சங்கீதம் 2
1 நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன?
மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
2 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்,
ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும்,
அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது:
3 “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து,
அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”
4 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்;
யெகோவா அவர்களை இகழ்கிறார்.
5 அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து,
தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது:
6 “நான் எனது அரசனை
என் பரிசுத்த மலையாகிய சீயோனில்*அல்லது எருசலேம் பட்டணம் அமர்த்தியிருக்கிறேன்.”
7 நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்:
அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்.
8 என்னிடம் கேளும்,
நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன்,
பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன்.
9 நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்;
மண்பாண்டத்தை உடைப்பதுபோல்,
நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”
10 ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்;
பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.
11 பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள்,
நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.
12 இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்;
நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்;
ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும்.
அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.