16
அப்பொழுது பாஷாவுக்கு எதிராக அனானியின் மகன் யெகூவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கும்படி நான் உன்னைப் புழுதியிலிருந்து உயர்த்தினேன். ஆனால் நீயோ யெரொபெயாமின் வழிகளில் நடந்து என் மக்களான இஸ்ரயேலரையும் பாவம் செய்யப்பண்ணி, அவர்களுடைய பாவங்களின் மூலம் எனக்குக் கோபமூட்டினாய். எனவே நான் பாஷாவையும், அவன் குடும்பத்தையும் அழித்தொழிக்கப் போகிறேன். நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போல் உன் குடும்பத்தையும் ஆக்குவேன். பாஷாவுக்கு சொந்தமானவர்களில், பட்டணத்தில் சாகிறவர்களை நாய்கள் தின்னும்; நாட்டிலே சாகிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும்.”
பாஷாவின் அரசாட்சியில் நடந்த மற்றச் சம்பவங்களும், அவனுடைய செயல்களும், சாதனைகளும் இஸ்ரயேலின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. பாஷா தன் முற்பிதாக்களைப்போல இறந்து திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ஏலா அவனுடைய இடத்தில் அரசனானான்.
மேலும் அனானியின் மகனான யெகூ என்ற இறைவாக்கினனுக்கு, பாஷாவுக்கும் அவன் சந்ததிக்கும் எதிராக யெகோவாவின் வார்த்தை வந்தது. ஏனெனில் யெகோவாவின் பார்வையில் அவன் செய்த தீமையினாலும், அவனுடைய செயல்களினால் யெகோவாவைக் கோபமூட்டியபடியினாலும், யெரொபெயாமின் வீட்டைப் போலானபடியினாலும், அவன் யெரொபெயாமின் வீட்டை அழித்தபடியினாலுமே யெகோவாவின் வார்த்தை இப்படி வந்தது.
இஸ்ரயேலில் ஏலாவின் ஆட்சி
யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தி ஆறாவது வருடத்தில் பாஷாவின் மகன் ஏலா இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் திர்சாவில் இரண்டு வருடங்கள் அரசாண்டான்.
அப்போது அவனுடைய தேர்களின் அரைப்பகுதிக்குத் தளபதியும், அதிகாரிகளில் ஒருவனுமான சிம்ரி என்பவன் அவனுக்கு எதிராகச் சதி செய்தான். ஒரு நாள் திர்சாவில் அரண்மனைப் பொறுப்பதிகாரியான அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்தான். 10 சிம்ரி உள்ளே போய் அவனைத் தாக்கிக் கொலைசெய்தான். யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி செய்த இருபத்தேழாம் வருடத்தில் இது நடந்தது. அதன்பின் சிம்ரி தானே அவனுடைய இடத்தில் அரசனானான்.
11 அவன் அரசாளத் தொடங்கி அரியணையில் அமர்ந்தவுடன் பாஷாவின் முழு குடும்பத்தையும் கொன்றொழித்தான். அவனுடைய உறவினரிலோ, சிநேகிதரிலோ ஒரு ஆணையும் மீதியாய் விடவில்லை. 12 யெகூ என்ற இறைவாக்கினன் மூலம் பாஷாவுக்கு எதிராக யெகோவா கூறிய வார்த்தை நிறைவேற்றும்படியாக சிம்ரி பாஷாவின் முழுக் குடும்பத்தையும் அழித்தான். 13 பாஷாவும் அவனுடைய மகன் ஏலாவும் செய்த எல்லாப் பாவங்களாலும், அவர்கள் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணியபடியாலும், அவர்களுடைய பயனற்ற விக்கிரகங்களால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு அவர்கள் கோபமூட்டியபடியாலும் அவர்களுக்கு இப்படி நடந்தது.
14 ஏலாவின் ஆட்சியின் மற்ற சம்பவங்களும் அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரயேலில் சிம்ரியின் ஆட்சி
15 யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தேழாம் வருடத்தில் திர்சாவில் சிம்ரி அரசன் ஏழு நாட்கள் அரசாண்டான். இஸ்ரயேல் படைகள் ஒரு பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனுக்கு அருகே முகாமிட்டிருந்தனர். 16 முகாமிலிருந்த இஸ்ரயேலர் சிம்ரி தங்கள் அரசனுக்கு எதிராகச் சதிசெய்தது மட்டுமல்ல, அவனைக் கொலைசெய்தான் என்று கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் படைத்தளபதியான உம்ரியை அதேநாளிலே, முகாமிலிருக்கும்போதே இஸ்ரயேலின்மேல் அரசனாக்கினார்கள். 17 அப்பொழுது உம்ரியும் அவனுடன் இருந்த எல்லா இஸ்ரயேலரும் கிபெத்தோனைவிட்டு பின்வாங்கி, திர்சாவை முற்றுகையிட்டனர். 18 பட்டணம் பிடிக்கப்பட்டதை சிம்ரி கண்டவுடன் அவன் அரச அரண்மனைக் கோட்டைக்குள் போய் அதற்கு நெருப்பு வைத்து, தானும் அதிலே இறந்தான். 19 சிம்ரி தான் செய்த பாவங்களினாலும், அவன் யெரொபெயாமின் பாவங்களைத் தானும் செய்து, இஸ்ரயேல் மக்களையும் அவனுடைய பாவத்தில் வழிநடத்தியபடியாலும், யெகோவாவினுடைய பார்வையில் தீமை செய்தபடியினாலுமே இது நடந்தது.
20 சிம்ரியின் ஆட்சிக் காலத்தின் மிகுதி நிகழ்வுகளும், அவனுடைய கலகமும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரயேலில் உம்ரியின் ஆட்சி
21 அதன்பின் இஸ்ரயேலர் இரண்டு பிரிவினராகப் பிரிந்தனர். ஒரு பிரிவினர் கீனாத்தின் மகன் திப்னியையும், மற்றப் பிரிவினர் உம்ரியையும் அரசனாக்குவதற்கு ஆதரவளித்தனர். 22 கீனாத்தின் மகன் திப்னிக்குச் சார்பானவர்களைவிட உம்ரிக்குச் சார்பானவர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே திப்னி இறந்தான், அதன்பின் உம்ரி அரசனானான்.
23 யூதாவில் ஆசா அரசாண்ட முப்பத்தோராம் வருடத்தில் உம்ரி இஸ்ரயேலின் அரசனாக வந்து, பன்னிரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இதில் ஆறு வருடங்கள் திர்சாவில் இருந்து அரசாண்டான். 24 இதன்பின் சேமேர் என்பவனிடமிருந்து சமாரிய மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு*அதாவது, சுமார் 70 கிலோகிராம் வெள்ளி வாங்கினான். அந்த மலையில் ஒரு பட்டணத்தைக் கட்டி, முந்தைய சொந்தக்காரனான சேமேரின் பெயரின்படி அதை சமாரியா என அழைத்தான்.
25 ஆனால் உம்ரியோ தன் முன்னோரைவிட அதிக பாவம் செய்து யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். 26 அவன் நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளில் நடந்து இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய பாவத்தையும் செய்தான். இதனாலேயே பயனற்ற விக்கிரகங்களினால் இஸ்ரயேலர் தங்கள் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டினார்கள்.
27 உம்ரியின் ஆட்சியின் மிகுதி நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 28 இதன்பின் உம்ரி தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆகாப் அவனுக்குப்பின் அரசனானான்.
இஸ்ரயேலில் ஆகாபின் ஆட்சி
29 யூதாவின் அரசன் ஆசாவின் முப்பத்தி எட்டாம் வருடத்தில் உம்ரியின் மகன் ஆகாப் இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் இருபத்திரண்டு வருடங்கள் சமாரியாவிலிருந்து இஸ்ரயேலை அரசாண்டான். 30 உம்ரியின் மகன் ஆகாப் தனக்கு முன் அரசாண்ட எல்லோரைப் பார்க்கிலும், யெகோவாவின் பார்வையில் அதிக தீமையைச் செய்தான். 31 நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைத் தான் செய்வது ஒரு அற்பமான செயல் எனக் கருதியது மட்டுமல்ல; சீதோனியரின் அரசன் ஏத்பாகாலின் மகள் யேசபேலையும் திருமணம் செய்து, பாகாலுக்கு சேவைசெய்து அதை வணங்கினான். 32 சமாரியாவில் அவன் கட்டிய பாகாலின் கோவிலில் பாகாலுக்கென்று ஒரு பலி மேடையையும் அமைத்தான். 33 அதோடுகூட ஆகாப், அசேரா விக்கிரக தூணையும் நிறுத்தி, தனக்கு முன் இருந்த எல்லா இஸ்ரயேல் அரசரைக் காட்டிலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டும்படி அதிகமானதைச் செய்தான்.
34 ஆகாபின் காலத்தில் பெத்தேலில் இருந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம் கூறப்பட்ட யெகோவாவின் வார்த்தையின்படியே,யோசு. 6:26 ஈயேல் அஸ்திபாரங்களை போடும்போது தன் மூத்த மகன் அபிராமை சாகக்கொடுத்தான். வாசல்களை அமைக்கும்போது இளையமகன் செகூப்பையும் சாகக்கொடுத்தான்.

*16:24 அதாவது, சுமார் 70 கிலோகிராம் வெள்ளி

16:34 யோசு. 6:26