23
1 பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான். 2 பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான். 3 அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.
4 அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
5 அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே”*யாத். 22:28 என்றான்.
6 பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும், மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயனின் மகன். இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற எனது எதிர்பார்ப்பின் நிமித்தமே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான். 7 பவுல் இதைச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர். 8 சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
9 அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று, மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் ஒன்றையும் காணவில்லை, ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைத்தூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள். 10 விவாதம் வன்முறையானபோது, பவுலைச் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று படைத்தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி படைவீரருக்கு உத்தரவிட்டான்.
11 மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.
பவுலைக் கொலைசெய்யச் சூழ்ச்சி
12 மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள். 13 நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள். 14 அவர்கள் தலைமை ஆசாரியர்களிடமும், யூதரின் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம். 15 இப்பொழுது நீங்களும், ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பவுலை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் முறையிடுங்கள். அவனுடைய வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாக முயற்சிசெய்ய வேண்டும். அவன் இங்கே வருவதற்கு முன்பதாகவே, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருப்போம்” என்றார்கள்.
16 ஆனால் பவுலின் சகோதரியின் மகன், இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவன் முகாமுக்குள் போய், இதைப் பவுலுக்குச் சொன்னான்.
17 அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டுபோ; இவன் தலைவனுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது” என்றான். 18 அப்படியே அவன் வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டு போனான்.
அந்த நூற்றுக்குத் தலைவன் படைத்தளபதியிடம், “சிறைக்கைதியாய் இருக்கிற பவுல் என்னை ஆளனுப்பி கூப்பிட்டு, இந்த வாலிபனை உம்மிடம் கூட்டிக்கொண்டு போகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். ஏனெனில், இவன் ஏதோ ஒரு காரியத்தை உம்மிடம் சொல்லவேண்டும்” என்றான்.
19 படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், “நீ எனக்கு சொல்ல விரும்புகிற காரியம் என்ன?” என்று கேட்டான்.
20 அவன் சொன்னதாவது: “பவுலைக் குறித்து இன்னும் அதிகத் தெளிவாய் விசாரணை செய்யப்போவதாக முயற்சி செய்து, அவரை ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக, நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உம்மைக் கேட்டுக் கொள்வதற்கு யூதர்கள் உடன்பட்டிருக்கிறார்கள். 21 ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்கவேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலைசெய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலைசெய்யும்வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று, அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆயத்தமாகி, அவர்களின் வேண்டுகோளுக்கு நீர் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
22 அந்த படைத்தளபதி அந்த வாலிபனைப் போகும்படி சொல்லி, “நீ இதை எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அவனை எச்சரித்தான்.
பவுல் செசரியாவுக்குக் கொண்டு செல்லப்படுதல்
23 பின்பு படைத்தளபதி, தன் கீழுள்ள நூற்றுக்குத் தலைவர்களில் இருவரை அழைத்து, அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு படைவீரரையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள். 24 பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
25 அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
26 கிலவுதியு லீசியா ஆகிய நான்,
மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகிறதாவது:
வாழ்த்துகள்.
27 இந்த மனிதன் பவுல் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று நான் அறிந்து, எனது படைவீரருடன் சென்று, இவனைத் தப்புவித்தேன். 28 அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தேன். 29 அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சட்டத்தைக் குறித்த கேள்விகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரண தண்டனைக்கோ, சிறைத் தண்டனைக்கோ ஏதுவான குற்றச்சாட்டாய் இருக்கவில்லை. 30 இவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, நான் உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பிவைக்கிறேன். இவனைக் குற்றம் சாட்டியவர்களுக்கும், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
31 எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள். 32 மறுநாள் குதிரைவீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு, மற்றவர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள். 33 குதிரைவீரர் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள். 34 ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து, 35 அவன் பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இங்கே வரும்போது, நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.