பிரசங்கி
ஆசிரியர்
இந்த புத்தகம் நேராக ஆசிரியரைக் குறிப்பிடவில்லை. தன்னை பிரசங்கி என்று 1:1 ல் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தன்னை தாவீதின் குமாரனான எருசலேமின் இராஜாவாகிய பிரசங்கி என்று சொல்லுகிறான். எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் ஞானமடைந்து அனேக நீதிமொழிகளை சேர்த்தேன் என்கிறான் (பிரசங்கி 1:1, 16; 12:9). இஸ்ரவேலை ஆட்சி செய்ய தாவீதுக்கு பிறகு சிங்காசனத்தில் சாலோமோன் உட்கார்ந்தான். (1:12) சாலோமோன் தான் ஆசிரியர் என்று சில காரியங்கள் இந்த புத்தகம் ஆதாரம் தருகிறது. சாலோமோன் மரணத்திற்கு பிறகு சில பகுதிகள் வேறு சிலரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 940 க்கும் 931 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இந்த புத்தகம் சாலோமோனின் கடைசி நாட்களில், எருசலேமில் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் மக்களுக்கும், வேதம் வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த புத்தகம் ஒரு சரியான எச்சரிப்பை நமக்கு தருகிறது. நோக்கமில்லாமல், தேவபயமில்லாமல் வாழ்வது, மாயையையும், காற்றை பின்தொடர்வதுபோல் இருக்கிறது. நாம் இன்பத்தை, பணத்தை, ஞானத்தை, புதிய காரியங்களை ஆராய்வதில், வாழ்ந்தாலும், நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டு. கடைசியில் நாம் மாயையில் வாழ்ந்தோம் என்று எண்ணமே நமக்கு தோன்றுகிறது. நாம் தேவனுக்கு வாழும்போதுதான், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.
மையக் கருத்து
தேவனைத் தவிர எல்லாம் மாயையே.
பொருளடக்கம்
1. முன்னுரை — 1:1-11
2. வாழ்க்கையின் பலபாகங்களும் மாயைதான் — 1:12-5:7
3 தேவனுக்கு பயந்து நடக்கவேண்டும். — 5:8-12:8
4 காரியத்தின் முடிவு — 12:9-14
அத்தியாயம் 1
எல்லாம் மாயை
1 தாவீதின் மகனும் எருசலேமின் அரசாண்ட ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள்.
2 “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று” பிரசங்கி சொல்லுகிறான்.
3 சூரியனுக்குக் கீழே மனிதன் படுகிற எல்லாப் பாடுகளினாலும் அவனுக்குப் பலன் என்ன?
4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
5 சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் விரைகிறது.
6 காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
7 எல்லா நதிகளும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது; தாங்கள் தோன்றிய இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.
8 எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனிதர்களால் சொல்லமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாவதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
9 முன்பு இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன்பு செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமில்லை.
10 இதைப் பார், இது புதியது என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள ஆரம்பகாலங்களிலும் இருந்ததே.
11 முன்பு இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலும் இருப்பவர்களுக்கு ஞாபகம் இருக்காது.
ஞானமும் மாயையே
12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக இருந்தேன்.
13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாக விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; மனுமக்கள் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படி தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், காற்றை பிடிக்கிறதைப் போல் இருக்கிறது.
15 கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது.
16 “இதோ, நான் பெரியவனாக இருந்து, எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஞானமடைந்து தேறினேன்; என்னுடைய மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது,” என்று நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.
17 ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன்.
18 அதிக ஞானத்திலே அதிக சலிப்பு உண்டு;
அறிவுபெருத்தவன் நோய்பெருத்தவன்.