42
யெகோவாவின் ஊழியர்
1 “இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர்,
என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்;
இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன்,
அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார்.
2 அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார்.
அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார்.
3 அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்,
மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்;
அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார்.
4 பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை
தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார்.
தீவுகள்*பண்டைய உலகில் மக்கள் தொலைவில் இருந்த நாடுகளை தீவுகள் என்று அழைப்பார்கள். அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.”
5 யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது:
அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார்,
அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார்.
அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார்.
அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே:
6 “யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து,
நான் உனது கையைப் பிடித்து,
நான் உன்னைக் காத்து,
நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும்,
பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன்.
7 குருடரின் கண்களைத் திறக்கவும்,
சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும்,
இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன்.
8 “நான் யெகோவா; இதுவே எனது பெயர்!
எனது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்;
எனக்குரிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கமாட்டேன்.
9 இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன,
இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன்.
அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை
நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”
யெகோவாவுக்குத் துதிப்பாடல்
10 கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே,
தீவுகளே, அங்கு வாழும் குடிகளே,
யெகோவாவுக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்,
பூமியின் கடைசிகளில் இருந்து அவருக்குத் துதி பாடுங்கள்.
11 பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்;
கேதாரியர் வாழும் குடியிருப்புகள் மகிழட்டும்.
சேலாவின் மக்கள் மகிழ்ந்து பாடட்டும்;
அவர்கள் மலை உச்சிகளில் இருந்து ஆர்ப்பரிக்கட்டும்.
12 அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும்,
அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும்.
13 யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று,
போர்வீரனைப்போல் தன் வைராக்கியங்கொண்டு எழும்புவார்.
அவர் உரத்த சத்தமாய் போர்க்குரல் எழுப்பி,
பகைவரை வெற்றிகொள்வார்.
14 “நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன்,
நான் அமைதியாய் இருந்து என்னையே அடக்கிக்கொண்டிருந்தேன்.
ஆனால் இப்பொழுது, பிரசவிக்கும் பெண்ணைப்போல் கதறி அழுது,
மூச்சுத் திணறுகிறேன்.
15 நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன்,
அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன்.
ஆறுகளைத் தீவுகளாக மாற்றி,
குளங்களையும் வற்றப்பண்ணுவேன்.
16 நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி,
அவர்களுக்குப் பழக்கமில்லாத பாதைகளில் அழைத்துச்செல்வேன்;
நான் இருளை அவர்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கி,
கரடுமுரடான இடங்களைச் செப்பனிடுவேன்.
நான் செய்யப்போகும் காரியங்கள் இவையே;
நான் அவர்களை நான் கைவிடமாட்டேன்.
17 ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து,
உருவச் சிலைகளைப் பார்த்து, ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று சொல்பவர்கள்
பின்னடைந்து முற்றுமாய் வெட்கப்படுவார்கள்.
குருடும் செவிடுமான இஸ்ரயேல்
18 “செவிடரே, கேளுங்கள்;
குருடரே, கவனித்துப் பாருங்கள்!
19 எனது ஊழியனைவிடக் குருடன் யார்?
நான் அனுப்பும் தூதுவனைவிடச் செவிடன் யார்?
எனக்குத் தன்னை அர்ப்பணித்தவனைப்போல் குருடன் யார்?
யெகோவாவின் ஊழியனைப்போல் குருடன் யார்?
20 நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
உன் காதுகள் திறந்திருந்தும் நீ ஒன்றையும் கேளாதிருக்கிறாய்.”
21 யெகோவா தன் நீதியின் நிமித்தம்
தனது சட்டத்தைச் சிறப்பாகவும்,
மகிமையாகவும் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார்.
22 ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்;
அவர்கள் எல்லோருமே குழிகளில் அகப்பட்டும்,
சிறைச்சாலைகளில் மறைக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
அவர்கள் தம்மை விடுவிப்பாரின்றி
கொள்ளைப் பொருளாகி,
“அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்வாரின்றி
அவர்கள் சூறையாவார்கள்.
23 உங்களில் எவன் இதற்குச் செவிகொடுப்பான்?
எவன் வருங்காலத்தை கவனித்துக் கேட்பான்?
24 யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்?
இஸ்ரயேலை கொள்ளைக்காரருக்கு ஒப்படைத்தது யார்?
யெகோவா அல்லவா இதைச் செய்தார்,
நாமோ அவருக்கு எதிராகப் பாவம் செய்தோமே.
ஏனென்றால் அவர்கள் அவரின் வழிகளைப் பின்பற்றவில்லை,
அவரது சட்டத்திற்குக் கீழ்ப்படியவுமில்லை.
25 ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும்,
போரின் வன்செயலையும் அவர்கள்மேல் ஊற்றினார்.
அது அவர்களை நெருப்புச் சுவாலைகளினால் சூழ்ந்துகொண்டும்,
அதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
அது அவர்களைச் சுட்டெரித்தது,
ஆனால் அதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை.