13
இறுதி எச்சரிப்புகள்
1 இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வருகிறேன். எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்*உபா. 19:15 என்று, வேதவசனம் சொல்கிறது. 2 நான் இரண்டாவது முறையாக உங்களிடம் வந்திருந்தபோது, ஏற்கெனவே உங்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுதும் நான் உங்களோடு இல்லாதிருந்தாலும், மீண்டும் உங்களை எச்சரிக்கிறேன்: நான் மீண்டும் வரும்போது, முன்பு பாவம் செய்தவர்களையும் இப்பொழுது பாவம் செய்கிறவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டேன். 3 கிறிஸ்து என் மூலமாய்ப் பேசுகிறார் என்பதற்கு அத்தாட்சியை நீங்கள் கட்டாயப்படுத்திக் கேட்பதினால், நான் இப்படிச் செய்வேன். கிறிஸ்து உங்களிடையே பலம் குறைந்தவராக அல்ல, பலமுள்ளவராகவே செயலாற்றுகிறார். 4 உண்மையில் அவர் வலுவற்ற மனித உடலில் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், இறைவனுடைய வல்லமையினாலேயே அவர் உயிர் வாழ்கிறார். அப்படியே நாங்களும் அவருக்குள் பலவீனர்களாய் இருக்கிறோம். ஆனால் இறைவனுடைய வல்லமையினால் உங்கள்பொருட்டு ஊழியம் செய்ய அவருடன் உயிர்வாழ்வோம்.
5 நீங்கள் விசுவாசத்தில் இருக்கிறீர்களா என்று உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பாருங்கள். கிறிஸ்து இயேசு உங்களில் குடியிருக்கிறார் என்ற உணர்வு உங்களுக்கு இல்லையா? அந்த உணர்வு உங்களில் இல்லாவிட்டால், நீங்கள் சோதனையில் தோற்றுப்போய்விட்டீர்கள் என்றே அர்த்தமாகும். 6 நாங்களோ சோதனையில் தோல்வியடையவில்லை என்பது உங்களுக்கு வெளிப்படும் என்றே நம்புகிறேன். 7 நீங்கள் தீமையேதும் செய்யாதிருக்கும்படியாக நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் இப்படி மன்றாடுவது, நாங்கள் சோதனையில் வெற்றியடைந்தோம் என்று மக்கள் காணவேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் தோல்வியடைந்தது போலக் காணப்பட்டாலும், நீங்கள் நன்மையானதையே செய்யவேண்டும் என்றே, நாங்கள் மன்றாடுகிறோம். 8 ஏனெனில், சத்தியத்திற்கு எதிராக நாங்கள் எதையும் செய்யமுடியாது. சத்தியத்திற்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறோம். 9 நாங்கள் பெலவீனமாய் இருக்கின்றபோதும், நீங்கள் பெலமாய் இருக்கின்றதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் முழுமையாக வளர்ச்சியடைய வேண்டும் என்றே நாங்கள் மன்றாடுகிறோம். 10 நான் உங்களிடம் வரும்போது, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்துடன் உங்களுடன் கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை, உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது இவைகளைப் பற்றி நான் எழுதுகிறேன். கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கிற அதிகாரம், உங்களை இடித்து வீழ்த்துவதற்குக் கொடுக்கப்படவில்லை, உங்களைக் கட்டி எழுப்புவதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடைசி வாழ்த்துதல்
11 கடைசியாக பிரியமானவர்களே, நான் விடைபெறுகிறேன். மகிழ்ச்சியாயிருங்கள். முழுநிறைவான வாழ்வுக்கு முயற்சியுங்கள். நான் சொன்னவற்றைக் கவனித்துக் கேளுங்கள். ஒரே மனதுடையவர்களாய் இருங்கள். சமாதானமாய் வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும், சமாதானத்திற்கும், அமைதிக்கும் உரியவரான இறைவன் உங்களுடனே இருப்பார்.
12 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தமிட்டு வாழ்த்துங்கள்.
13 பரிசுத்தவான்கள் எல்லோரும், தங்களுடைய வாழ்த்துதலைத் தெரிவிக்கிறார்கள்.
14 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், இறைவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.