அத்தியாயம் 15
ஏழு தூதர்களும் ஏழு வாதைகளும்
1 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது. 2 அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன். 3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி:
“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே,
தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்;
பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும்,
உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்?
தேவரீர் ஒருவரே பரிசுத்தர்,
எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்;
உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
5 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது; 6 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். 7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. 8 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.