7
முத்திரையிடப்பட்ட 1,44,000 பேர்கள்
1 பின்பு நான்கு இறைத்தூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்க கண்டேன். அவர்கள் நிலத்தையும், கடலையும், மரங்களையும் சேதப்படுத்தாமலும் பூமியின் நான்கு வகை காற்றை வீசாமலிருக்கவும் செய்தார்கள். 2 வேறொரு இறைத்தூதன், கிழக்கிலிருந்து வருவதை நான் கண்டேன். அவன் ஜீவனுள்ள இறைவனுடைய முத்திரையை வைத்துக்கொண்டிருந்தான். அவன் நிலத்தையும், கடலையும் சேதப்படுத்துவதற்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்த, நான்கு தூதர்களையும் உரத்த குரலில் கூப்பிட்டு: 3 “நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளின்மேல், நாங்கள் முத்திரையிடும் வரைக்கும், நிலத்தையோ கடலையோ மரங்களையோ அழிக்கவேண்டாம்” என்றான். 4 அப்பொழுது முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன்: இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, 1,44,000 பேர்.
5 யூதா கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
ரூபன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
காத் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
6 ஆசேர் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
நப்தலி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
மனாசே கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
7 சிமியோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
லேவி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
இசக்கார் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
8 செபுலோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
யோசேப்பு கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
பென்யமீன் கோத்திரத்திலிருந்து, 12,000 பேரும் முத்திரையிடப்பட்டார்கள்.
வெள்ளை அங்கி உடுத்தியவர்கள்
9 இதற்குப் பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அங்கே எனக்கு முன்பாக, ஒரு பெரும் திரளான மக்கள் கூட்டம் நின்றது. அவர்களை எண்ணிக் கணக்கிட, யாராலும் முடியாதிருந்தது. எல்லா இடங்களிலிருந்தும், பின்னணியிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும், ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும் வந்த அவர்கள், அரியணைக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை அங்கி உடுத்திக்கொண்டு, தங்களுடைய கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும் நின்றார்கள். 10 அவர்கள் உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னதாவது:
“இரட்சிப்பின் மகிமை அரியணையில் அமர்ந்திருக்கும்
எங்கள் இறைவனுக்கும்,
ஆட்டுக்குட்டியானவருக்குமே உரியது.”
11 அப்பொழுது அரியணையைச் சுற்றியும், சபைத்தலைவர்களைச் சுற்றியும், நான்கு உயிரினங்களைச் சுற்றியும், நின்றுகொண்டிருந்த எல்லா இறைத்தூதர்களும், அரியணைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, இறைவனை வழிபட்டார்கள். 12 அவர்கள் சொன்னதாவது:
“ஆமென்!
துதியும், மகிமையும்,
ஞானமும், நன்றியும், கனமும்,
வல்லமையும், பெலமும்
எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக.
ஆமென்!”
13 அப்பொழுது, அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து, “வெள்ளை உடை உடுத்தியிருக்கிறார்களே, இவர்கள் யார்? இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.
14 அதற்கு நான், “ஐயா, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.
அப்பொழுது அந்த மூப்பன் என்னிடம், “கொடிய உபத்திரவத்தின் மூலமாக வந்தவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவி, வெண்மையாக்கியவர்கள்.” 15 அதனாலேயே,
“இவர்கள் இறைவனுடைய அரியணைக்கு முன்னிருந்து,
அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள்;
அரியணையில் அமர்ந்திருக்கிற அவர்,
அவர்களுடன் குடியிருந்து, பாதுகாப்பாய் இருப்பார்.
16 அவர்கள் இனியொருபோதும், பசியாயிருக்கமாட்டார்கள்;
இனியொருபோதும், அவர்கள் தாகமாயிருக்கவுமாட்டார்கள்.
வெயிலோ, எந்தக் கடுமையான வெப்பமோ,
அவர்களைத் தாக்காது.*ஏசா. 49:10
17 ஏனெனில், அரியணையின் நடுவிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே
அவர்களின் மேய்ப்பராயிருக்கிறார்;
‘அவர் அவர்களை வாழ்வுதரும் தண்ணீர் ஊற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார்.’†ஏசா. 49:10
‘இறைவன் அவர்களுடைய கண்களிலிருந்து
கண்ணீர் எல்லாவற்றையும் துடைத்துவிடுவார் என்றான்.’ ”‡ஏசா. 25:8