29
எக்காளங்களின் பண்டிகை
1 “ ‘ஏழாம் மாதம் முதலாம்தேதி பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு எக்காளங்களை ஊதும் நாளாயிருக்கிறது.*எபிரெய நாட்காட்டியின் ஏழாவது மாதம் செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை ஒத்திருக்கிறது. இது எபிரெய ஆண்டின் மிகவும் புனிதமான மாதமாகும். 2 அன்றைய நாளில் ஒரு இளங்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 3 காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும். 4 அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும். 5 உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். 6 இவை குறிப்பிடப்பட்ட மாதாந்திர தகன காணிக்கையுடனும், அன்றாட தகன காணிக்கையுடனும், அவற்றிற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் இவைகளையும் செலுத்தப்பட வேண்டும். இவை மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும்.
பாவநிவிர்த்தி நாள்
7 “ ‘இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் நீங்கள் உங்களை தாழ்மைப்படுத்தி உபவாசிக்கவேண்டும். எந்த வேலையையும் செய்யவேண்டாம். 8 ஒரு இளம்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 9 காளையுடன் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே கொண்டுவர வேண்டும். 10 ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும். 11 பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதைப் பாவநிவிர்த்திக்கான பாவநிவாரண காணிக்கையுடனும், வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவைகளுக்குரிய பானகாணிக்கைகளோடும் இவைகளையும் செலுத்தவேண்டும்.
கூடாரங்களின் பண்டிகை
12 “ ‘ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியும் ஒரு பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்நாளில் வழக்கமான வேலை எதையுமே செய்யக்கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும். 13 அந்நாளில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். பதின்மூன்று இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் தகன காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 14 அந்த பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுடனும், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களில் ஒவ்வொன்றுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும். 15 பதினான்கு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்தில் ஒரு எப்பா அளவான மாவை அவ்விதமே செலுத்தவேண்டும். 16 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் கூடுதலாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
17 “ ‘இரண்டாம் நாளில் பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாயிருக்க வேண்டும். 18 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். 19 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவற்றின் பானகாணிக்கைகளுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 “ ‘மூன்றாம் நாளில் பதினோரு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 21 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். 22 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
23 “ ‘நான்காம் நாளில் பத்து காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 24 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். 25 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
26 “ ‘ஐந்தாம் நாளில் ஒன்பது காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை குறைபாடற்றவையாயிருக்க வேண்டும். 27 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். 28 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
29 “ ‘ஆறாம்நாளில் எட்டுக் காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 30 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். 31 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
32 “ ‘ஏழாம்நாளில் ஏழு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 33 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். 34 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
35 “ ‘எட்டாம் நாளில் சபையைக் கூட்டுங்கள். அதில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். 36 யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையைக் கொண்டுவாருங்கள். ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவற்றை தகன காணிக்கையாக கொண்டுவாருங்கள். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும். 37 காளையுடனும், செம்மறியாட்டுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். 38 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
39 “ ‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’ ” என்றார்.
40 யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே இஸ்ரயேலருக்குச் சொன்னான்.
*29:1 எபிரெய நாட்காட்டியின் ஏழாவது மாதம் செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை ஒத்திருக்கிறது. இது எபிரெய ஆண்டின் மிகவும் புனிதமான மாதமாகும்.