13
கானானை வேவு பார்த்தல்
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டை ஆராய்ந்து அறிவதற்கு சில மனிதரை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் அதன் தலைவர்களில் ஒருவனை அனுப்பு” என்றார்.
யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைப் பாரான் பாலைவனத்திலிருந்து அனுப்பினான். அவர்கள் எல்லோரும் இஸ்ரயேலரின் தலைவர்களாயிருந்தார்கள்.
 
அவர்களுடைய பெயர்களாவன:
 
ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா,
சிமியோன் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகன் சாப்பாத்,
யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப்,
இசக்கார் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகன் ஈகால்,
எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து நூனின் மகன் ஓசேயா,
பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகன் பல்த்தி,
10 செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்,
11 யோசேப்பு கோத்திரத்தானான மனாசேயின் கோத்திரத்திலிருந்து சூசியின் மகன் காதி,
12 தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மியேல்,
13 ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாயேலின் மகன் சேத்தூர்,
14 நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேசியின் மகன் நாகபி,
15 காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகன் கூயேல்.
 
16 நாட்டை ஆராய்ந்து அறிவதற்கு மோசே அனுப்பிய மனிதர்களின் பெயர்கள் இவையே. மோசே நூனின் மகன் ஒசேயாவுக்கு யோசுவா என்று பெயரிட்டான்.
 
17 கானானை ஆராய்ந்து அறியும்படிக்கு மோசே அவர்களை அனுப்பியபோது, அவன் அவர்களிடம், “நீங்கள் தெற்கு பிரதேசத்தின் வழியாக மலைநாட்டிற்குப் போங்கள். 18 போய், அந்த நாடு எப்படிப்பட்டதுதென்றும், அங்கே வாழும் மக்கள் பலசாலிகளா, பலவீனர்களா, அதிகமானவர்களா, குறைவானவர்களா என்றும் பாருங்கள். 19 அவர்கள் வாழும் நிலம் எப்படிப்பட்டது? நல்லதோ? கெட்டதோ? அவர்கள் வாழும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை? அரண் அற்றவையோ? அரணுள்ளவையோ? 20 மண் எப்படிப்பட்டது? அது வளமுள்ளதா, வளமற்றதா? மரங்கள் இருக்கின்றனவா, இல்லையா? என்றும் பாருங்கள். அந்த நாட்டின் பழங்களில் சிலவற்றைக் கொண்டுவரவும் முயற்சி செய்யுங்கள்” என்றான். அது திராட்சை முதற்பழம் பழுக்கும் காலமாய் இருந்தது.
21 அவர்கள் போய் சீன் பாலைவனம்தொடங்கி, லேபோ ஆமாத்துக்கு முன்பாக உள்ள ரேகோப் வரையும் நாட்டை ஆராய்ந்து பார்த்தார்கள். 22 அவர்கள் தெற்கு பக்கத்தின் வழியாகப்போய் எப்ரோனுக்கு வந்தார்கள். அங்கே அகீமான், சேசாய், தல்மாய் ஆகிய ஏனாக்கின் சந்ததியினர் வாழ்ந்தார்கள். எப்ரோன் எகிப்திலுள்ள சோவான் கட்டப்படுவதற்கு ஏழு வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டது. 23 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை வந்தடைந்தபோது, ஒரு தனி திராட்சைப்பழக் குலையுடைய ஒரு கிளையை வெட்டினார்கள். அதனுடன் சில மாதுளம் பழங்களையும், அத்திப்பழங்களையும் ஒரு தடியில்போட்டு, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு போனார்கள். 24 அங்கே இஸ்ரயேலர் திராட்சைக் குலையை வெட்டியதனால் அந்த இடம், “எஸ்கோல்*எஸ்கோல் என்றால் கொத்து என்று அர்த்தம்.” பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. 25 அவர்கள் நாற்பது நாட்களுக்கு நாட்டை ஆராய்ந்துபார்த்து பின்பு திரும்பி வந்தார்கள்.
நாட்டைப் பற்றிய அறிக்கை
26 அவர்கள் பாரான் பாலைவனத்திலுள்ள காதேசில் இருந்த மோசே, ஆரோன் மற்றும் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரிடமும் வந்தார்கள். தாம் ஆராய்ந்து அறிந்தவற்றை அவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் சொன்னதோடு, அந்நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களையும் அவர்களுக்குக் காட்டினார்கள். 27 அவர்கள் மோசேயிடம், “நீர் அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போனோம். அது பாலும் தேனும்பாலும் தேனும் என்றால் செழிப்பான என்று அர்த்தம் வழிந்தோடும் நாடு! இதோ அதன் பழங்கள். 28 ஆனால் அங்குள்ள மக்களோ மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அத்துடன் நகரங்களும் அரணுள்ளவையும், விசாலமானவையுமாய் இருக்கின்றன. அங்கே ஏனாக்கின் சந்ததிகளைக்கூட நாங்கள் கண்டோம். 29 அமலேக்கியர் நாட்டின் தெற்கு பகுதியில் வாழ்கிறார்கள். ஏத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கிறார்கள். கடல் அருகேயும், யோர்தான் நதியோரம் கானானியர் வாழ்கிறார்கள்” என்று விவரமாய்ச் சொன்னார்கள்.
30 அப்பொழுது காலேப், மக்களை மோசேக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவர்களிடம், “நாம் இப்பொழுதே போய் அந்நாட்டை நமக்கு உடைமையாக்கிக் கொள்ளவேண்டும். நிச்சயமாக நாம் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்” என்றான்.
31 ஆனால் காலேப்புடன் போன மனிதர்களோ, “அந்த மக்களை எதிர்க்க நம்மால் முடியாது. ஏனெனில், அவர்கள் எங்களைப்பார்க்கிலும் பலசாலிகள்” என்றார்கள். 32 அவர்கள் தாம் ஆராய்ந்து அறிந்து வந்த நாட்டைப்பற்றி இஸ்ரயேலர் மத்தியில் பிழையான செய்தியைப் பரப்பினார்கள். நாங்கள் ஆராய்ந்து அறிந்து வந்த நாடு அங்கு வாழ்கிறவர்களை அழித்தொழிக்கும் நாடு. நாங்கள் அங்கு கண்ட மக்களும் உருவத்தில் பெரியவர்கள். 33 அரக்கர்களின் வழிவந்த ஏனாக்கின் சந்ததிகளான அரக்கர்களையும் அங்கு கண்டோம். நாங்கள் எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன்னால் வெட்டுக்கிளிகளைப்போல் காணப்பட்டோம். அவர்களுடைய பார்வையிலும் நாங்கள் அப்படியே காணப்பட்டோம் என்றார்கள்.

*13:24 எஸ்கோல் என்றால் கொத்து என்று அர்த்தம்.

13:27 பாலும் தேனும் என்றால் செழிப்பான என்று அர்த்தம்