3
இயேசு மோசேயிலும் பெரியவர்
ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்களான பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கையிடுகிற நமது அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாகிய இயேசுவைப்பற்றி சிந்தியுங்கள். இறைவனுடைய வீட்டில் அனைத்திலும் மோசே உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, இயேசுவும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார். ஒரு வீட்டைக் கட்டுகிறவன், அந்த வீட்டைப்பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவனாய் இருப்பதுபோலவே, இயேசுவும் மோசேயைப்பார்க்கிலும், அதிக மதிப்புக்குரியவராய் இருக்கிறார்; ஏனெனில் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனாலே கட்டப்படுகிறது. அதுபோல, எல்லாவற்றையும் கட்டுகிறவரோ இறைவனே. மோசே இறைவனுடைய வீட்டின் எல்லாவற்றிலும் ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து,*எண். 12:7 இனிவரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகிறவற்றிற்கு சாட்சிகொடுக்கிறவனாகவே இருந்தான். ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டில் உண்மையுள்ள மகனாய் இருக்கிறார். அப்படியிருக்கும்படியே, நாம் நமது மனத்தைரியத்தையும் நாம் பெருமிதங்கொள்ளும் எதிர்பார்ப்பையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், நாமே இறைவனுடைய வீடாயிருப்போம்.
அவிசுவாசத்துக்கு எதிரான எச்சரிக்கை
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி:
“இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில்
கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம்.
அங்கே உங்கள் முன்னோர்கள் நான் செய்தவைகளைக் கண்டிருந்தும்,
நாற்பது ஆண்டுகளாக என் பொறுமையைச் சோதித்தார்கள்.
10 அதனாலேயே நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்;
அவர்களைக்குறித்து, ‘இவர்கள் எப்பொழுதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகிறார்கள்,
இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’
11 ஆகவே, என்னுடைய கோபத்திலே,
‘என்னுடைய இளைப்பாறுதலுக்குள் அவர்கள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை’
என்றும் ஆணையிட்டு அறிவித்தேன்.”சங். 95:7-11
12 ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவரும் ஜீவனுள்ள இறைவனிடமிருந்து வழிவிலகச் செய்கிறதான, விசுவாசமற்ற, பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 13 “இன்று” என்று தற்காலத்தையே குறிப்பிட்டிருப்பதால், இக்காலம் நீடிக்குமளவும் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். அப்பொழுதே பாவத்தின் ஏமாற்றத்தினால், நீங்கள் ஒருவரும் மனக்கடினம் அடையாது இருப்பீர்கள். 14 நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவுவரை பற்றிக்கொண்டால்தான், நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.
15 “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
நீங்கள் கலகம் செய்தபோது நடந்துகொண்டதைப்போல்
உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்”சங். 95:7,8
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
16 இறைவனுடைய குரலைக் கேட்டும், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தவர்கள் யார்? அவர்கள் எல்லோரும், எகிப்திலிருந்து மோசேயினால் வழிநடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்லவா? 17 இறைவன் நாற்பது வருடங்களாக யார்மேல் கோபமாயிருந்தார்? பாவம் செய்தவர்கள்மேல் அல்லவா? அவர்களுடைய உடல்களும் பாலைவனத்தில் விழுந்து கிடந்தனவே? 18 இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாமல் போனவர்களைக் குறித்தல்லவா? 19 ஆகவே அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாகவே அவர்களால் பிரவேசிக்க முடியாமல் போயிற்று என்று நாம் காண்கிறோம்.

*3:5 எண். 12:7

3:11 சங். 95:7-11

3:15 சங். 95:7,8