைக் குறித்தும் கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. எகிப்து தேசத்தை விட்டு வெளியே வந்த இரண்டாம் வருடத்திலிருந்து 40 வது வருடம் வரை சீனாய் மலை பக்கமாகவே ஏறக்குறைய 38 வருடமாக இஸ்ரவேலர்கள் பாளையும் இறங்கியிருந்த காலங்களில் நடந்த சம்பவங்களை இந்த புத்தகம் விவரிக்கிறது. 38 வருட காரியங்களை குறித்து அதிகம் சொல்லாமல் 2 ஆம் வருடத்திலும் 40 ஆம் வருடத்திலும் நடந்த சம்பவங்களைக் குறித்தும் அதிகமாக விவரிக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 1446 க்கும் 1405 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறிய 2 ஆம் வருடத்தில் தொடங்கின சம்பவங்கள் 1:1 வசனத்தில் தொடங்குகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க செய்யப்பட்ட பிரயாணங்களின் ஆவணங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்த புத்தகத்தில் எழுதி கொடுக்கபட்டிருக்கிறது. பரலோகத்தை நோக்கி பிரயாணம் செய்கிற நமக்கும் நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்துகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க ஆயத்தமாயிருந்த, இஸ்ரவேலின் இரண்டாம் சந்ததியார்கள் விசுவாசத்தோடு தேவன் வாக்குதத்தம் செய்த தேசத்தை சுதந்திரித்துக் கொள்ள இந்த எண்ணாகமம் மோசேயினால் எழுதப்பட்டது. (எண்ணாகமம். 33: 2). தேவன் தன் தேச ஜனங்களுக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது. முதல் சத்தியார் தேவனுடைய உடன்படிக்கைக்கு உண்மை இல்லாதவர்களாய் போனாலும் தேவன் தம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவராயிருக்கிறார். ஜனங்கள் முரட்டாட்டம் செய்து வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இருந்தாலும் இந்த இரண்டாம் சந்ததிக்கு தாம் வாக்கு செய்த தேசத்தை கொடுத்து ஆசிர்வதித்தார்.
மையக் கருத்து
பிரயாணங்கள்.
பொருளடக்கம்
1. வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயுத்தம் ஆகுதல் — 1:1-10:10.
2. சீனாயிலிருந்து காதேசுக்கு செய்த பிரயாணங்கள் — 10:11-12:16
3. மோசேக்கு விரோதமாக எழுந்ததால் உண்டான தாமதங்கள் — 13:1-20:13
4. காதேசிலிருந்து மோவாபின் சமவெளிக்கு செய்த பிரயாணங்கள் — 20:14-22:1
5. மோவாப் தேசத்தில் பிரவேசித்த இஸ்ரவேலர் கானான் தேசத்தை சுதந்தரிக்க எதிர்ப்பார்ப்போடு இருந்தார்கள் — 22:2-32:42
6. பின் சேர்க்கை, மற்றக் காரியங்களைக் குறித்த உபதேசங்கள் — 33:1-36:13
அத்தியாயம் 1
கணக்கெடுத்தல்
இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: “நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள். ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும். உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர். சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல். யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன். இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல். செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப். 10 யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல். 11 பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான். 12 தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர். 13 ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல். 14 காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப். 15 நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா. 16 இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் * ஆயிரம்பேர்களுக்குத் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார். 17 அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, 18 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள். 19 இப்படிக் யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான். 20 இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, 21 ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர். 22 சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, 23 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர். 24 காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 25 காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர். 26 யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 27 யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர். 28 இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 29 இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர். 30 செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 31 செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர். 32 யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 33 எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர். 34 மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 35 மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர். 36 பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 37 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர். 38 தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர். 40 ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 41 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர். 42 நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, 43 நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர். 44 எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். 45 இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட நபர்கள் எல்லோரும், 46 6,03,550 பேராயிருந்தார்கள். 47 லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை. 48 யெகோவா மோசேயை நோக்கி: 49 “நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும், 50 லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும். 51 சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும். 52 இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும். 53 இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். 54 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.

*அத்தியாயம் 1:16 ஆயிரம்பேர்களுக்குத்