10
முத்திரையிட்டவர்கள் யாரெனில்:
 
அகலியாவின் மகனாகிய
ஆளுநன் நெகேமியா.
 
சிதேக்கியா, செராயா, அசரியா, எரேமியா,
பஸ்கூர், அமரியா, மல்கியா,
அத்தூஸ், செபனியா, மல்லூக்,
ஆரீம், மெரெமோத், ஒபதியா,
தானியேல், கிநேதோன், பாரூக்,
மெசுல்லாம், அபியா, மியாமின்,
மாசியா, பில்காய், செமாயா என்கிற
இவர்கள் ஆசாரியர்கள்.
 
அடுத்தது லேவியர்:
அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனான பின்னூய், கத்மியேல்,
10 அவர்களுடன் இணைந்தவர்கள்: செபனியா,
ஒதியா, கெலித்தா, பெலாயா, ஆனான்,
11 மீகா, ரெகோப், அசபியா,
12 சக்கூர், செரெபியா, செபனியா,
13 ஒதியா, பானி, பெனினு என்பவர்கள் ஆவர்.
 
14 மக்களின் தலைவர்கள்:
பாரோஷ், பாகாத் மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15 புன்னி, அஸ்காத், பெபாய்,
16 அதோனியா, பிக்வாய், ஆதீன்,
17 ஆதேர், எசேக்கியா, அசூர்,
18 ஒதியா, ஆசூம், பேஸாய்,
19 ஆரீப் ஆனதோத், நெபாய்,
20 மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21 மெஷெசாபேல், சாதோக், யதுவா,
22 பெலத்தியா, ஆனான், அனாயா,
23 ஓசெயா, அனனியா, அசூபு,
24 அலோகேஸ், பில்கா, சோபேக்,
25 ரேகூம், அசப்னா, மாசெயா,
26 அகியா, கானான், ஆனான்,
27 மல்லூக், ஆரீம், பானா ஆகியோர்.
 
28 “இவர்களைவிட, ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட மீதியாயிருந்த மக்கள்: ஆசாரியர், லேவியர், வாசற்காவலர், பாடகர்கள், ஆலய பணியாட்கள், இறைவனுடைய சட்டத்தின்படி மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபிரித்துக் கொண்டவர்கள் எல்லோரும், அவர்களுடைய மனைவிகள், விளங்கிக்கொள்ளத்தக்க வயதுடைய அவர்களுடைய எல்லா மகன்கள், மகள்கள் ஆகியோர் ஆவர். 29 இவர்கள் எல்லோரும், தங்களுடைய சகோதரரான உயர்குடி மக்களுடன் சேர்ந்து, இறைவனுடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுக்கப்பட்ட இறைவனின் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள். அத்துடன் எங்கள் ஆண்டவராகிய யெகோவாவினுடைய எல்லாக் கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், ஒழுங்குவிதிகளுக்கும் கவனமாய்க் கீழ்ப்படிவதற்கு சாபத்தினாலும், ஆணையினாலும் தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள்.
30 “நாங்கள் எல்லோரும், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுக்கவோ, எங்கள் மகன்களுக்கு அவர்கள் மகள்களை எடுக்கவோமாட்டோம் எனவும் வாக்குறுதி செய்கிறோம்.
31 “அயலிலுள்ள மக்கள் கூட்டங்கள் ஓய்வுநாளில் தங்கள் வியாபாரப் பொருட்களையோ, அல்லது தங்கள் தானியங்களையோ விற்பதற்காகக் கொண்டுவந்தால், அவர்களிடமிருந்து அதை நாங்கள் ஓய்வுநாளிலோ, எந்த பரிசுத்த நாளிலோ வாங்கமாட்டோம். அதைவிட ஏழு வருடங்களுக்கு ஒருமுறை எங்கள் நிலத்தை பண்படுத்தாமல் விட்டுவிடுவதுடன், கொடுத்த கடன்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடுவோம் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம்.
32 “அத்துடன் ஒவ்வொரு வருடமும் எங்கள் இறைவனின் ஆலயத்தின் பணிக்கென, மூன்றில் ஒரு சேக்கல் பணத்தைக்*அதாவது, சுமார் 4 கிராம் வெள்ளி கொடுப்பதற்கான கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 33 அப்பணத்தை இறைசமுகத்தில் வைக்கப்படும் அப்பங்களுக்கும், ஒழுங்கான தானிய காணிக்கைகளுக்கும், தகன காணிக்கைகளுக்கும், ஓய்வுநாளுக்கும், அமாவாசை பண்டிகைகளுக்கும், நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்குமான காணிக்கைகளுக்கும், பரிசுத்த காணிக்கைகளுக்கும், இஸ்ரயேலருக்கான பாவநிவாரண காணிக்கைகளுக்கும் இறைவனின் ஆலய எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்துவதற்குமாகக் கொடுப்போம்.
34 “ஆசாரியர்கள், லேவியர்கள், மக்கள் ஆகிய நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில், எப்பொழுது எங்கள் குடும்பங்கள் விறகைக் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குச் சீட்டுப்போட்டோம். இந்த விறகை மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்குக் கொடுப்போம்.
35 “அதைவிட எங்கள் விளைச்சலின் முதற்பலனையும், எல்லா மரங்களது முதற்பழங்களையும் வருடாவருடம் யெகோவாவினுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.
36 “மேலும், மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி, எங்கள் இறைவனின் ஆலயத்தில் பணிசெய்யும் ஆசாரியர்களிடம், எங்கள் முதற்பேறான மகன்களையும், வளர்ப்பு மிருகங்கள், மாட்டு மந்தை ஆட்டு மந்தைகளின் தலையீற்றுகளையும் கொண்டுவருவோம்.
37 “அத்துடன் எங்கள் இறைவனின் ஆலயத்தின் களஞ்சியத்திற்கு நாங்கள் அரைத்தமாவின் முதற்பங்கையும், எங்கள் முதல் தானிய காணிக்கைகளையும், எல்லா மரங்களின் பழங்கள், புதிய திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பங்கையும் ஆசாரியர்களிடம் கொண்டுவருவோம். நாங்கள் வேலைசெய்யும் பட்டணங்களில் லேவியரே பத்திலொரு பங்கைச் சேர்க்கிறவர்களாகையால், எங்களுடைய விளைச்சலின் பத்திலொரு பங்கை நாங்கள் லேவியரிடம் கொண்டுவருவோம். 38 லேவியர் தசமபாகத்தை வாங்கும்போது, ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியன் ஒருவர் லேவியருடன் இருக்கட்டும்; லேவியர் அதிலே பத்திலொரு பங்கை இறைவனுடைய ஆலயத்தில் இருக்கும் கருவூலத்திற்குக் கொண்டுவரட்டும். 39 லேவியர்கள் உட்பட இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் காணிக்கைகளாகிய தானியங்களையும், புதுத் திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் களஞ்சிய அறைகளுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த அறைகள் பரிசுத்த இடத்தின் பொருட்கள் வைக்கப்படுகிறதும், பணிசெய்யும் ஆசாரியர்கள், வாசற்காவலர், பாடகர் தங்குகிறதுமான அறைகள்.
“எனவே நாங்கள் எங்கள் இறைவனின் ஆலயத்தை அலட்சியம் செய்யமாட்டோம்” என்றார்கள்.

*10:32 அதாவது, சுமார் 4 கிராம் வெள்ளி