அத்தியாயம் 27
செலோப்பியாத்தின் மகள்கள்
யோசேப்பின் மகனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் மகனாகிய மாகீரின் மகனான கிலெயாத்திற்குப் பிறந்த எப்பேருக்குப் மகனாயிருந்த செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று: “எங்களுடைய தகப்பன் வனாந்திரத்தில் மரணமடைந்தார்; அவர் யெகோவாவுக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே இறந்தார்; அவருக்கு மகன்கள் இல்லை. எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும்” என்றார்கள். மோசே அவர்களுடைய நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “செலொப்பியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய். மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும். அவனுக்குக் மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். 10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். 11 அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல்” என்றார்.
மோசே யோசுவாவை தேர்ந்தெடுத்தல்
12 பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேசத்தைப் பார். 13 நீ அதைப் பார்த்தபின்பு, உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்; 14 சபையார் வாக்குவாதம்செய்த சீன் வனாந்திரத்தில் தண்ணீரின் காரியத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யவேண்டிய நீங்கள் என்னுடைய கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்திரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீரின் காரியமே. 15 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: 16 “யெகோவாவுடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இல்லாதபடி, 17 அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாக இருக்கும்படி, அவர்களைப் போகவும் வரவும் செய்யும்படி, மனிதர்களான எல்லோருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய யெகோவா ஒரு வாலிபனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான். 18 யெகோவா மோசேயை நோக்கி: “ஆவியைப் பெற்றிருக்கிற வாலிபனாகிய யோசுவா என்னும் நூனின் மகனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன்னுடைய கையை வைத்து, 19 அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 20 இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படி, உன்னுடைய அதிகாரத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு. 21 அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே*தேவனுடைய சித்தத்தை அறித்துக்கொள்ள ஊரிம் உபயோகிக்கப்பட்டது ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது” என்றார். 22 மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, 23 அவன்மேல் தன்னுடைய கைகளை வைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

*அத்தியாயம் 27:21 தேவனுடைய சித்தத்தை அறித்துக்கொள்ள ஊரிம் உபயோகிக்கப்பட்டது