22
ஆகாபுக்கு எதிரான இறைவாக்கு
1 மூன்று வருடங்களாக சீரியாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையில் யுத்தம் இருக்கவில்லை. 2 ஆனால் மூன்றாம் வருடத்தில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைக் காண்பதற்காகப் போனான். 3 இஸ்ரயேலின் அரசன் தன் அதிகாரிகளைப் பார்த்து, “கீலேயாத்திலுள்ள ராமோத் எங்களுக்குரியது என்றும், அதைச் சீரியரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் இன்னும் ஒன்றுமே செய்யாதிருக்கிறோம் என்றும் உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.
4 எனவே அவன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு என்னுடன் வருவாயா?” என்று கேட்டான்.
அதற்கு யோசபாத் இஸ்ரயேலின் அரசனிடம், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகளைப் போலவும் இருக்கின்றனர்” என்றான். 5 ஆனால், மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம்: “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான்.
6 எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது வேண்டாமா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “நீர் போகலாம். யெகோவா அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள்.
7 ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான்.
8 அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான்.
அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான்.
9 எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான்.
10 இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச அங்கி அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர். 11 அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான்.
12 மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள்.
13 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான்.
14 ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
15 அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது வேண்டாமா?” என்று கேட்டான்.
மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; யெகோவா அரசனாகிய உம்முடைய கையில் அதைக் கொடுப்பார்” என்றான்.
16 அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான்.
17 அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான்.
18 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான்.
19 தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், வலதுபக்கத்திலும் இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் அவரைச் சுற்றி நிற்பதையும் நான் கண்டேன். 20 அப்பொழுது யெகோவா: அந்த சேனையிடம், ‘கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே ஆகாப் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார்.
“அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின. 21 கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது.
22 “ ‘எதினால் நீ அதைச் செய்வாய்’ என்று யெகோவா அதைப் பார்த்துக் கேட்டார்.
“ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது.
“ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார்.
23 “அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர் எல்லாருடைய வாயிலும் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான்.
24 அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான்.
25 அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான்.
26 அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய், 27 அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான்.
28 அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான்.
ஆகாப் கொல்லப்படுதல்
29 எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள். 30 இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச அங்கியை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான்.
31 இப்பொழுது சீரிய அரசனோ தனது முப்பத்தி இரண்டு தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான். 32 தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கூக்குரலிட்டபோது, 33 தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
34 ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் கவசத்தின் இடைவெளி வழியாகப் பாய்ந்து அவனைத் தாக்கியது. அப்பொழுது அரசன் தன் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான். 35 அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சீரியருக்கு எதிர் புறமாக அரசனுடைய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் அரசனைச் சாய்த்து வைத்திருந்தார்கள். அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் ஓடி தேரின் அடித்தளங்களெல்லாம் வழிந்தது. அந்த நாளின் சாயங்காலமே அவன் இறந்தான். 36 சூரியன் அஸ்தமிக்கும்பொழுது, “ஒவ்வொருவனும் தன்தன் பட்டணத்துக்கும் ஒவ்வொருவனும் தன்தன் நாட்டுக்கும் திரும்பிப்போங்கள்” என்றொரு சத்தம் படைகளிடையே எங்கும் பரவியது.
37 அப்படியே அரசன் இறந்து சமாரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டான். அவர்கள் அவனை அங்கே அடக்கம்பண்ணினார்கள். 38 அவர்கள் அந்தத் தேரை சமாரியாவிலுள்ள குளத்தில் கழுவினார்கள். வேசிகள் அதில் குளிப்பார்கள். யெகோவாவின் வார்த்தை அறிவித்திருந்தபடி நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின.
39 ஆகாபின் ஆட்சிக் காலத்திலுள்ள மற்ற நிகழ்வுகளும், செயல்களும், அவன் தந்தத்தைப் பதித்துக் கட்டிய மாளிகையைப் பற்றியும், அவன் திரும்பக்கட்டிய பட்டணங்களைப் பற்றியும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 40 ஆகாப் தன் முற்பிதாக்களோடு இளைப்பாறினான். அவன் மகன் அகசியா அவன் இடத்தில் அவனுக்குபின் அரசனானான்.
யூதாவின் அரசன் யோசபாத்
41 இஸ்ரயேல் அரசனாக ஆகாப் பதவி ஏற்ற நான்காம் வருடத்தில் யூதாவில் ஆசாவின் மகன் யோசபாத் அரசனானான். 42 யோசபாத் அரசனானபோது அவனுக்கு முப்பத்தைந்து வயதாயிருந்தது. அவன் எருசலேமில் இருபத்தைந்து வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சில்கியின் மகள் அசுபாள் என்பவள். 43 அவன் தனது தகப்பன் ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான். அவற்றைவிட்டு அவன் விலகவில்லை. அவன் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றைச் செய்தான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர். 44 அதோடு யோசபாத் இஸ்ரயேல் அரசனுடன் சமாதானமாயுமிருந்தான்.
45 யோசபாத்தின் ஆட்சியைப்பற்றிய மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், போர்த்திறமைகளும் யூதாவின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 46 தன் தகப்பன் ஆசாவின் ஆட்சிக் காலத்துக்குப் பின் இன்னமும் மீதியாயிருந்த கோவில்களில், வேசித்தனத்திற்கு தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து அகற்றிவிட்டான். 47 அந்தக் காலத்தில் ஏதோமில் ஒரு அரசனும் இருக்கவில்லை. ஒரு பிரதிநிதியே அரசாண்டு வந்தான்.
48 யோசபாத் தங்கம் கொண்டுவருவதற்கு ஓப்பீருக்குச் செல்ல தர்ஷீசின்*எபிரெயத்தில் வியாபாரக் கப்பல்கள் எனப்படும். கப்பல்களைக் கட்டுவித்தான். ஆயினும் அக்கப்பல்கள் ஒருபோதும் பயணம் செய்யவில்லை. எசியோன் கேபேரில் அவை சேதமடைந்து விட்டன. 49 அந்த வேளையில் ஆகாபின் மகன் அகசியா யோசபாத்திடம், “என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும்” என்றான். ஆனால் யோசபாத் அதை மறுத்துவிட்டான்.
50 அதன்பின் யோசபாத் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யெகோராம் அவனுடைய இடத்தில் அரசனானான்.
இஸ்ரயேலில் அகசியாவின் ஆட்சி
51 யூதாவில் யோசபாத் அரசாண்ட பதினேழாம் வருடத்திலேயே ஆகாபுடைய மகன் அகசியா சமாரியாவில் இஸ்ரயேலருக்கு அரசனானான். அவன் இஸ்ரயேலரை இரண்டு வருடங்கள் அரசாண்டான். 52 அவன் தன் தகப்பனின் வழிகளிலும், தாயின் வழிகளிலும் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளிலும் நடந்தபடியினால் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். 53 அவன் தன் தகப்பன் செய்ததுபோல பாகாலை வழிபட்டு, பணிசெய்து இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.