அத்தியாயம் 25
இஸ்ரவேல் மோவாபியப் பெண்களோடு விபசாரம் செய்தல்
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் தங்களுடைய தெய்வங்களுக்கு செலுத்திய பலிகளை விருந்துண்ணும்படி மக்களை அழைத்தார்கள்; மக்கள் போய் சாப்பிட்டு, அவர்கள் தெய்வங்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவுடைய கோபம் வந்தது. யெகோவா மோசேயை நோக்கி: “யெகோவாவுடைய கடுமையான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ மக்களின் தலைவர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரிய வெளிச்சத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில்*எல்லாரும் பார்க்கும்படி தூக்கில்போடும்படி செய் என்றார். அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: “நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்களுடைய மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்றான். அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரத்தின்வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் மக்களில் ஒருவன் ஒரு மீதியானிய பெண்ணைத் தன்னுடைய சகோதரர்களிடம் அழைத்துக்கொண்டுவந்தான். அதை ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் பார்த்தபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்னுடைய கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் விபசாரம்செய்யும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த பெண்ணுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி வெளியே போகுமளவுக்கு அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்களில் உண்டான வாதை நின்றுபோயிற்று. அந்த வாதையால் இறந்தவர்கள் 24,000 பேர். 10 யெகோவா மோசேயை நோக்கி: 11 “நான் என்னுடைய எரிச்சலில் இஸ்ரவேல் மக்களை அழிக்காதபடி, ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், எனக்காக அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் மக்கள்மேல் உண்டான என்னுடைய கடுங்கோபத்தை திருப்பினான். 12 ஆகையால், “இதோ, அவனுக்கு என்னுடைய சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். 13 அவன் தன்னுடைய தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நிரந்தர ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல்” என்றார். 14 மீதியானிய பெண்ணோடு குத்தப்பட்டு இறந்த இஸ்ரவேல் மனிதனுடைய பெயர் சிம்ரி; அவன் சல்லூவின் மகனும், சிமியோனியர்களின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவாகவும் இருந்தான். 15 குத்தப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி, அவள் சூரின் மகள், அவன் மீதியானியர்களுடைய தகப்பன் வம்சத்தாரான மக்களுக்குத் தலைவனாக இருந்தான். 16 யெகோவா மோசேயை நோக்கி: 17 “மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள். 18 பேயோரின் காரியத்திலும் பேயோரினால் வாதை உண்டான நாளிலே குத்தப்பட்ட அவர்களுடைய சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய மகளின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகங்களினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே” என்றார்.

*அத்தியாயம் 25:4 எல்லாரும் பார்க்கும்படி