அனைவரையும் நேசியுங்கள்
௧ அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமைமிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள். ௨ உதாரணமாக, ஒருவன் சிறந்த ஆடைகளையும் தங்க மோதிரங்களையும் அணிந்தவனாக உங்களிடம் வரலாம். இன்னொருவன் ஏழையாக பழைய அழுக்கான ஆடைகளை அணிந்தவனாக வரலாம். ௩ நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள். ௪ இப்படிச் செய்யும்போது சிலர் மற்றவர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் என்பது போல உங்களில் சிலரை நடத்துகிறீர்கள். அப்போது தகாத நோக்கங்கள் உள்ள நீதிபதியாக நீங்கள் ஆகிறீர்கள்.
௫ அன்பான சகோதர சகோதரிகளே, உலகம் ஏழையாகப் பார்க்கிற ஒருவனை விசுவாசத்தில் செல்வந்தனாக தேவன் தேர்ந்தெடுத்தார் என்பது உண்மையில்லையா? தான் நேசிப்பவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த இராஜ்யத்தை அந்த ஏழை மக்கள் பெறுவார்கள். ௬ ஆனால் நீங்கள் ஏழைகளை மதிக்கவில்லை என்பதைப் புலப்படுத்தினீர்கள். செல்வந்தர்களே உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? நீதிமன்றத்திற்கு உங்களை இழுப்பது அவர்கள் அல்லவா? ௭ நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா?
௮ ஒரு சட்டம் மற்ற சட்டங்களை ஆளுகின்றது. “நீ உன்னை நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக”லேவி. 19:18-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்ட சட்டம்தான் மிகச் சிறந்த சட்டமாகும். நீ இச்சட்டத்தின்படி செய்தால் பிறகு நீ சரியானதைச் செய்கிறாய். ௯ ஆனால் நீ ஒருவனை மற்றவர்களை விட முக்கியமாக நடத்தினால் பிறகு நீ பாவம் செய்தவன் ஆகிறாய். நீ மிக உயர்ந்த தேவனின் சட்டத்தை உடைத்த குற்றவாளி ஆகிறாய்.
௧௦ ஒருவன் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரே ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அவன் அனைத்துக் கட்டளைகளையும் உடைத்தவனாகிறான். ௧௧ “விபசாரம் செய்யாமல் இருப்பாயாக”யாத். 20:14; உபா. 5:18-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று தேவன் கூறினார். அதோடு “கொலை செய்யாமல் இருப்பாயாக”யாத் 20:13; உபா. 5:17-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்றும் கூறியுள்ளார். எனவே, நீ விபசாரம் செய்யாமல் இருந்து, கொலை மட்டும் செய்வாயானால், பிறகு நீ சட்டத்தில் கட்டளைகளை உடைத்தவன் ஆகிறாய்.
௧௨ உங்களை விடுவிக்கிற சட்டத்தால் நியாயந்தீர்க்கப்பட்ட மக்களைப்போல நீங்கள் பேசவும் வாழவும் வேண்டும். ௧௩ மற்ற மனிதர்கள் மீது கருணை காட்ட ஒருவன் தவறினால், அவனை நியாயந்தீர்க்கும்போது தேவன் அவன் மீது கருணை காட்டத் தவறுவார். மனிதர்கள் மீது கருணை காட்டுகிறவன் நியாயத்தீர்ப்பு நாளில் பயமின்றி நிற்க முடியும்.
விசுவாசமும் நற்செயல்களும்
௧௪ எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? ௧௫ கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். ௧௬ நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. ௧௭ இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.
௧௮ ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம். ௧௯ ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? நல்லது. ஆனால் பிசாசுகள் கூட அதை நம்பி பயத்தால் நடுங்குகின்றன.
௨௦ நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா? ௨௧ தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தில் காணிக்கையாக்கியபோது செயல்கள் மூலம் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான். ௨௨ இதனால் நீ ஆபிரகாமின் விசுவாசமும் அவனது செயலும் ஒருங்கே செயல்பட்டதைக் காண இயலும். அவனது செயல்கள் அவனது விசுவாசத்தை முழுமையாக்கியது. ௨௩ எனவே “ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது”ஆதி. 15:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் “தேவனின் நண்பன்” என்று அவன் அழைக்கப்பட்டான். ௨௪ எனவே ஒருவன் வெறும் விசுவாசத்தால் மட்டுமல்ல, தான் செய்கிற காரியங்களால் நீதிமானாக்கப்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்கமுடியும்.
௨௫ ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள்.*அவள் … உதவினாள் ராகாப்பின் சரித்திரம் யோசுவா 2:1-21.
௨௬ எனவேதான் ஆவி இல்லாத ஓர் சரீரம் இறந்ததாயிருக்கிறதைப்போலச் செயல்கள் அற்ற விசுவாசம் கூட இறந்ததாயிருக்கிறது.

௨:௮: லேவி. 19:18-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

௨:௧௧: யாத். 20:14; உபா. 5:18-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

௨:௧௧: யாத் 20:13; உபா. 5:17-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

௨:௨௩: ஆதி. 15:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

*௨:௨௫: அவள் … உதவினாள் ராகாப்பின் சரித்திரம் யோசுவா 2:1-21.