7
ஆகானின் பாவம்
1 ஆயினும் யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் இஸ்ரயேலர் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். கர்மீயின் மகனாகிய ஆகான் அவைகளில் சிலவற்றை எடுத்ததன் மூலம் யெகோவாவின் கட்டளை மீறப்பட்டது. கர்மீ, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகனாகிய சிம்ரியின் மகன். அதனால் இஸ்ரயேலருக்கு எதிராய் யெகோவாவின் கோபம் மூண்டது.
2 அப்பொழுது யோசுவா சில மனிதரை அப்பிரதேசத்தை உளவுபாருங்கள் என்று எரிகோவிலிருந்து ஆயிபட்டணத்திற்கு அனுப்பினான். ஆயி, பட்டணம் பெத்தேலுக்குக் கிழக்கே பெத் ஆவெனுக்கு அருகேயுள்ளது. அப்படியே அவர்கள் போய் ஆயிபட்டணத்தை உளவுபார்த்தார்கள்.
3 அவர்கள் யோசுவாவிடம் திரும்பிவந்து, “ஆயிபட்டணத்தில் ஒருசில மனிதர் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் எல்லா மக்களும் அதற்கெதிராகப் போகவேண்டிய அவசியமில்லை. எல்லா மக்களையும் கஷ்டப்படுத்தாமல் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் மனிதரை அதைக் கைப்பற்றுவதற்காக அனுப்பும்” என்றார்கள். 4 அப்படியே ஏறக்குறைய மூவாயிரம்பேர் போனார்கள்; ஆனால் ஆயிபட்டணத்தின் மனிதர்களால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். 5 ஆயிபட்டணத்தார், சுமார் முப்பத்தாறுபேரைக் கொன்றுபோட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலரை ஆயி பட்டண வாசலிலிருந்து கல் குவாரிகள்வரை*குவாரிகள்வரை என்பது எபிரெயத்தில் செபாரீம் என்றுள்ளது. துரத்தி, மலைச்சரிவுகளில் அவர்களைத் தாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலரின் இருதயங்கள் சோர்வுற்று தண்ணீரைப்போலாயிற்று.
6 அப்பொழுது யோசுவா தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் முகங்குப்புற விழுந்து, அன்று மாலைவரை அங்கேயே கிடந்தான். அவ்வாறே இஸ்ரயேல் சபைத்தலைவர்களும் செய்து தங்கள் தலைகள்மேல் புழுதியைக் கொட்டிக்கொண்டு கிடந்தார்கள். 7 அப்பொழுது யோசுவா, “ஆண்டவராகிய யெகோவாவே, இந்த மக்களை ஏன் யோர்தானைக் கடக்கப்பண்ணி இங்கு கொண்டுவந்தீர்? எங்களை எமோரியர் கையில் ஒப்புக்கொடுத்து அழிப்பதற்காகவோ? நாங்கள் யோர்தானின் மறுகரையில் குடியிருப்பதில் திருப்தியடைந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! 8 யெகோவாவே, இப்பொழுது இஸ்ரயேலர் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களே! நான் இதற்கு என்ன சொல்வேன்? 9 கானானியரும் அந்த நாட்டின் மற்ற மக்களும் இதைக் கேள்விப்படுவார்கள். அவர்கள் எங்களைச் சுற்றிவளைத்துப் பூமியிலிருந்து எங்கள் பெயரை முழுவதும் அழித்துவிடுவார்களே. அப்பொழுது உம்முடைய மகத்தான பெயருக்காக நீர் என்ன செய்வீர்?” என்றான்.
10 அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “எழுந்திரு; முகங்குப்புற விழுந்துகிடந்து என்ன செய்கிறாய்? 11 இஸ்ரயேலர் பாவம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் கைக்கொள்வதற்காக நான் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள். எனக்கென்று ஒதுக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் களவுசெய்தும், பொய்சொல்லியும் இருக்கிறார்கள். அவற்றைத் தங்கள் சொந்த உடைமைகளோடு சேர்த்துக்கொண்டார்கள். 12 அதனால்தான் இஸ்ரயேலர்கள் தங்களுடைய பகைவர்கள் முன்னால் எதிர்த்துநிற்க முடியாமல், அவர்கள் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஓடினார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் அழிவுக்குத் தாங்களே இடங்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் அழிவுக்கு நியமிக்கப்பட்ட எல்லாவற்றையும் அழித்தாலொழிய நான் இனிமேல் உங்களோடு இருக்கமாட்டேன்.
13 “போ, எல்லா மக்களையும் பரிசுத்தப்படுத்தி. நீ அவர்களிடம், ‘நாளைய தினத்திற்கு உங்களை ஆயத்தப்படுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள். ஏனெனில், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது: இஸ்ரயேலின் யெகோவாவுக்கென்று ஒதுக்கப்பட்டவை இன்னும் உங்கள் மத்தியில் இருக்கின்றன. அதை நீங்கள் அகற்றும்வரை உங்கள் பகைவரை எதிர்த்துநிற்க உங்களால் முடியாது.
14 “ ‘நாளைக்கு காலையில், நீங்கள் ஒவ்வொருவரும் கோத்திரம் கோத்திரமாக யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். அப்பொழுது யெகோவா குறிப்பிடும் கோத்திரத்தார் வம்சம் வம்சமாக முன்னே வரட்டும். அதில் யெகோவா குறிப்பிடும் வம்சம் குடும்பம் குடும்பமாக முன்னே வரவேண்டும். பின்னர் யெகோவா குறிப்பிடும் குடும்பத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக அவர் முன்னே வரவேண்டும். 15 அவர்களில் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களுடன் பிடிக்கப்படுபவன் அவனுக்குரிய எல்லாவற்றுடனும் நெருப்பினால் எரிக்கப்படுவான். ஏனெனில் அவன் யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரயேலில் மிக அவமானத்திற்குரிய செயலைச் செய்துள்ளான்’ என்று சொல்” என்றார்.
16 அவ்வாறே அதிகாலையில் யோசுவா இஸ்ரயேல் மக்களைக் கோத்திரம் கோத்திரமாக யெகோவா முன்பாக வரச்செய்தான். அப்பொழுது யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. 17 பின் யூதாவின் கோத்திரம் வம்சம் வம்சமாக முன்னே வந்தபோது, யெகோவா சேராகியரின் வம்சத்தைத் தெரிந்தெடுத்தார். யோசுவா சேராகியரின் வம்சத்தைக் குடும்பமாக முன்னே வரச்செய்தபோது, சிம்ரியின் குடும்பம் குறிக்கப்பட்டது. 18 யோசுவா சிம்ரியின் குடும்பத்தில் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியே முன் வரச்செய்தபோது, கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். கர்மீ சிம்ரியின் மகன். சிம்ரி யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகன்.
19 அப்பொழுது யோசுவா ஆகானிடம், “என் மகனே, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமைசெலுத்தி அவரைத் துதி, நீ செய்த காரியத்தை ஒளிக்காமல் எனக்கு சொல்” என்றான்.
20 ஆகான் யோசுவாவிற்கு மறுமொழியாக, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நான் பாவம் செய்தது உண்மையே. நான் செய்தது இதுவே: 21 கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒரு அழகான பாபிலோனிய அங்கியையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் நிறையுள்ள ஒரு தங்கப்பாளத்தையும் கண்டேன். அவற்றின்மேல் நான் பேராசைகொண்டு அவற்றை எடுத்துக்கொண்டேன். அவை என்னுடைய கூடார நிலத்திற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளி அடியில் இருக்கிறது” என்றான்.
22 யோசுவா ஏவலாளர்களை அங்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்துக்கு ஓடி அங்கு பார்த்தபோது, அவை அங்கே கூடாரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வெள்ளி அடியில் இருந்தது. 23 அவர்கள் கூடாரத்திற்குள் இருந்து அந்த பொருட்களை எடுத்து யோசுவாவிடத்திலும், எல்லா இஸ்ரயேலர்களிடத்திலும் கொண்டுவந்து, அவைகளை யெகோவாவின் முன்பாகப் பரப்பிவைத்தார்கள்.
24 அப்பொழுது யோசுவாவும், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் சேராகின் மகனாகிய ஆகானை ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அவன் எடுத்திருந்த வெள்ளியும், மேலங்கியும், தங்கப்பாளமும் அவனுடன் எடுத்துச்செல்லப்பட்டன. அவனுடைய மகன்களையும், மகள்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும், செம்மறியாடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுபோனார்கள். 25 யோசுவா ஆகானிடம், “நீ எங்கள்மேல் ஏன் இத்தகைய துன்பத்தைக் கொண்டுவந்தாய்? யெகோவா இன்று உன்மேல் துன்பத்தைக் கொண்டுவருவார்” என்றான்.
இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஆகானையும் அவன் குடும்பத்தாரையும் கல்லால் எறிந்து கொன்றார்கள். அதன்பின் அவர்களை உடமைகள் எல்லாவற்றுடனும் சேர்த்து எரித்தார்கள். 26 அவர்கள் ஆகான்மேல் ஒரு கற்குவியலை எழுப்பினார்கள். அது இன்றும் அங்கு இருக்கின்றது. அதன்பின் யெகோவா தன் கோபத்தை தணித்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை அது ஆகோர் பள்ளத்தாக்கு†ஆகோர் என்பதன் பொருள் இடரின் பள்ளத்தாக்கு என்று அர்த்தம். என்று அழைக்கப்படுகிறது.