அத்தியாயம் 24
1 இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி, 2 தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது. 3 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு,
சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது,
5 யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே,
உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
6 அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும்,
நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும்,
யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும்,
தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.
7 அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்;
அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்;
அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்;
அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும்.
8 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு;
அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று,
அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி,
அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.
9 சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களை எழுப்புகிறவன் யார்?
உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்,
உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்”
என்றான். 10 அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: “என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். 11 ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி யெகோவா தடுத்தார் என்றான். 12 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் யெகோவாவின் கட்டளையை மீறக்கூடாது; யெகோவா சொல்வதையே சொல்வேன் என்று, 13 நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா? 14 இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி.
பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு
15 அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு,
உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து,
உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு,
தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல;
அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல;
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்,
ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;
அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி,
சேத் சந்ததி*கலகக்காரரின் தலைகளை எல்லோரையும் நிர்மூலமாக்கும்.
18 ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்;
இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
19 யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்;
பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார்”
என்றான்.
பிலேயாமின் கடைசி தேவ வாக்கு
20 மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து,
தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
21 அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து,
தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது;
உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
22 ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்;
அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான்.
23 பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்; 24 கித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான்” என்றான். 25 பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான்.