எஸ்தரின் சரித்திரம்
1
வஸ்தி அரசி நீக்கப்படுதல்
அகாஸ்வேரு அரசனின் காலத்தில் நிகழ்ந்தது இதுவே: இந்த அகாஸ்வேரு இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை*எத்தியோப்பியாவரை அல்லது கூஷ் நாடுவரை பரந்திருந்த நூற்றிருபத்தேழு மாகாணங்களை ஆளுகை செய்தான். அக்காலத்தில் அகாஸ்வேரு அரசன் சூசான் கோட்டைப் பட்டணத்திலுள்ள தனது அரச அரியணையிலிருந்து அரசாட்சி செய்தான். அவன் தனது ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் தனது உயர்குடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விருந்தொன்றைக் கொடுத்தான். அதற்கு பெர்சியா, மேதியா ஆகிய நாடுகளின் இராணுவத் தலைவர்களும், இளவரசர்களும், மாகாணங்களின் உயர்குடி மக்களும் வந்திருந்தார்கள்.
நூற்றெண்பது நாட்களாக அவன் தனது அரசின் திரளான செல்வத்தையும், தனது சிறப்பையும் மகிமையையும், மாட்சிமையையும் காண்பித்தான். இந்த நாட்கள் முடிவடைந்தபின், அரச அரண்மனையில் சுற்றிலும் அடைக்கப்பட்ட தோட்டத்தில், ஒரு விருந்தைக் கொடுத்தான். அது ஏழுநாட்களுக்கு நீடித்தது. சூசான் கோட்டைப் பட்டணத்தில் இருந்த சிறியோர் பெரியோரான சகல மக்களையும் அதற்கு அழைத்திருந்தான். அந்தத் தோட்டத்தில் வெள்ளை மற்றும் நீல நிறங்களினாலான பஞ்சுநூல் திரைகள் போடப்பட்டிருந்தன. அவை வெள்ளை மென்பட்டினாலும், செம்பட்டினாலும் செய்யப்பட்ட நாடாக்களினால் பளிங்கு தூண்கள் மேலுள்ள வெள்ளி வளையங்களில் கட்டப்பட்டிருந்தன. வெண்ணிறக் கல், பளிங்குக் கல், முத்துச் சிப்பிகள், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்கள், பதிக்கப்பட்ட பளபளப்பான மேடையில், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன. திராட்சை இரசம், பல்வேறு வகையான தங்கக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. அரசனுடைய தாராள மனதின்படியே அரசருக்குரிய திராட்சை இரசம் நிறைவாயிருந்தது. அரசனுடைய கட்டளைப்படியே எல்லா விருந்தாளிகளும் தாங்கள் விரும்பியபடி குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனெனில், அரசன் தனது திராட்சை இரசப் பொறுப்பாளர்கள் எல்லோருக்கும், ஒவ்வொரு மனிதனும் கேட்கும் அளவு திராட்சை இரசத்தைப் பரிமாறும்படி அறிவுறுத்தியிருந்தான்.
அகாஸ்வேருவின் அரச அரண்மனையில் இருந்த பெண்களுக்கு அரசி வஸ்தி, தானும் ஒரு விருந்தைக் கொடுத்தாள்.
10 ஏழாம்நாளில் அகாஸ்வேரு அரசன் திராட்சை மதுவினால் களிப்புற்றிருக்கும் போது, தனக்குப் பணிசெய்த மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகிய ஏழு அதிகாரிகளுக்கும்அரச சபையின் முக்கியப் பிரதானிகளாய் இருந்தார்கள் கட்டளையிட்டு, 11 “அரசி வஸ்தியின் அழகை மக்களுக்கும், உயர்குடி மனிதருக்கும் காண்பிக்கும்படி, அவளுக்கு அரச கிரீடமும் அணிவித்து எனக்குமுன் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். ஏனெனில் அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகுள்ளவளாக இருந்தாள். 12 ஆனால், அந்த ஏவலாளர்கள் அரசனுடைய கட்டளையை அறிவித்தபோது, அரசி வஸ்தி வருவதற்கு மறுத்துவிட்டாள். இதனால் அரசன் சினங்கொண்டான். அவனுடைய கோபம் பற்றியெரிந்தது.
13 சட்டம், நீதி ஆகியவற்றின் விவகாரங்களில், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அரசனின் வழக்கமாயிருந்தது. எனவே அவன் காலங்களை விளங்கிக்கொண்ட ஞானிகளுடன் இதுபற்றி பேசினான். 14 மேலும் அரசன் தனக்கு மிகவும் நெருங்கியவர்களாயிருந்த பெர்சிய, மேதிய நாடுகளின் ஏழு இளவரசர்களான மர்சேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோருடனும் பேசினான். இவர்கள் அரசனிடம் செல்வதற்கு விசேஷ அனுமதியுடையவர்களாகவும், அரசில் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.
15 அகாஸ்வேரு அரசன், “அதிகாரிகள் அவளுக்கு அறிவித்திருந்த அரச கட்டளைக்கு அவள் கீழ்ப்படியவில்லை. ஆகவே சட்டத்தின்படி அரசி வஸ்திக்கு என்ன செய்யப்படவேண்டும்?” என்று கேட்டான்.
16 அப்பொழுது மெமுகான் அரசனுக்கும், உயர்குடி மனிதருக்கும் முன்னிலையில், “அரசி வஸ்தி அரசனுக்கு மட்டுமல்ல, உயர்குடி மனிதருக்கும், அகாஸ்வேரு அரசனுடைய எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்கும் எதிராக அநியாயம் செய்திருக்கிறாள். 17 அரசியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். எனவே அவர்கள் தங்கள் கணவர்களை உதாசீனம் செய்வார்கள். அதோடு, ‘அகாஸ்வேரு அரசன், அரசி வஸ்தியைத் தமக்கு முன்வரும்படி கட்டளையிட்டும் அவள் வரவில்லை’ என்றும் சொல்வார்கள். 18 இந்த நாளிலேயே அரசியினுடைய நடத்தையைக் கேள்விப்பட்டிருக்கிற பெர்சிய, மேதிய நாட்டின் உயர்குலப் பெண்களும் இதேவிதமாகவே அரசனின் உயர்குடி மனிதர் எல்லோருடனும் நடந்துகொள்வார்கள். அவமதிப்புக்கும் எரிச்சலுக்கும் முடிவிருக்காது.
19 “ஆகவே அரசருக்கு விருப்பமானால், வஸ்தி இனியொருபோதும் அரசன் அகாஸ்வேருவின் முன்பாக வரக்கூடாது என்று அரச கட்டளையை அறிவிப்பாராக. அதை மாற்றப்பட முடியாத பெர்சிய, மேதிய சட்டங்களிலும் எழுதி வைப்பாராக. அத்துடன் அவளைவிட மேலான ஒருத்திக்கு அவளுடைய அரச பதவியைக் கொடுப்பாராக. 20 அவ்வாறு அரச கட்டளை அவருடைய பரந்த பிரதேசம் எங்கும் அறிவிக்கப்படும்போது, எல்லா பெண்களும், சிறியோரிலிருந்து பெரியோர்வரை தங்கள் கணவனை மதிப்பார்கள்” என்றான்.
21 அரசனுக்கும், அவனுடைய உயர்குடி மனிதருக்கும் இந்த ஆலோசனை பிரியமாயிருந்தது. எனவே மெமுகான் சொன்ன ஆலோசனையின்படியே அரசன் செய்தான். 22 அப்படியே அவன் தனது அரசின் எல்லாப் பகுதிகளுக்கும், “ஒவ்வொரு ஆணும் தன் குடும்பத்தின்மேல் தலைவனாயிருக்க வேண்டும்” என்று கடிதங்களைத் துரிதமாய் அனுப்பினான். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதற்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுடைய சொந்த மொழியிலும் எழுதி அவர்களுக்கு அறிவித்தான்.

*1:1 எத்தியோப்பியாவரை அல்லது கூஷ் நாடுவரை

1:10 அரச சபையின் முக்கியப் பிரதானிகளாய் இருந்தார்கள்